திருமுறை 1 · 1.031 · 11

திருக்குரங்கணின்முட்டம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
குரங்கணில்முட்டம்
நாடு
தொண்டைநாடு

1

விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்கும்கழுநீர் குவளைம்மல ரக்கயல் பாயும்கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.
சொற்பிரிப்பு
விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.
உரை

சிவபிரான்‌, பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்தவர்‌. மழுவாட்‌ படையைக்‌ கையில்‌ ஏந்தியவர்‌. அவர்‌ உறைவது திருக்குரங்கணில்‌ முட்டம்‌ ஆகும்‌. அத்தலம்‌ கழுநீர்‌, குவளை ஆகியன மலர்ந்தும்‌, கயல்மீன்கள்‌ துள்ளுமாறும்‌ விளங்கும்‌ நீர்‌ நிலைகளை உடையது; செழுமையான வயல்களால்‌ சூழப்பட்டது. இத்தனை சிறப்பு வாய்ந்தது திருக்குரங்கணில்முட்டம்‌ ஆகும்‌. இத்தலத்தைத்‌ தொழுபவர்‌ இம்மையால்‌ வரும்‌ துன்பம்‌ இல்லாதவர்கள்‌ ஆவார்கள்‌.

2

விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்கடைசேர்கரு மென்குளத் தோங்கிய1 காட்டில்குடையார் புனல் மல்கு குரங்கணில் முட்டம்உடையானெனை யாளுடை யெந்தை பிரானே.பாடம் : 1குழல்தொங்கிய
சொற்பிரிப்பு
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.
உரை

சிவபிரான்‌, திருக்குரங்கணில்‌ முட்டத்தை உடையவன்‌. அங்கு உயர்ந்து விளங்கும்‌ மாடங்கள்‌ உள்ளன. அவைகளின்‌ கடைவாயிலைச்‌ சேர்ந்து கரிய குளிர்ந்த (மெல்லிய) காடுகள்‌ உள்ளன. அக்காடுகளின்‌ இடையே குடைந்து ஆடுதற்குரிய நீர்நிலைகள்‌ நிறைந்து உள்ளன. இவ்வளவு இறப்புக்கள்‌ நிறைந்த இருக்குரங்கணில்‌ முட்டத்தை உடையவன்‌, விடைக்கொடி அண்ணலாகிய சிவபிரான்‌. அவன்‌ என்னை ஆளாக உடைய தலைவன்‌ ஆவான்‌.

3

சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.
சொற்பிரிப்பு
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான்,காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்-கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்துஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.
உரை

திருக்குரங்கணில்முட்டம்‌ அழகிய சோலைகளால்‌ சூழப்பெற்றது. அங்கு எழுந்தருளிய சிவபிரான்‌ மணம்‌ கமழும்‌ சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான்‌. அவன்‌ சூலப்படையையும்‌, விடை ஊர்தியையும்‌ உடையவன்‌. அவன்‌ திருவெண்ணீறு பூசியவன்‌. காலனின்‌ உயிரை வவ்வியதால்‌ காலகாலன்‌ எனப்படுபவன்‌.

4

வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்தோடார் குழை யான்நல பாலன நோக்கிக்கூடாதன செய்த குரங்கணில் முட்டம்ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.
சொற்பிரிப்பு
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்-தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி,கூடாதன செய்த குரங்கணில் முட்டம்ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.
உரை

திருக்குரங்கணில்‌ முட்டத்தில்‌ எழுந்தருளியுள்ள சிவபிரான்‌ வாடாது விரிந்துள்ள கொன்றை மாலையைச்‌ சூடியவன்‌ வலது காதில்‌ குழையையும்‌, இடது காதில்‌ தோட்டையும்‌ அணிந்துள்ளவன்‌; அனைத்து உயிர்களையும்‌ நன்றாகக்‌ காத்தலைத்‌ திருவுள்ளம்‌ கொண்டவன்‌ தேவர்கள்‌ எவரும்‌ செய்யமுடியாத அரிய செயல்களைச்‌ செய்பவன்‌. இவ்வனைத்துச்‌ செயல்களையும்‌ செய்யும்‌ சிவபிரான்‌ திருக்குரங்கணில்‌ முட்டத்துள்‌ திருநடனம்‌ புரியும்‌ இறைவன்‌ ஆவான்‌. அவன்‌ எல்லோரிடத்திலும்‌ அன்பு உடையவன்‌.

5

இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்குறையார் மதிசூடி குரங்கணில் முட்டத்துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.
சொற்பிரிப்பு
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி,கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்;குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்துஉறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.
உரை

திருக்குரங்கணில்‌ முட்டத்தில்‌ உறையும்‌ இறைவனான சிவபிரான்‌, “இறையார்‌ வளையாள்‌” என்னும்‌ திருப்பெயர்‌ கொண்ட உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவன்‌, நீலகண்டன்‌, யானையின்‌ தோலை உரித்துப்‌ போர்த்த கையினன்‌, ஆதிப்பிறையை முடியில்‌ சூடியவன்‌. அந்த இறைவனாகிய சிவபிரான்‌, எம்மை ஆளாக உடைய ஒண்சுடராவான்‌.

6

பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோம்கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே.
சொற்பிரிப்பு
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக்குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.
உரை

சிவபிரான்‌ உறையும்‌ திருக்குரங்கணில்‌ முட்டத்தில்‌, தோகைகளை உடைய ஆண்‌ மயில்கள்‌, தாம்‌ விரும்பும்‌ பெண்‌ மயில்களோடு கூடிக்‌ களித்தாடும்‌ பொழில்களால்‌ சூழப்பட்டது. அங்கு உறையும்‌ பெருமான்‌ திருவடிகளை நாள்தோறும்‌ நினைந்து, உலகப்‌ பொருள்கள்‌ பலவற்றில்‌ இருந்த பற்றொழித்தோம்‌.

7

மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்தோடார்குழை தானொரு காதில்2 இலங்கக்கூடார்மதி லெய்து குரங்கணில் முட்டத்தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.பாடம் : 2காதினில்
சொற்பிரிப்பு
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.
உரை

சிவபிரான்‌ பொன்னை ஒத்த கொன்றை மலர்மாலையைச்‌ சடைமீது அணிந்துள்ளான்‌. காதணியாகிய குழை ஒரு காதில்‌ இலங்கத்‌ திரிபுரத்தை எரித்து அழித்தான்‌. ஆடும்‌ பாம்பை இடையிலே வரிந்து கட்டின திருக்குரங்கணில்‌ முட்டத்தில்‌ எழுந்தருளியுன்ளான்‌.

8

மையார்நிறம் மேனி யரக்கர்தங் கோனைஉய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்தகொய்யாமலர் சூடி குரங்கணில் முட்டம்கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.
சொற்பிரிப்பு
மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனைஉய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்தகொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.
உரை

கரிய மேனியை உடைய அரக்கர்‌ தலைவன்‌ ஆகிய இராவணனைப்‌ பிழைக்க முடியாதபடி அடர்த்துப்பின்‌ அவனுக்குச்‌ சிவபிரான்‌ இனிய அருளை வழங்கினான்‌. மேலும்‌, சிவபிரான்‌, அடியவர்‌ செய்து அணிவித்த மலர்மாலைகளுடன்‌ திருக்குரங்கணில்‌ முட்டத்தில்‌ எழுந்தருளியுள்ளான்‌. அவனைக்‌ கைகளால்‌ தொழுபவர்‌ வினைப்பயன்களைக்‌ காணுதல்‌ இலராவர்‌.

9

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகும்குறியால் நிமிர்ந் தான்றன் குரங்கணில் முட்டம்நெறியால்தொழு வார்வினை நிற்ககிலாவே3.பாடம் : 3நிற்கிலாவே
சொற்பிரிப்பு
வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும்அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும்குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.
உரை

மணம்‌ கமழும்‌ தாமரை மலரில்‌ உறையும்‌ நான்முகனும்‌, திருமாலும்‌ அடிமுடி அறிய முடியாது வருந்தி சிவபிரானை வணங்குமாறு அழல்‌ உருவாய்‌ ஓங்கி நின்றருளியவன்‌. அவ்வாறான சிவபெருமான்‌ விளங்கும்‌ திருக்குரங்கணில்‌ முட்டத்தை முறையாக வணங்குவார்‌ வினைகள்‌ இலராவர்‌.

10

கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்குழுமின்சடை யண்ணல் குரங்கணில் முட்டத்தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.
சொற்பிரிப்பு
கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்,வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்!குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்துஎழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.
உரை

தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற்‌ போர்த்தித்‌ திரியும்‌ பெளத்தர்கள்‌, தம்‌ கொள்கையில்‌ வழுவாத சமணர்கள்‌ ஆகியோர்‌ உரைகளைக்‌ கொள்ளாதீர்‌. திருக்குரங்கணில்‌ முட்டத்து இறைவனாகிய சிவபிரான்‌, மின்னல்போலத்‌ திரண்டுள்ள சடைமுடியை உடையவன்‌, அழகிய வெண்பிறையை அணிந்தவன்‌. அவனுடைய திருவடிகளை வணங்குவதே நம்‌ கடமை ஆகும்‌.

11

கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டம்சொல்லார் தமிழ்மாலை செவிக்கினி தாகவல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.
சொற்பிரிப்பு
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆகவல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.
உரை

கல்லால்‌ இயன்ற மதில்களால்‌ சூழப்பட்டது சீகாழிப்பதி. அங்குத்‌ தோன்றியவர்‌ ஞானசம்பந்தர்‌. சிவபிரான்‌ கொல்லும்‌ தன்மையுடைய மழுவாயுதக்தைக்‌ கையில்‌ ஏந்தி, திருக்குரங்கணில்‌ முட்டத்தில்‌ எழுந்தருளியுள்ளான்‌. அந்த இறைவரது ஞானசம்பந்தர்‌ பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச்‌ செவிக்கு இனிதாக. ஓதி ஏத்த வல்லார்க்குப்‌ பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்‌.