திருமுறை 1 · 1.032 · 11

திருவிடைமருதூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சைகாடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்துஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.
உரை

சிவபிரானுக்கு உண்ணும்‌ பாத்திரம்‌ பிரம கபாலம்‌ ஆகும்‌. அவர்‌ உண்ணும்‌ உணவோ ஊர்‌ மக்கள்‌ இடும்‌ பிச்சையாகும்‌. அவர்‌ வாழும்‌ இடமோ இடுகாடாகும்‌. அத்தகைய சிவபிரான்‌ கல்லால மரநிழற்கீழ்‌ நன்முலை நாயகியும்‌ தானுமாய்‌ மகிழ்ந்து பெருமையோடு விளங்கும்‌ திருத்தலமாகய இடைமருது இதுதானோ?

2

தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்டப்,படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.
உரை

சிவபிரான்‌ பெரிய குளங்களில்‌ பறித்த பெரிய தாமரை மலர்களை தம்‌ அழகிய திருமுடியில்‌ சூடி இருக்கிறார்‌. அடியவர்கள்‌ குடங்களைக்‌ கொண்டு குளிர்ந்த நீரை முகந்து சுமந்து வந்து திருமுடியில்‌ திருமுழுக்கு ஆட்டுகின்றனர்‌. படம்‌ எடுத்தாடும்‌ நல்ல பாம்பை இடையிலே கட்டிக்‌ கொண்டிருக்கும்‌ பரமனாகிய சிவபிரான்‌ தாம்‌ விரும்பிய இடமாகக்‌ கொண்டுறையும்‌ இடைமருது இதுதானோ?

3

வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்திஅங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்துபொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்எங்கோனுறை கின்ற இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.
உரை

சிவபிரான்‌ வெண்மையான கோவணத்தை அணிந்துள்ளார்‌. அவர்‌ ஒப்பற்ற வெள்ளிய பிரம கபாலத்தைக்‌ கையில்‌ ஏந்தியுள்ளார்‌. அழகியதாய்த்‌ திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒரு பாகமாக அவர்‌ விரும்பி ஏற்றுள்ளார்‌. பொங்கி வரும்‌ காவிரியாற்றின்‌ அழகிய கரைமீது எம்‌ தலைவராய்‌ உள்ள சிவபிரான்‌ எழுந்தருளிய இடைமருதூர்‌ இதுதானோ?

4

அந்தம்மறி யாத அருங்கல முந்திக்கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,வெந்த பொடிப் பூசிய வேத முதல்வன்-எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.
உரை

காவிரியாறு அரிய அணிகலன்களைக்‌ கரையில்‌ வீசி, மணம்‌ கமழ்ந்து வருகிறது. அதன்‌ அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய்‌, முடிவறியாத வேதமுதல்வனாய்‌ விளங்கும்‌ எம்‌ தந்தையாகிய சிவபிரான்‌ உறைகின்ற இடைமருது இதுதானோ?

5

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டேதேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப்பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காயஈசன்உறை கின்ற இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டேதேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்ப்பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆயஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.
உரை

மணம்‌ கமழும்‌ சிறந்த மலர்களை உடைய சோலைகள்‌ வண்டுகளைக்‌ கொண்டன. உலக மக்கள்‌ பலரும்‌ பல இடங்களில்‌ சுற்றிச்‌ செம்மையாளராய்‌ இருப்பர்‌. அவர்கள்‌ தைப்பூசத்‌ இருநாளில்‌ நீராடி வணங்குவர்‌. பொலிவும்‌ அழகும்‌ உடையவனாய்ச்‌ சிவபிரான்‌ எழுந்தருளி விளங்குவான்‌. இவ்வளவு சிறப்புக்களை உடைய திருவிடைமருதூர்‌ என்னும்‌ தலம்‌ இதுதானோ?

6

வன்புற்றிள நாகம் அசைத்தழ காகஎன்பிற்பல மாலையும் பூண்டெரு தேறிஅன்பிற்பிரி யாதவ ளோடும் உடனாய்இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆகஎன்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.
உரை

சிவபிரான்‌, வலிய புற்றுக்களில்‌ வாழும்‌ இள நாகங்களை இடையிலே அழகாகக்‌ கட்டிக்‌ கொண்டுள்ளான்‌. அவன்‌, எலும்பால்‌ இயன்ற மாலைகள்‌ பலவற்றையும்‌ அணிகலன்களாகப்‌ பூண்டுள்ளான்‌. அவ்வகைச்‌ சிறப்புடைய சிவபிரான்‌, அன்பிற்‌ பிரியாத உமையம்மையோடும்‌ உடனாய்‌ எருதேறி இன்புற்றுறையும்‌ திருவிடைமருதூர்‌ என்பதும்‌ இதுதானோ?

7

தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்திப்போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.
உரை

தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைக்‌ காவிரியாறு சுமந்து வருகிறது. அம்மரங்களை இரு கரைகளிலும்‌ எடுத்து வீசுகிறது. ஆரவாரித்து வரும்‌ அலைகளை உடையதாய்‌ வரும்‌ காவிரியாற்றின்‌ அழகிய கரைமீது சிவபிரான்‌ பொருந்த உறையும்‌ இருவிடை மருதூர்‌ என்னும்‌ தலம்‌ இதுதானோ?

8

பூவார்குழ லார்அகில் கொண்டு புகைப்பஓவாதடி யாரடியுள்1 குளிர்ந் தேத்தஆவா அரக் கன்றனை ஆற்ற லழித்தஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.பாடம் : 1யாரடிகள்
சொற்பிரிப்பு
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்தஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்தஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.
உரை

மலர்‌ சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர்‌ அகில்‌ தூபம்‌ இடுகிறார்கள்‌. அடியவர்கள்‌ இடையீடு இன்றிச்‌ சிவபிரானுடைய திருவடிகளை மனம்‌ குளிர்ந்து ஏத்துகின்றனர்‌. பரிதாப நிலையை நேரில்‌ கண்டவர்‌ “ஆ ஆ” என்று இரங்குமாறு, இராவணனுடைய ஆற்றலை அழித்தவர்‌ சிவபிரான்‌ அவர்‌ அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக்‌ கையில்‌ கொண்டவர்‌. அவ்வகைப்‌ பெருமை கொண்ட சிவபிரான்‌ இருக்கும் திருவிடைமருதூர்‌ என்னும்‌ தலம்‌ இதுதானோ?

9

முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காகஎற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்தப்பொன்—தோளியும் தானும் பொலிந்து அழகு ஆகஎற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.
உரை

சிவபிரான்‌, முற்றாத பால்போன்ற இளம்‌ பிறையை முடிமிசைச்‌ சூடிய முதல்வனாய்‌ இருக்கிறான்‌. நல்ல தாமரை மலர்மேல்‌ உறையும்‌ நான்முகனும்‌, திருமாலும்‌ விரும்பித்‌ தொழுகிறார்கள்‌. உமையம்மையும்‌, தானுமாய்ச்‌ சிவபிரான்‌ பொலிந்து உறைகின்ற திருவிடை மருதூர்‌ என்னும்‌ தலம்‌ இதுதானோ?

10

சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூறநெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்தவெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.
சொற்பிரிப்பு
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.
உரை

சிறுமதியாளராகிய பெளத்தர்களும்‌, சிற்றறிவினராகிய சமணர்களும்‌ புறம்‌ கூறித்‌ திரிகிறார்கள்‌. சிவபக்தர்கள்‌ பலர்‌ முறையாலே கைகளால்‌ தொழுது துதிக்கின்றனர்‌. பகைவரைக்‌ கொன்றொழிக்கும்‌ மழுவை ஏந்திய சிவபிரான்‌ எழுந்தருளியுள்ளதும்‌, மணம்‌ _ கமழ்ந்து வரும்‌ காவிரியாற்றின்‌ அழகிய கரைமேல்‌ உள்ளதும்‌ ஆகிய திருவிடைமருதூர்‌ என்னும்‌ தலம்‌ இதுதானோ?

11

கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.
சொற்பிரிப்பு
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.
உரை

இடம்‌ அகன்றதும்‌, மணம்‌ கமழ்வதுமான சீகாழிப்‌ பதியில்‌ தோன்றியவர்‌ ஞானசம்பந்தன்‌. அவருடைய எண்ணத்தில்‌ நிறைந்துள்ளதும்‌ புகழை உடையதும்‌ சிவபிரானுக்கு உரியதுமான திருவிடைமருதூர்மீது பண்ணோடியன்ற இசையில்‌ பத்துப்பாடல்களைப்‌ பாடியுள்ளார்‌. இப்பாடல்களைப்‌ பாட வல்லவர்கள்‌ விண்ணோர்‌ உலகில்‌ வீற்றிருக்கும்‌ சிறப்பைப்‌ பெறுவார்கள்‌.