திருமுறை 1 · 1.038 · 11

திருமயிலாடுதுறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
மயிலாடுதுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கரவின் றிநன்மா மலர்கொண்டு1இரவும் பகலுந் தொழுவார்கள்சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்வரமா மயிலா டுதுறையே.பாடம் : 1மலர்கொண்டே
சொற்பிரிப்பு
கரவு இன்றி நல்மாமலர் கொண்டேஇரவும் பகலும் தொழுவார்கள்சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்வர மா மயிலாடுதுறையே.
உரை

சிவபிரான்‌, திருமயிலாடுதுறையில்‌ உறைகிறான்‌. நெஞ்சில்‌ வஞ்சனை இன்றி, மணம்‌ மிக்க சிறந்த மலர்கள்‌ பலவற்றையும்‌ பறித்துக்‌ கொண்டு வந்து, இரவும்‌ பகலும்‌ தொழும்‌ அடியார்களுக்கு திருமயிலாடுதுறை மிகச் சிறந்த தலமாகும்‌. தலை மாலை பொருந்தும்‌ செஞ்சடை உடையவரும்‌, வள்ளன்மை உடையவருமான சிவபிரான்‌ உகந்தருளும்‌ தலம்‌ திருமயிலாடுதுறை ஆகும்‌. அடியார்களுடைய சிரத்தின்கண்‌ ஒன்றி நிற்கும்‌ பெற்றியனான செஞ்சடையெம்பெருமான்‌ எனவும்‌ பொருள்‌ கோடலாம்‌.

2

உரவெங் கரியின் னுரிபோர்த்தபரமன் னுறையும் பதியென்பர்குரவஞ் சுரபுன் னையும்வன்னிமருவும் மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
உர வெங்கரியின் உரி போர்த்தபரமன் உறையும் பதி என்பர்குரவம், சுரபுன்னையும், வன்னி,மருவும் மயிலாடுதுறையே.
உரை

வலிமை பொருந்திய கொடிய யானையைக்‌ கொன்று, அதன்‌ தோலைப்‌ போர்த்த பரமனாகிய சிவபிரான்‌ உறையும்‌ பதி திருமயிலாடுதுறை என்னும்‌ திருத்தலமாகும்‌. அங்குக்‌ குராமரம்‌ சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள்‌ செறிந்துள்ளன.

3

ஊனத் திருள்நீங் கிடவேண்டில்ஞானப் பொருள்கொண் டடிபேணுந்தேனொத் தினியா னமருஞ்சேர்வானம் மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்,ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வுஆன மயிலாடுதுறையே!
உரை

தேனை ஒத்த இனியனாய்‌ விளங்கும்‌ சிவபிரான்‌, தனக்குச்‌ சேர்வான திருமயிலாடுதுறையில்‌ விரும்பி உறைகிறான்‌. பக்தர்களே! இப்பிறப்பில்‌ நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம்‌ என்னும்‌ இருள்‌ நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால்‌, முத்தியில்‌ தேனைப்‌ போன்று இனியவனாய்‌ விளங்கும்‌ திருமயிலாடு துறையில்‌ எழுந்தருளியிருக்கும்‌ ஞானப்‌ பொருளாய்‌ உன்ள சிவபிரானின்‌ திருவடிகளை வணங்குங்கள்‌.

4

அஞ்சொண் புலனும் மவைசெற்றமஞ்சன் மயிலா டுதுறையைநெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்துஞ்சும் பிணியா யினதானே.
சொற்பிரிப்பு
அஞ்சு ஒண் புலனும் அவை செற்றமஞ்சன் மயிலாடுதுறையைநெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்துஞ்சும், பிணி ஆயினதானே.
உரை

சிவபிரான்‌, ஐம்பொறிகளைப்‌ பற்றும்‌ ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக்‌ கெடுத்த பெருவீரன்‌. அந்தப்‌ பெருமான்‌ விரும்பி எழுந்தருளிய தலம்‌ திருமயிலாடுதுறை ஆகும்‌. அந்தத்‌ தலத்தில்‌ எழுந்தருளிய இறைவனை மனம்‌ ஒன்றி நினைத்து, வழிபட எழுவார்மேல்‌, இனிவரும்‌ பிறவி முதலாகிய பிணிகள்‌ அழிந்து ஒழியும்‌.

5

தணியார் மதிசெஞ் சடையான்றன்அணியார்ந் தவருக் கருளென்றும்பிணியா யினதீர்த் தருள்செய்யும்மணியான் மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
தணி ஆர் மதி செஞ்சடையான்தன்அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்மணியான், மயிலாடுதுறையே.
உரை

சிவபெருமான்‌, குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ளவன்‌. சிவந்த சடைமுடியை உடையவன்‌. அப்பெருமானை அணுகியவர்க்கு என்றும்‌ அருள்‌ உளதாம்‌. பிறவிப்‌ பிணி முதலானவற்றைப்‌ போக்கி அருள்புரியும்‌ மணி போன்றவனாய்‌ உள்ள அப்பெருமான்‌ மயிலாடுதுறையில்‌ உள்ளார்‌.

6

தொண்ட ரிசைபா டியுங்கூடிக்கண்டு துதிசெய் பவனூராம்பண்டும் பலவே தியரோதவண்டார் மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
தொண்டர் இசை பாடியும் கூடிக்கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்பண்டும் பல வேதியர் ஓத,வண்டு ஆர் மயிலாடுதுறையே.
உரை

தொண்டர்களாய்‌ உள்ளவர்கள்‌ கூடி இசையபாடியும்‌, தரித்தும்‌, துதித்தும்‌ சிவபெருமானை வழிபடுகின்றனர்‌. முற்காலத்தும்‌ இக்காலத்தும்‌ வேதியர்கள்‌ வேதங்களை ஓதித்‌ துதிக்கவும்‌ வண்டுகள்‌ ஒலிக்கும்‌ சோலைகள்‌ சூழ்ந்ததும்‌ ஆகிய திருமயிலாடுதுறை சிவபிரானது ஊராகும்‌.

7

அணங்கோ டொருபா கம்அமர்ந்துஇணங்கி யருள்செய் தவனூராம்நுணங்கும் புரிநூ லர்கள்கூடிவணங்கும் மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்துஇணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்நுணங்கும் புரிநூலர்கள் கூடிவணங்கும் மயிலாடுதுறையே.
உரை

சிவபிரான்‌ உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள்‌ புரிபவன்‌. அவனுடைய ஊர்‌ திருமயிலாடுதுறை என்னும்‌ தலமாகும்‌. அத்தலத்தில்‌ உள்ள சிவபிரானை முப்புரி நூல்‌ துவளும்‌ அந்தணர்கள்‌ கூடி வணங்குகிறார்கள்‌.

8

சிரங்கை யினிலேந் தியிரந்தபரங்கொள் பரமேட் டிவரையால்அரங்கவ் வரக்கன் வலிசெற்றவரங்கொள் மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
சிரம் கையினில் ஏந்தி இரந்தபரம் கொள் பரமேட்டி, வரையால்அரங்க அரக்கன் வலி செற்ற,வரம் கொள் மயிலாடுதுறையே.
உரை

சிவபிரான்‌, பிரம கபாலத்தைக்‌ கையில ஏந்திப்‌ பலர்‌ இல்லங்களுக்கும்‌ சென்று இரந்த மேன்மையைக்‌ கொண்டவன்‌. கயிலைமலையால்‌ இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மையாளன்‌ சிவபிரான்‌. அப்பெருமானை அடியவர்கள்‌ வணங்கி நன்மைகளைப்‌ பெறும்‌ தலம்‌ திருமயிலாடுதுறை.

9

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்கோலத் தயனும் மறியாதசீலத் தவனூர் சிலர்கூடிமாலைத் தீர்மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்,கோலத்து அயனும், அறியாதசீலத்தவன் ஊர் சிலர் கூடிமாலைத் தீர் மயிலாடுதுறையே.
உரை

சிவபிரான்‌, உலகை விழுங்கித்‌ தன்னுடைய வயிற்றகத்தே வைத்த திருமாலும்‌, அழகிய நான்முகனும்‌ அறிய இயலாத தூயவனாவார்‌. அவர் விரும்பி உறையும்‌ ஊர்‌ திருமயிலாடுதுறை ஆகும்‌. அத்தலம்‌ அடியவர்கள்‌ ஒருங்குகூடி வழிபட்டுத்‌ தம்‌ அறியாமை நீங்கப்பெற்ற சிறப்புடையதாகும்‌.

10

நின்றுண் சமணும் நெடுந்தேரர்ஒன்றும் மறியா மையுயர்ந்தவென்றி யருளா னவனூராம்மன்றன் மயிலா டுதுறையே.
சொற்பிரிப்பு
நின்று உண் சமணும், நெடுந் தேரர்,ஒன்று அறியாமை உயர்ந்தவென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்மன்றல் மயிலாடுதுறையே.
உரை

நின்று உண்பவர்களாகிய சமணர்களும்‌, நெடிது உயர்ந்த 'பெளத்தர்களும்‌ சிவபிரானை ஒரு சிறிதும்‌ அறியாதவர்களாய்‌ 'ஒழிந்தார்கள்‌. சிவபிரான்‌, உயர்ந்த வெற்றி மற்றும்‌ அருள்‌ ஆகியவைகளைக்‌ கொண்டுள்ளவன்‌. அப்பிரானுடைய ஊர்‌, நறுமணம்‌ கமழும்‌ திருமயிலாடுதுறை ஆகும்‌.

11

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்மயல்தீர் மயிலா டுதுறைமேல்செயலா லுரைசெய் தனபத்தும்உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.
சொற்பிரிப்பு
நயர் காழியுள் ஞானசம்பந்தன்மயர் தீர் மயிலாடுதுறைமேல்செயலால் உரை செய்தன பத்தும்உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.
உரை

ஞானத்தினால்‌ மேம்பட்டவர்கள்‌ வாழும்‌ சீகாழிப்பதியில்‌ வாழ்பவர்‌ திருஞான சம்பந்தர்‌. மயிலாடுதுறையில்‌ எழுந்தருளியுள்ள சிவபெருமான்‌, தன்னை வழிபடுபவரின்‌ மயக்கத்தைத்‌ தீர்த்தருளுபவன்‌. அப்பெருமானைப்‌ பற்றித்‌ திருவருள்‌ உணர்த்தும்‌ செயலால்‌ ஞானசம்பந்தர்‌ உரைத்தனவாகிய இத்திருப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தும்‌ உற்று உணர்வார்க்கு உயர்வைத்‌ தரும்‌.