திருமுறை 1 · 1.037 · 11

திருப்பனையூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
பனையூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அரவச் சடைமேல் மதிமத்தம்விரவிப் பொலிகின் றவனூராம்நிரவிப் பலதொண் டர்கள்நாளும்பரவிப் பொலியும் பனையூரே.
சொற்பிரிப்பு
அரவச் சடை மேல் மதி, மத்தம்,விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்நிரவிப் பல தொண்டர்கள் நாளும்பரவிப் பொலியும் பனையூரே.
உரை

சிவபிரான்‌, சடைமுடிமேல்‌ அரவம்‌ மதி ஊமத்தம்‌ மலர்‌ ஆகியன கலந்து விளங்குமாறு அணிந்துள்ளார்‌. தொண்டர்கள்‌ பலரும்‌ நாள்தோறும்‌ கலந்து வணங்க மகிழ்வுறும்‌ திருப்பனையூரே சிவபிரானது தலமாகும்‌.

2

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்கண்ணின் றெழுசோ லையில்வண்டுபண்ணின் றொலிசெய் பனையூரே.
சொற்பிரிப்பு
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்கள் நின்று எழு சோலையில் வண்டுபண் நின்று ஒலி செய் பனையூரே.
உரை

சிவபிரான்‌, மனம்‌ ஒன்றி நினைந்த அடியார்களின்‌ உள்ளத்தே இருந்து, அவர்தம்‌ வழிபாட்டை ஏற்று மகழ்கின்றான்‌. தேன்பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில்‌ வண்டுகள்‌ பண்‌ ஒன்றிய ஒலி செய்யும்‌ திருப்பனையூரே அந்தச்‌ சிவபிரானுடைய தலமாகும்‌.

3

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்மலரும் பிறையொன் றுடையானூர்சிலரென் றுமிருந் தடிபேணப்பலரும் பரவும் பனையூரே.
சொற்பிரிப்பு
அலரும் எறி செஞ்சடை தன் மேல்மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்சிலர் என்றும் இருந்து அடி பேண,பலரும் பரவும் பனையூரே.
உரை

சிவபிரான்‌, எரிபோல விளங்கும்‌ சிவந்த சடைமுடிமீது வளரும்‌ பிறை ஒன்றை உடையவன்‌. அடியவர்களில்‌ சிலர்‌ என்றும்‌ இருந்து திருவடிகளைப்‌ பரவிப்‌ பூசனை செய்து போற்றவும்‌, பலர்‌ பலகாலும்‌ வந்து வணங்க, விளங்கும்‌ திருப்பனையூரே அந்தப்‌ பெருமானின்‌ திருத்தலம்‌ ஆகும்‌.

4

இடியார் கடல்நஞ் சமுதுண்டுபொடியா டியமே னியினானூர்அடியார் தொழமன் னவரேத்தப்படியார் பணியும் பனையூரே.
சொற்பிரிப்பு
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டுபொடி ஆடிய மேனியினான் ஊர்அடியார் தொழ, மன்னவர் ஏத்த,படியார் பணியும் பனையூரே.
உரை

சிவபிரான்‌, கரைகளை மோதுதல்‌ செய்யும்‌ கடலிடைத்‌ தோன்றிய நஞ்சை அமுதாக உண்டார்‌. அவர்‌, தமது மேனிமீது திருநீற்றுப்‌ பொடியை நிரம்பப்‌ பூசியுள்ளார்‌. அடியவர்கள்‌ தொழ, மன்னவர்கள்‌ ஏத்த உலகில்‌ வாழும்‌ பிறமக்கள்‌ பணியும்‌ திருப்பனையூர்‌, அந்தப்‌ பெருமானது ஊராகும்‌.

5

அறையார் கழல்மேல் அரவாடஇறையார் பலிதேர்ந் தவனூராம்பொறையார் மிகுசீர் விழமல்கப்பறையா ரொலிசெய் பனையூரே.
சொற்பிரிப்பு
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட,இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்பொறையார் மிகு சீர் விழ மல்க,பறையார் ஒலிசெய் பனையூரே.
உரை

சிவபிரான்‌, ஒலிக்கின்ற வீரக்கழல்மேல்‌, அரவு ஆட, முன்கைகளில்‌ பலியேற்றுத்‌ திரியும்‌ பிட்சாடனராக விளங்குகின்றார்‌. மண்ணுலகில்‌ சிறந்த புகழை உடைய திருவிழாக்கள்‌ நிறைய நடப்பனவால்‌, பறைகளின்‌ ஒலி இடைவிடாது பயிலும்‌ திருப்பனையூர்‌ அந்தப்‌ பிட்சாடனரின்‌ ஊராகும்‌.

6

அணியார் தொழவல் லவரேத்தமணியார் மிடறொன் றுடையானூர்தணியார் மலர்கொண் டிருபோதும்பணிவார் பயிலும் பனையூரே.
சொற்பிரிப்பு
அணியார் தொழ வல்லவர் ஏத்த,மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்பணிவார் பயிலும் பனையூரே.
உரை

சிவபிரான்‌, தம்மைப்‌ பூசனை செய்து தொழவல்ல அடியவர்களுக்கு அண்மையில்‌ இருப்பவர்‌. அவர்‌, அடியவர்கள்‌ அருகிருந்து ஏத்துமாறு உள்ள நீலமணி போன்ற கழுத்தை உடையவர்‌. தன்னைப்‌ பணியும்‌ அடியவர்கள்‌ குளிர்ந்த மலர்களைக்‌ கொண்டு, இருபோதும்‌ தூவி வழிபடும்‌ இடமான திருப்பனையூர்‌ அந்தச்‌ சிவபிரானுடைய ஊராகும்‌.

7

அடையா தவர்மூ எயில்சீறும்விடையான் விறலார் கரியின்தோல்உடையான் அவனெண்1 பலபூதப்படையா னவனூர் பனையூரே.பாடம் : 1அவனொண்
சொற்பிரிப்பு
அடையாதவர் மூ எயில் சீறும்விடையான், விறல் ஆர் கரியின் தோல்உடையான் அவன், ஒண் பலபூதப்படையான் அவன், ஊர் பனையூரே.
உரை

சிவபிரான்‌ தன்னை வணங்காத பகைவர்களான அசுரர்களின்‌ மூன்று அரண்களையும்‌ அழித்தவர்‌. விடையில்‌ ஊர்ந்து வருபவர்‌. வலிய யானையை உரித்து, அதன்‌ தோலை மேல்‌ ஆடையாகக்‌ கொண்டவர்‌. எண்ணற்ற பூதப்படைகளை உடையவர்‌. இவ்வளவு சிறப்புள்ள சிவபெருமானுடைய ஊர்‌ திருப்பனையூராகும்‌.

8

இலகும் முடிபத் துடையானைஅலல்கண் டருள்செய் தஎம்மண்ணல்உலகில் லுயிர்நீர் நிலமற்றும்பலகண் டவனூர் பனையூரே.
சொற்பிரிப்பு
இலகும் முடிபத்து உடையானைஅல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்,உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்பல கண்டவன், ஊர் பனையூரே.
உரை

சிவபிரான்‌, விளங்கும்‌ முடிபத்தை உடைய இராவணனை அடர்த்தவர்‌. அவன்‌ படும்‌ அல்லல்‌ கண்டு அவனுக்கு அண்ணல்‌ அருள்‌ செய்தார்‌. உலகின்கண்‌ உன்ன உயிர்களுக்கு நீர்‌ நிலம்‌ முதலான பலவற்றையும்‌ படைத்து அளித்த சிவபிரானுடைய ஊர்‌ திருப்பனையூர்‌ ஆகும்‌.

9

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்சிரமுன் னடிதா ழவணங்கும்பிரமன் னொடுமா லறியாதபரமன் னுறையும் பனையூரே.
சொற்பிரிப்பு
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்!சிரம் முன் அடி தாழ வணங்கும்பிரமனொடு மால் அறியாதபரமன் உறையும் பனையூரே!
உரை

சிவபிரானிடம்‌ வரங்களைப்‌ பெறுவதற்காக மகிழ்வோடு புறப்பட்டு வரும்‌ அடியவர்களே! அப்பெருமானின்‌ திருமுன்‌ தலைதாழ்த்தி வணங்குகின்றவர்கள்‌ எளிதில்‌ நல்ல வரம்‌ பெறலாம்‌. பிரமனும்‌, திருமாலும்‌ அவனை அறிய மாட்டாத நிலையினன்‌. அப்பரமன்‌ உறையும்‌ ஊர்‌ திருப்பனையூர்‌ ஆகும்‌.

10

அழிவல் அமண ரொடுதேரர்மொழிவல் லனசொல் லியபோதும்இழிவில் லதொர்செம் மையினானூர்பழியில் லவர்சேர் பனையூரே.
சொற்பிரிப்பு
அழி வல் அமணரொடு தேரர்மொழி வல்லன சொல்லிய போதும்,இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்பழி இல்லவர் சேர் பனையூரே.
உரை

அழிவில்‌ வல்ல அமணர்களும்‌, பெளத்தர்களும்‌ வாய்த்திறனால்‌ புறங்கூறுகிறார்கள்‌. அதனால்‌, சிறிதும்‌ குறைவுறாத செம்மையன்‌ ஆகிய சிவபிரானது ஊர்‌ திருப்பனையூர்‌ என்ற தலமாகும்‌. அத்தலத்தில்‌ பழியற்றவர்கள்‌ சேர்ந்து வாழ்கிறார்கள்‌.

11

பாரார் விடையான் பனையூர்மேல்சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்ஆரா தசொன்மா லைகள்பத்தும்ஊரூர் நினைவா ருயர்வாரே.
சொற்பிரிப்பு
பார் ஆர் விடையான் பனையூர் மேல்சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்ஆராத சொல் மாலைகள் பத்தும்ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.
உரை

விடையூர்தியைக்‌ கொண்ட சிவபிரானை நினைத்தால்‌ மண்ணுலகில்‌ பொருந்தி வாழலாம்‌. அப்பெருமான்‌ உறையும்‌ திருப்பனையூரின்மேல்‌, புகழால்மிக்க தமிழ்‌ ஞானசம்பந்தன்‌, மென்மேலும்‌ விருப்பத்தைத்‌ தருவனவாகப்‌ போற்றிப்‌ பாடிய சொல்மாலைகளான இப்பத்துப்‌ பாடல்களையும்‌ ஒவ்வோர்‌ ஊரிலும்‌ இருந்து கொண்டு நினைவார்‌ உயர்வெய்துவர்‌.