திருமுறை 1 · 1.034 · 11

சீகாழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அடலே றமருங் கொடியண்ணல்மடலார் குழலா ளொடுமன்னுங்கடலார் புடைசூழ் தருகாழிதொடர்வா ரவர்தூ நெறியாரே.
சொற்பிரிப்பு
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்மடல் ஆர் குழலாளொடு மன்னும்,கடல் ஆர் புடை சூழ் தரு, காழிதொடர்வார் அவர் தூ நெறியாரே.
உரை

சிவபிரான்‌, வலிமை பொருந்திய இடபம்‌ பொறிக்கப்பட்ட கொடியைத்‌ தனதாகக்‌ கொண்ட தலைவராவார்‌. கடலால்‌ சூழப்பட்ட சீகாழிப்‌ பதியில்‌, மலர்சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடு எழுந்தருளி இருக்கிறார்‌. சென்று வழிபடுபவர்‌ தூயநெறியில்‌ நிற்பவர்‌ ஆவார்‌. அந்தத்‌ தலத்தை இடைவிடாது

2

திரையார் புனல்சூ டியசெல்வன்வரையார் மகளோ டுமகிழ்ந்தான்கரையார் புனல்சூழ் தருகாழிநிரையார் மலர்தூ வுமினின்றே.
சொற்பிரிப்பு
திரை ஆர் புனல் சூடிய செல்வன்,வரையார் மகளோடு மகிழ்ந்தான்,கரை ஆர் புனல் சூழ்தரு, காழிநிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!
உரை

சிவபிரான்‌, அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச்‌ சூடிய செல்வனாக விளங்குகிறார்‌. கரையை உடைய நீர்நிலைகளால்‌ சூழப்பட்ட சீகாழிப்பதியில்‌ சிவபிரான்‌ மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியுள்ளான்‌. அந்தச்‌ சீகாழிப்பதியை வரிசையான பூக்களைக்‌ கொண்டு நின்று தூவி வழிபடுமின்‌.

3

இடியார் குரல்ஏ றுடையெந்தைதுடியா ரிடையா ளொடுதுன்னுங்கடியார் பொழில்சூழ் தருகாழிஅடியார் அறியார் அவலம்மே.
சொற்பிரிப்பு
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தைதுடி ஆர் இடையாளொடு துன்னும்,கடி ஆர் பொழில் சூழ்தரு, காழிஅடியார் அறியார், அவலமே.
உரை

இறைவனாகிய சிவபிரான்‌, இடியை ஒத்த குரலை உடைய இடபத்தைத்‌ தனது வாகனமாகக்‌ கொண்ட எம்‌ தந்தையாவான்‌. மணம்‌ பொருந்திய பொழில்களால்‌ சூழப்பட்ட சீகாழிப்‌ பதியில்‌ துடிபோலும்‌ இடையை உடைய உமையம்மையோடு எழுந்தருளி இருக்கிறான்‌. அந்த சீகாழிப்‌ பதியை வணங்கும்‌ அடியவர்கள்‌ துன்பத்தை அறியார்கள்‌.

4

ஒளியார் விடமுண் டவொருவன்அளியார் குழல்மங் கையொடன்பாய்க்களியார் பொழில்சூழ்1 தருகாழிஎளிதாம் அதுகண் டவரின்பே.பாடம் : 1புனல்சூழ்
சொற்பிரிப்பு
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்,அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய்,களி ஆர் பொழில் சூழ்தரு, காழிஎளிது ஆம், அது கண்டவர் இன்பே.
உரை

ஒப்பற்றவனாகிய சிவபிரான்‌, நீலநிற ஒளியோடு கூடிய ஆலகால விடத்தை உண்டருளியவன்‌. பொழில்கள்‌ சூழ்ந்த சீகாழிப்‌ பதியில்‌ உமையம்மையோடு அன்புடன்‌ களிக்கின்றான்‌. அந்த உமையம்மை, வண்டுகள்‌ மணத்தைத்‌ தேடிவந்து நாடும்‌ கூந்தலை உடையவள்‌. உமையம்மையுடன்‌ பெருமான்‌ உறையும்‌ சீகாழிப்‌ பதியைக்‌ கண்டவர்க்கு இன்பம்‌ எளிதாம்‌.

5

பனியார் மலரார் தருபாதன்முனிதா னுமையோ டுமுயங்கிக்கனியார் பொழில்சூழ் தருகாழிஇனிதாம் அதுகண் டவரீடே.
சொற்பிரிப்பு
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்,முனி தான், உமையோடு முயங்கி,கனி ஆர் பொழில் சூழ்தரு, காழிஇனிது ஆம், அது கண்டவர் ஈடே.
உரை

சிவபிரான்‌, தண்மை பொருந்திய தாமரை மலர்போன்ற திருவடிகளை உடையவன்‌. அவன்‌, உமையம்மையோடு கூடி உலக உயிர்கட்குப்‌ போகத்தைப்‌ புரிந்தருளினும்‌, தான்‌ முனிவனாகவே விளங்குகிறான்‌. கனிகள்‌ குலுங்கும்‌ பொழில்கள்‌ சூழ்ந்த சீகாழிப்‌ பதியில்‌ சிவபிரான்‌ எழுந்தருளியுள்ளான்‌. அந்தப்பதியைச்‌ சென்று கண்டவர்க்குப்‌ பெருமை எளிதாக வந்தடையும்‌.

6

கொலையார் தருகூற் றமுதைத்துமலையான் மகளோ டுமகிழ்ந்தான்கலையார் தொழுதேத் தியகாழிதலையால் தொழுவார் தலையாரே.
சொற்பிரிப்பு
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்துமலையான் மகளோடு மகிழ்ந்தான்,கலையார் தொழுது ஏத்திய, காழிதலையால் தொழுவார் தலையாரே.
உரை

சிவபிரான்‌, கொலைத்‌ தொழில்‌ நிறைந்த எமனை உதைத்து அழித்தான்‌. அவன்‌ மலையரையன்‌ மகளாகிய உமையம்மையோடு மகழ்ந்து உறைபவன்‌. அத்தகைய சிவபெருமான்‌ விரும்புவதும்‌, மெய்ஞ்ஞானியர்கள்‌ தொழுது ஏத்துவதும்‌ ஆகிய சீகாழிப்‌ பதியைத்‌ தலையால்‌ வணங்குவார்‌ தலையாயவர்‌ ஆவார்‌.

7

திருவார் சிலையால் எயிலெய்துஉருவார் உமையோ டுடனானான்கருவார் பொழில்சூழ் தருகாழிமருவா தவர்வான் மருவாரே.
சொற்பிரிப்பு
திரு ஆர் சிலையால் எயில் எய்து,உரு ஆர் உமையோடு உடன் ஆனான்,கரு ஆர் பொழில் சூழ்தரு, காழிமருவாதவர் வான் மருவாரே.
உரை

சிவபிரான்‌, அழகிய வில்லால்‌ மூவெயில்களையும்‌ எய்தழித்தார்‌. எழில்‌ தவழும்‌ உமையம்மையோடு சீகாழிப்‌ பதியில்‌ எழுந்தருளியுள்ளார்‌. இருண்ட அடர்த்தியான சோலைகளால்‌ சூழப்பெற்ற சீகாழிப்‌ பதியை அடையாதவர்கள்‌, விண்ணுலக இன்பங்களை அடையாதவர்‌ ஆவார்கள்‌.

8

அரக்கன் வலியொல் கஅடர்த்துவரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்சுரக்கும் புனல்சூழ் தருகாழிநிரக்கும் மலர்தூ வுநினைந்தே.
சொற்பிரிப்பு
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,சுரக்கும் புனல் சூழ்தரு, காழிநிரக்கும் மலர் தூவும், நினைந்தே!
உரை

சிவபிரான்‌, இராவணனுடைய வலிமை சுருங்குமாறு, அவனைத்‌ தளரச்‌ செய்து அடர்த்தார்‌. அவர்‌ மலைமகளோடு மகிழ்ந்து சீகாழிப்‌ பதியில்‌ விளங்குகின்றார்‌. மேலும்‌ மேலும்‌ பெருகிவரும்‌ நீர்‌ சூழ்ந்த சீகாழிப்‌ பதியை நினைந்து, வரிசையாக மலர்களைத்‌ தூவுமின்‌.

9

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்உருவிற் பெரியா ளொடுசேருங்கருநற் பரவை கமழ்காழிமருவப் பிரியும் வினைமாய்ந்தே.
சொற்பிரிப்பு
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்உருவில் பெரியாளொடு சேரும்,கரு நல் பரவை கமழ், காழிமருவ, பிரியும், வினை மாய்ந்தே.
உரை

திருமால்‌ பிரமன்‌ ஆகிய இருவர்‌ பொருட்டு எரி உருவாகி நிமிர்ந்தான்‌ சிவபிரான்‌. அழகிற்‌ சிறந்த பெரியநாயகி அம்மையோடு சீகாழிப்‌ பதியில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌. கரிய நல்ல கடலின்மணம்‌ கமழும்‌ சீகாழிப்‌ பதியை மனத்தால்‌ நினைய நம்‌ வினைகள்‌ மாய்ந்து பிரியும்‌.

10

சமண்சாக் கியர்தாம் அலர்தூற்றஅமைந்தான் உமையோ டுடன்அன்பாய்க்கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழிசுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.
சொற்பிரிப்பு
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்;கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழிசுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.
உரை

சமணர்களும்‌, சாக்கியர்களும்‌ புறம்‌ கூறுகின்றனர்‌. அவர்களை ஏறிடாமல்‌ சிவபிரான்‌ உமையம்மையோடு அன்பாய்‌ ஒருசேரச்‌ காழியார்‌ எழுந்தருளி இருக்கின்றான்‌. மணம்‌ கமழ்ந்து நிறையும்‌ பொழில்கள்‌ சூழ்ந்த சீகாழிப்‌ பதியைத்‌ தம்மனத்தே தியானித்து, மலர்‌ தூவித்‌ தொழுதலே சிறந்த தொண்டாகும்‌.

11

நலமா கியஞான சம்பந்தன்கலமார் கடல்சூழ் தருகாழிநிலையா கநினைந் தவர்பாடல்வலரா னவர்வான் அடைவாரே.
சொற்பிரிப்பு
நலம் ஆகிய ஞானசம்பந்தன்கலம் ஆர் கடல் சூழ் தரு காழிநிலை ஆக நினைந்தவர் பாடல்வலர் ஆனவர் வான் அடைவாரே.
உரை

சீகாழிப்பதி, நன்மையை மக்கட்கு நல்கும்‌. அந்த நகர்‌ மரக்கலங்களை உடைய கடலால்‌ சூழப்‌ பெற்றது. அந்தச்‌ சீகாழிப்‌ பதியை உறுதியாக நினைந்தவர்களும்‌, ஞானசம்பந்தருடைய பாடல்களில்‌ வல்லவராய்‌ ஓதி வழிபட்டவர்களும்‌ விண்ணக இன்பங்களை அடைவர்‌.