திருமுறை 1 · 1.033 · 11

திருஅன்பிலாலந்துறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
அன்பிலாலந்துறை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கணைநீடெரி மாலர வம்வரை வில்லாஇணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்பிணைமாமயி1 லுங்குயில் சேர்மட அன்னம்அணையும்பொழில் அன்பிலா லந்துறை யாரே.பாடம் : 1பிணையா மயிலுங்
சொற்பிரிப்பு
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.
உரை

சிவபிரான்‌, ' நீண்டு எரிகின்ற தீயையும்‌, திருமாலையும்‌ அம்பாகக்‌ கொண்டு பூட்டினார்‌. அவர்‌ வாசுகி, என்னும்‌ பாம்பை நாணாக்‌ கட்டினார்‌. மேரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும்‌ பெருமான்‌ எரித்தார்‌. தத்தம்‌ பெடைகளோடு கூடிய பெரிய மயில்களும்‌, குயில்களும்‌ சேர்ந்தும்‌ மற்றும்‌ அன்னங்களும்‌ உறையும்‌ பொழில்‌ சூழ்ந்த அன்பிலாலந்துறையில்‌ சிவபிரான்‌ விளங்குகிறார்‌.

2

சடையார்சது ரன்முதி ராமதி சூடிவிடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன்கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளைஅடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளைஅடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

சிவபிரான்‌ சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவர்‌. இளம்பிறையை முடிமிசைச்‌ சூடியவர்‌ இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையராகிய விமலர்‌ ஆவார்‌. வேதம் பயிலும்‌ இளம்‌ சிறார்கள்‌ கூடியிருந்து ஓதும்‌ வேதஓலியைக்‌ கேட்டு, அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள்‌ அடைதல்‌ பொருந்திய சோலைகளால்‌ சூழப்பெற்ற அன்பிலாலந்துறை இறைவராவார்‌.

3

ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்நீருண்கய லும்வயல் வாளை வராலோடாரும்புனல் அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடுஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

சிவபிரான்‌, ஊர்ந்து செல்லும்‌ பாம்பைச்‌ சடைமுடிமேல்‌ பொருந்த அணிந்துள்ளார்‌. உலகம்‌ முழுதும்‌ சென்று பலியேற்று, இசை பாடி மகிழும்‌ பரமனாக அவர்‌ இருக்கிறார்‌. நீரின்‌ வழி உணவு உண்ணும்‌ கயல்‌ மீன்களை, வயல்களிடத்திலுள்ள வாளை மற்றும்‌ விரால்‌ ஆகிய மீன்கள்‌ உண்ணும்‌ புனல்‌ வளம்‌ மிக்க அன்பிலாலந்துறையாராகப்‌ பெருமான்‌ விளங்குகிறார்‌.

4

பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்மறையும்பல வேதிய ரோத ஒலிசென்றறையும்புனல் அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்றுஅறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

சிவபிரான்‌, பிறைமதி பாம்பு ஆகியவற்றை பகைநீக்கி, ஒருங்கே பொருந்த வைத்த முடியை உடையவர்‌. அந்த முடியின்மீது நறுமணத்துடன்‌ தோன்றும்‌ வன்னித்தளிர்களும்‌ மன்னிய சடையினர்‌. வேதியர்‌ பலர்‌ வேதங்களை ஓத, அந்த ஒலி பல இடங்களிலும்‌ ஒலிக்கும்‌ நீர்வளம்‌ மிக்க அன்பிலாலந் துறை இறைவராவார்‌.

5

நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்ஆடும்பதி அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்மாடு முழவம் அதிர, மட மாதர்ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.
உரை

சிவபிரான்‌, முடிமேல்‌ பெருகிவரும்‌ நீரை உடைய கங்கையாற்றையும்‌ தங்குமாறு அணிந்துள்ளார்‌. தம்மைத்‌ தழுவிய மலைமகளை ஒரு பாகமாகக்‌ கொண்டுள்ளார்‌. பல இடங்களிலும்‌ முழவுகள்‌ ஒலிக்க, இளம்‌ பெண்கள்‌ பலர்‌ நடனங்கள்‌ புரியும்‌' அன்பிலாலந்துறை இறைவர்‌ ஆவார்‌.

6

நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்ஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்வேறாரகி லும்மிகு சந்தனம் உந்திஆறார்வயல் அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்திஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

சிவபிரான்‌, திருநீறு அணிந்த திருமேனியர்‌. குற்றம்‌ அற்றவர்களின்‌ உள்ளங்களில்‌ பொருந்திய சுவையாக இனிப்பவர்‌. அவர்‌ தேவர்‌ தலைவர்‌. தனியாகப்‌ பெயர்ந்து வரும்‌ அகில்‌ மரங்களையும்‌, உயர்ந்த சந்தன மரங்களையும்‌ அடித்துவரும்‌ காவிரி ஆற்று நீர்‌ பாயும்‌ வயல்களை உடைய திரு அன்பிலாலந்துறை இறைவராகச்‌ சிவபிரான்‌ விளங்குகிறார்‌.

7

செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்டபடியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்அடியார்தொழும் அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்டபடி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

சிவபிரான்‌, முடை நாற்றம்‌ உடைய தலையோட்டில்‌ பலியேற்று, அதனை இனிதாக உண்டருளும்‌ தன்மையினைக்‌ கொண்ட பரமனாகிய பரம்பொருளாக இருக்கிறார்‌. அவர்‌, மணம்‌ பொருந்திய மலர்களையும்‌, நீரையும்‌ தூவி, நின்று, தன்‌ புகழைத்‌ துதிக்கும்‌ அடியார்களால்‌ தொழப்படும்‌ திரு அன்பிலாலந்துறை இறைவர்‌ ஆவார்‌.

8

விடத்தார் திகழும்மிட றன்நட மாடிபடத்தாரர வம்விர வுஞ்சடை ஆதிகொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யாரஅடர்த்தாரருள் அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆரஅடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

சிவபிரான்‌, ஆலகால விடக்‌ கறை விளங்கும்‌ கரிய கண்டத்தினர்‌. நடனம்‌ ஆடுபவர்‌ படத்தோடு கூடிய அரவம்‌ விரவும்‌ சடையினை உடைய முதற்கடவுள்‌. அவர்‌ கொடிய தேரைக்‌ கொண்ட இலங்கையர்‌ குலத்‌ தலைவனாகிய இராவணணை, மலையின்‌ கீழ் அகப்படுத்தி அடர்த்தவர்‌. இவ்வகைய சிவபிரான்‌, அன்பர்கள்‌ அருள்‌ கணனி இடமாக விளங்கும்‌ திரு அன்பில்‌ ஆலந்துறை என்னும்‌ தலத்தில்‌ எழுத்தருளினான்‌

9

வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமைசுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்அணங்குந்திக ழன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

தாமரை மலர்மேல்‌ விளங்கும்‌ அயனும்‌, திருமாலும்‌ சிவபிரானுடைய பெருமையை வணங்கி அறியாது, தம்முட்‌ பிணங்கித்‌ தேடி அறியாதவராயினர்‌. அச்சிவபிரான்‌, சுணங்கு பொருந்திய உமையம்மையை ஒருபாகத்தே அணங்காகக்‌ கொண்டுள்ள திருஅன்பில்‌ ஆலந்துறை இறைவர்‌ ஆவார்‌.

10

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்வெறியார்மலர் கொண்டடி வீழும் அவரைஅறிவாரவர் அன்பிலா லந்துறை யாரே.
சொற்பிரிப்பு
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரைஅறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.
உரை

தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள்‌, நெய்த ஆடையினை உடலில்‌ போர்க்கு உழலும்‌ பெளத்தர்கள்‌ ஆகியோர்‌, தவ பரம்பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய்‌ உள்ளனர்‌. அவர்களைச்‌ சாராது, நாள்தோறும்‌ மணமலர்களைச்‌ சூட்டித்‌ தம்‌ திருவடிகளில்‌ வீழ்ந்து தொழும்‌ அடியார்களை நன்கு அறிந்து அருளும்‌ சிவபெருமானார்‌ திருஅன்பில்‌ ஆலந்துறை இறைவர்‌ ஆவார்‌.

11

அரவார்புனல் அன்பிலா லந்துறை தன்மேல்கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்விரவாகுவர் வானிடை வீடெளி தாமே.
சொற்பிரிப்பு
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.
உரை

வஞ்சனை இல்லாத மக்கள்‌ வாழும்‌ சீகாழிப்‌ பதியில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ சிவபிரானைப்‌ பாடினார்‌. பாம்பு நெளிந்து விரைந்து வருவது போன்ற தோற்றமுடைய நீர்வளம்‌ உடையதாயும்‌ உள்ள திருஅன்பில்‌ ஆலந்துறை இறைவனாகிய சிவபிரான்‌ மேல்‌ பரவிப்‌ பாடிய இப்பத்துப்‌ பாடல்களையும்‌ இசையோடு பாடவல்லவர்‌ மறுமையில்‌ வானக இன்பங்களுக்கு உரியவர்கள்‌ ஆவர்‌. அவர்களுக்கு வீட்டின்பம்‌ எளிதாம்‌.