திருமுறை 1 · 1.039 · 11

திருவேட்களம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
வேட்களம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்திலங்கமந்த முழவம் இயம்ப மலைமகள் காணநின் றாடிச்சந்த மிலங்கு நகுதலை கங்கை தண்மதி யம்மய லேததும்பவெந்தவெண் ணீறுமெய் பூசும் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.
உரை

சிவபிரான்‌, உலகங்களைப்‌ படைப்பவரும்‌, இறுதி செய்பவருமாகிய தலைமைத்‌ தன்மை உடையவர்‌. பிறரால்‌ பொறுத்தற்கரிய தீ அவர்‌ கையின்கண்‌ விளங்குகிறது. மலைமகளாகிய பார்வதிதேவி காணுமாறு, மெல்லென ஒலிக்கும்‌ முழவம்‌ இயம்பத்‌ திருநடம்‌ புரிகிறார்‌. அழகு விளங்கும்‌ கபால மாலை, கங்கை, குளிர்ந்த பிறை ஆகியன அவருடைய தலையில்‌ விளங்குகின்றன. அவர்‌ வெந்த வெண்ணீற்றைத்‌ தம்‌ மெய்யில்‌ பூசியுள்ளார்‌. இத்தகைய பெருமான்‌ திருவேட்கள நன்னகரில்‌ எழுந்தருளியுள்ளார்‌.

2

சடைதனைத் தாழ்தலும் ஏறமு டித்துச் சங்கவெண் தோடு சரிந்திலங்கப்புடைதனிற் பாரிடஞ் சூழப் போதரு மாறிவர் போல்வார்உடைதனில் நால்விரற் கோவண ஆடை உண்பதும் ஊரிடு பிச்சைவெள்ளைவிடைதனை யூர்தி நயந்தார் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளைவிடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.
உரை

திருவேட்கள நன்னகரில்‌ எழுந்தருளியுள்ள இறைவனாகிய சிவபிரான்‌, தாழ்ந்து தொங்கும்‌ சடைமுடியை எடுத்துக்‌ கட்டியுள்ளார்‌. சங்கால்‌ இயன்ற வெள்ளிய தோடு காதில்‌ சரிந்து விளங்குகிறது. அவர்‌, அருகில்‌ பூதங்கள்‌ சூழ்ந்து வரப்‌ போதருகின்றார்‌. அவருடைய உடையோ, நால்விரல்‌ அகலம்‌ உடைய கோவண ஆடையாகும்‌. அவர்‌ உண்பதோ ஊரார்‌ இடும்‌ பிச்சையாகும்‌. அவர்‌ விரும்பி ஏறும்‌ ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும்‌.

3

பூதமும் பல்கண மும்புடை சூழப் பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்சீதமும் வெம்மையு மாகிச் சீரொடு நின்றவெஞ் செல்வர்ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை உள்ளங் கலந்திசை யாலெழுந்தவேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்தவேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.
உரை

திருவேட்கள நன்னகர்‌, கடல்நீர்ப்‌ பெருக்கும்‌ சோலையும்‌ சூழ்ந்தது. அந்தணர்கள்‌ மனம்‌ கலந்து பாடும்‌ இசையால்‌ எழுந்த வேத ஒலியும்‌, அவர்கள்‌ இயற்றும்‌ வேள்விகளும்‌ அந்த நகரில்‌ இடையறாது நிகழும்‌ இயல்பின. அந்தத்‌ திருவேட்கள நன்னகர்‌ இறைவனான சிவபிரான்‌, பூதங்களும்‌ சிவகணங்களும்‌ அருகில்‌ சூழ விளங்குகின்றார்‌. விண்ணும்‌ மண்ணும்‌ அவர்பால்‌ பொருந்தத்‌ தண்மையும்‌ வெம்மையும்‌ ஆகி, அந்தப்‌ பெருமான்‌ புகழோடு விளங்கும்‌ எம்முடைய செல்வராவார்‌.

4

அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம் அமையவெண் கோவணத் தோடசைத்துவரைபுல்கு மார்பிலொராமை வாங்கி யணிந்த வர்தாந்1திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந் தேனலங் கானலில் வண்டுபண்செய்யவிரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னக ராரே.பாடம் : 1அணிந்தவரதர்
சொற்பிரிப்பு
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து,வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய,விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.
உரை

சிவபிரான்‌, இடையில்‌ பொருந்தியதும்‌, ஐந்து தலைகளை உடையதுமான ஆடும்‌ பாம்பை, வெண்மையான கோவணத்தோடும்‌ பொருந்தக்‌ கட்டியுள்ளார்‌. அவர்‌, மலை போன்று அகன்ற மார்பின்௧ண்‌ ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய்‌ விளங்குகிறார்‌. திருவேட்கள நன்னகர்‌ அலைகளை உடைய தெளிந்த கடல்நீர்‌ பெருகிவரும்‌ உப்பங்கழிகளை உடையது. அது, வண்டுகள்‌ இசைபாடும்‌ தேன்பொருந்திய கடற்கரைச்‌ சோலைகளை உடையது. மேலும்‌ அது, மணம்‌ கமழும்‌ பைம்பொழில்கள்‌ சூழ்ந்தது. சிவபிரான்‌, இவ்வளவு சிறப்புக்கள்‌ பொருந்திய திருவேட்கள நன்னகரில்‌ எழுந்தருளியுள்ளார்‌.

5

பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் பால்புரை நீறுவெண் ணூல்கிடந்தபெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதி லெய்த பெருமான்கண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கட் கண்ணியர் விண்ணவர் கைதொழு தேத்தும்வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்தபெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.
உரை

திருவேட்கன நன்னகருடைய இறைவனான சிவபிரான்‌, இசைபாடும்‌ வண்டுகள்‌ சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவர்‌. அவர்‌, பால்‌ போன்ற வெண்ணீறு பூசியவர்‌. முப்புரிநூலும்‌ உமையம்மையையும்‌ பொருந்திய மார்பினர்‌. அவர்‌, பகைவர்களாகிய அசுரர்களின்‌ மும்மதில்களையும்‌ எய்து அழித்த தலைவர்‌. அவர்‌ நெற்றிக்‌ கண்ணராகவும்‌, பிறைமதிக்‌ கண்ணியராகவும்‌, விண்ணவர்‌ கைதொழுது ஏத்தும்‌ வெண்மையான பெரிய விடைமீது ஊர்ந்து வருபவராயும்‌ விளங்கும்‌ தலைவர்‌ ஆவார்‌.

6

கறிவளர் குன்றம் எடுத்தவன் காதற் கண்கவ ரைங்கணை யோனுடலம்பொறிவளர் ஆரழ லுண்ணப் பொங்கியபூத புராணர்மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மானுரி தோலுடையாடைவெறிவளர் கொன்றையந் தாரார் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்பொறி வளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்,மறி வளர் அம் கையர், மங்கை ஒரு பங்கர், மைஞ்ஞிறமான் உரி தோல் உடை ஆடைவெறி வளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன்நகராரே.
உரை

திருவேட்கள நன்னகருடைய இறைவரான சிவபிரான்‌ மான்‌ ஏந்திய கரத்தினர்‌. மங்கை பங்கர்‌. கருநிறமுடைய யானையின்‌ தோலை உரித்து ஆடையாகப்‌ போர்த்தவர்‌. மணம்‌ கமழும்‌ கொன்றை மாலையை அணிந்தவர்‌. இவ்வகைப்பட்ட சிவபிரான்‌, மிளகுக்‌ கொடிகள்‌ வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக்‌ குடையாக எடுத்த திருமாலுடைய அன்பு மகனும்‌, அழகு மிக்கவனும்‌, ஐங்கணைகளை உடையவனுமாகிய மன்மதனுடைய உடல்‌ பொறி பரக்கும்‌ அரிய அழல்‌ உண்ணும்படி சினந்த பழையோர்‌ ஆவார்‌.

7

மண்பொடிக் கொண்டெரித் தோர்சுடலை மாமலை வேந்தன் மகள்மகிழநுண்பொடிச் சேரநின் றாடி நொய்யன செய்யல் உகந்தார்கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக் காலனைக் காலாற் கடிந்துகந்தார்வெண்பொடிச் சேர்திரு மார்பர் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.
உரை

திருவேட்கள நன்னகரின்‌ இறைவரான சிவபிரான்‌, மண்ணும்‌ பொடியாகுமாறு உலகை அழித்தார்‌. அவர்‌ ஒப்பற்ற அந்தச்‌ சுடலையில்‌ சிறப்புத்‌ தன்மையை உடைய இமவான்‌ மகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, சுடலையின்‌ நுண்‌ பொடிகள்‌ தம்‌ உடலில்‌ படிய நின்று ஆடினார்‌. அந்தத்‌ திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள்‌ செய்ய அவர்‌ உகந்தார்‌. அந்தச்‌ சிவபிரான்‌, கண்‌ பொடிந்து போன வெள்ளிய தலையோட்டினைக்‌ கையில்‌ ஏந்தியவர்‌. காலனைக்‌ காலால்‌ கடிந்து உகந்தவர்‌. வெள்ளிய திருநீறு சேர்ந்த அழகிய மார்பினர்‌ ஆவார்‌.

8

ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் அமுத மமரர்க் கருளிச்சூழ்தரு பாம்பரை யார்த்துச் சூலமோ டொண்மழு வேந்தித்தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித் தண்மதி யம்மய லேததும்பவீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆர் அமுதம் அமரர்க்கு அருளி,சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,தாழ் தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்பவீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.
உரை

திருவேட்கள நன்னகருடைய இறைவனான சிவபிரான்‌, ஆழமான பெரிய கடலிடத்தில்‌ தோன்றிய அமுதத்தைத்‌ தேவருக்கு அளித்தருளினார்‌. நஞ்சினைத்‌ தாம்‌ உண்டார்‌. அவர்‌, சுற்றிக்‌ கொள்ளும்‌ இயல்பினதாய பாம்பினை இடையில்‌ கட்டிக்‌ கொண்டார்‌. அவர்‌ சூலம்‌, ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக்‌ கையில்‌ ஏந்தியவர்‌. உலகையே அழிக்கும்‌ ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத்‌ தம்பிறை அயலில்‌ விளங்கத்‌ தலையிலிருந்து தொங்கும்‌ மெல்லிய சடை ஒன்றினை எடுத்து, அதன்கண்‌ சுவறுமாறு செய்தவரும்‌ ஆவார்‌.

9

திருவொளி காணிய பேதுறு கின்ற திசைமுக னுந்திசை மேலளந்தகருவரை யேந்திய மாலுங் கைதொழ நின்றது மல்லால்அருவரை யொல்க எடுத்த அரக்கன் ஆடெழிற் றோள்க ளாழத்தழுந்தவெருவுற வூன்றிய பெம்மான் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசை மேல் அளந்தகருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்தவெரு உற ஊன்றிய பெம்மான்— வேட்கள நன்நகராரே.
உரை

அழகிய பேரொளிப்‌ பிழம்பைக்‌ காணும்‌ பொருட்டு மயங்கிய நான்முகனும்‌, எண்‌ திசைகளையும்‌ அளந்தவனாய்ப்‌ பெரிதான கோவர்த்தன மலையைக்‌ குடையாக ஏந்திய திருமாலும்‌ சிவபிரானுடைய அடிமுடி காண இயலாது கைதொழுது நின்றனர்‌. அத்தகைய திருவேட்கள நன்னகர்‌ உறை இறைவனான சிவபிரான்‌, கயிலை மலை தளருமாறு, அதனை எடுத்த இராவணனுடைய ஆற்றலும்‌, அழகு மிக்க தோள்களும்‌ ஆழத்து அழுந்தவும்‌ அவன்‌ அஞ்சி நடுங்கவும்‌ தம்‌ கால்‌ விரலை ஊன்றிய பெருமான்‌ ஆவார்‌.

10

அத்தமண் தோய்துவ ரார்அமண் குண்டர் யாதுமல் லாவுரை யேயுரைத்துப்பொய்த்தவம் பேசுவ தல்லாற் புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச மூரிவல் லானையின் ஈருரிபோர்த்தவித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னக ராரே.
சொற்பிரிப்பு
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்தவித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.
உரை

சிவந்த நிறமான காவி மண்‌ தோய்ந்த ஆடைகளை அணிந்த பெளத்தர்கள்‌, சமணர்‌ குண்டர்கள்‌ ஆகியோர்‌ பொருளற்ற சொற்களை உரைக்கின்றனர்‌. அவர்கள்‌ பொய்த்தவம்‌ பேசுவதோடு, சைவத்தைப்‌ புறனுரைத்துத்‌ திரிவர்‌. அவர்கள்தம்‌ உரை எதனையும்‌ கொள்ளாதீர்‌. முத்துப்‌ போன்ற வெண்முறுவல்‌ உடைய உமையம்மை அஞ்சுமாறு, வலிய யானையின்‌ தோலை உரித்துப்‌ போர்த்த வித்தகரும்‌, வேத முதல்வருமாகிய திருவேட்கள நன்னகர்‌ இறைவனை வணங்குமின்‌.

11

விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி யெங்கும் விரிந்திலங்கநண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்பெண்ணின்நல் லாளொரு பாகமமர்ந்து பேணிய வேட்கள மேல்மொழிந்தபண்ணியல் பாடல்வல் லார்கள் பழியொடு பாவமி லாரே.
சொற்பிரிப்பு
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்தபண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.
உரை

சீர்வளரும்‌ சீகாழிப்‌ பதி விண்ணுற ஓங்கிய மாடவீடுகளையும்‌, வெண்மையான கொடிகள்‌ எங்கும்‌ விரிந்து விளங்குவதும்‌ ஒளி தவழும்‌ வீடுகளையும்‌ உடையது. அந்த ஊரில்‌ தோன்றியவர்‌ நற்றமிழ்‌ வல்ல ஞானசம்பந்தன்‌. அவர்‌, பெண்ணில்‌ நல்லவளான நல்லநாயகியை ஒருபாகமாக விரும்பி, ஏற்று, எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர்மீது பாடியருளிய, பண்‌ பொருந்திய இப்பதிகப்‌ பாடல்களை ஓதவல்லவர்‌ பழிபாவம்‌ இலராவர்‌.