திருமுறை 1 · 1.030 · 11

திருப்புகலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
சீர்காழி - 03-புகலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்பதியா வதுபங் கயநின் றலரத்தேன்பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.
உரை

மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்பது விதித்த விதியாக இருந்தது. அதன்‌ காரணமாக மரணநேரம்‌ நெருங்கியது. அவர்‌ இறைவழிபாடு செய்ததன்‌ காரணமாக, விதியின்‌ பயனாய்ச்‌ சிவபிரான்‌ தானே வெளிப்பட்டார்‌. வெளிப்பட்டு மார்க்கண்டேயரை இழுத்துச்‌ செல்லச்‌ சினந்து வந்த கூற்றுவனை உதைத்து அருளினார்‌. அவ்வகைப்பட்ட சிவபிரான்‌ எழுந்தருளிய தலம்‌ திருப்புகலி. அந்தத்‌ தலம்‌ தாமரை மலர்கள்‌ மலர்ந்த நீர்‌ நிலைகளும்‌, தேன்‌ கூடுகள்‌ நிறைந்த பொழில்களும்‌ சூழ்ந்தது ஆகும்‌.

2

ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்தபொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்தபொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.
உரை

சிவபிரான்‌, பகைவராய்‌ மாறிய அசுரர்களின்‌ முப்புரங்களையும்‌ எரித்து அழித்தார்‌. மின்னல்‌ போன்ற இடையினை உடைய உமையன்னையோடு கூடியவர்‌. அவர்‌ அன்னை உமையோடு சேர்ந்த திருவுருவாய்‌ எழுந்தருளிய இடம்‌ திருப்புகலியாகும்‌. அந்தத்‌ தலம்‌ குளிர்ந்த கடல்‌ ஒரு புறம்‌ சூழ, பொன்‌ போன்ற நெல்மணிகள்‌ நிறைந்த வயல்களை உடையது.

3

வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்புலியின் னதள் கொண்டரை யார்த்த புனிதன்மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்பொலியும் புனற்பூம் புகலிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.
உரை

சிவபிரான்‌, கலைகளாகிய வலிமை குறைந்த பிறைமதியைச்‌ செஞ்சடைமீது வைத்துள்ள மணாளன்‌ ஆவார்‌. அவர்‌ புலியின்‌ தோலை இடையில்‌ கட்டிய புனிதன்‌ ஆவார்‌. அவ்வகைப்‌ பட்ட சிவபிரான்‌ விரும்பும்‌ பதி அழகிய திருப்புகலி நகராகும்‌. அங்கு மேம்பட்ட வேதியர்கள்‌ நிறைந்துள்ளனர்‌. மேலும்‌, அது செறிந்து பொலியும்‌ நீர்வளம்‌ சான்றது.

4

கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறிஅயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்இயலாலுறை யும்மிடம் எண்திசை யோர்க்கும்புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே.
சொற்பிரிப்பு
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறிஅயலார் கடையில் பலி கொண்ட அழகன்இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.
உரை

சிவபிரான்‌, கயல்மீன்‌ போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும்‌ விடைமீது ஏறி காட்சி தருவார்‌. அவர்‌ அயலார்‌ இல்லங்களில்‌ பலிகொண்டருளும்‌ அழகன்‌ ஆவார்‌. சிவபிரான்‌ விரும்பித்‌ தங்கும்‌ இடம்‌ திருப்புகலி நகராகும்‌. அந்த நகர்‌ எட்டுத்‌ திசைகளில்‌ உள்ளோரும்‌ செவி சாய்த்துக்‌ கேட்கும்‌ இடிஓசையை எழுப்புகின்ற கார்மேகங்கள்‌ தங்கும்‌ கடலை அடுத்துள்ளதாகும்‌.

5

காதார்கன பொற்குழை தோடதி லங்கத்தாதார்மலர் தண்சடை1 யேற முடித்துநாதான் உறையும் மிடமா வதுநாளும்போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.பாடம் : 1தன்சடை
சொற்பிரிப்பு
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,நாதான் உறையும் இடம் ஆவது நாளும்போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.
உரை

சிவபிரானுடைய காதுகளில்‌ கனவிய பொன்னால்‌ இயன்ற குழை, தோடு ஆகியன இலங்குகின்றன. அவர்‌, மகரந்தம்‌ மருவிய மலர்களைத்‌ தண்ணிய சடையின்கண்‌ பொருந்தச்‌ சூடியுள்ளார்‌. மேலும்‌ அவர்‌, எல்லா உயிர்கட்கும்‌ நாதனாக விளங்குகிறார்‌. நாள்தோறும்‌ புதிய பூக்கள்‌ நிறைந்து விளங்கும்‌ பொழில்கள்‌ சூழ்ந்த புகலி நகரே சிவபிரான்‌ உறையும்‌ இடமாகும்‌.

6

வலமார்படை மான்மழு2 ஏந்திய மைந்தன்கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.பாடம் : 2மாமழு
சொற்பிரிப்பு
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.
உரை

சிவபிரான்‌ வெற்றி பொருந்திய சூலப்படை, மான்‌, மழு ஆகியவற்றை ஏந்திய வலிமை உடையவன்‌ ஆவான்‌. அவன்‌ மரக்கலங்கள்‌ உலாவும்‌ கடலிடைத்‌ தோன்றிய நஞ்சினை அமுதாக உண்டவன்‌. அவ்வகைப்பட்ட சிவபிரான்‌ அடியார்‌ குழாத்தோடு உறையும்‌ பதி திருப்புகலி நகராகும்‌. அந்நகர்‌ கொன்றை மலர்கள்‌ பொன்‌ போன்ற இதழ்களையும்‌, மகரந்தங்களையும்‌ சொரியத்‌ தேன்‌ நிலத்தில்‌ பாயும்‌ வயல்கள்‌ உடையது.

7

கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாகஅறுத்தான் அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே.
சொற்பிரிப்பு
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.
உரை

சிவபிரான்‌ மும்மதில்களும்‌ கனலால்‌ வெந்தழியுமாறு சினந்தான்‌. அவன்‌ கடலிடை விளங்கத்‌ தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு, கழுத்தில்‌ தரித்தவன்‌. மேலும்‌ அவன்‌ பிரமனது ஐந்து தலைகளில்‌ ஒன்றை அறுத்து, அதனைக்‌ கையில்‌ தாங்கியவன்‌. அந்தச்‌ சிவபிரான்‌ எழுந்தருளிய இடம்‌ அழகிய திருப்புகலி நகராகும்‌.

8

தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்லஎழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்றகழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டிப்பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே.
சொற்பிரிப்பு
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்றகழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.
உரை

தாம்‌ செய்யும்‌ பணிகளால்‌ மேம்பட்ட தொண்டர்கள்‌ கயிலை மலையில்‌ சிவபிரானைத்‌ தோத்திரம்‌ சொல்லிப்‌ போற்றுகின்றனர்‌. அந்தக்‌ கயிலை மலையில்‌ முன்னொரு காலத்தில்‌ இராவணனைச்‌ செற்ற திருவடிகளை உடையவன்‌. அந்தச்‌ சிவபிரான்‌ உறையும்‌ இடம்‌ திருப்புகலி நகராகும்‌. அது தாழை மரங்கள்‌ செறிந்து விளங்கும்‌ பொழில்கள்‌ சூழ்ந்த நகராகும்‌.

9

மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனிநீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே.
சொற்பிரிப்பு
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்துஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனிநீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.
உரை

சிவபிரான்‌ இறந்தவர்களை எரிக்கும்‌ சுடலையில்‌ விளையும்‌ சாம்பலை உடலில்‌ பூசிக்‌ கொள்கிறார்‌. அந்த மயானத்தில்‌ ஆடும்‌ தலைவராகவும்‌ இருக்கிறார்‌. அவர்‌ திருமால்‌, பிரமன்‌ பொருட்டுத்‌ தம்மேனியை அழல்‌ உருவாக்கி ஓங்கி நின்றார்‌. பாம்பை மாலையாகத்‌ தரித்துள்ள சிவபிரானுடைய நகர்‌ அழகிய திருப்புகலிப்‌ பதியாகும்‌.

10

உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்கிடையாதவன் தன்நகர் நன்மலி பூகம்புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.
சொற்பிரிப்பு
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.
உரை

பெளத்தர்கள்‌ கீழ்‌ உடையோடு மெல்லிய ஆடையைப்‌ போர்த்துத்‌ திரிவார்கள்‌. அவர்களும்‌, சமணர்களும்‌ கீழ்மக்கள்‌. அவர்கள்‌ பொருந்தாதவற்றைக்‌ கூறுவார்கள்‌. அந்தக்‌ கீழோரின்‌ வேதங்களுக்கு அகப்படாதவன்‌ சிவபிரான்‌. நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள்‌ சூழ்ந்த திருப்புகலி நகரே அந்தச்‌ சிவபிரானது நன்னகர்‌.

11

இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்புரைக்கும்பொழிற் பூம்புக லிந்நகர் தன்மேல்உரைக்குந்தமிழ்ஞான சம்பந்தனொண் மாலைவரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே.
சொற்பிரிப்பு
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலைவரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.
உரை

சிவபிரான்‌ ஆரவாரிக்கும்‌ கங்கை நீரைத்‌ தமது சிவந்த சடைமீது வைத்துள்ளார்‌. அவர்‌ எம்‌ தலைவர்‌. உயர்ந்த சோலைகளால்‌ சூழப்பட்ட அழகிய திருப்புகலிப்‌ பதி சிவபிரானுக்குரியது. அந்தப்‌ பதியைக்‌ குறித்துத்‌ தமிழ்ஞானசம்பந்தன்‌ உரைத்த அழிய இப்பதிக மாலையைத்‌ தமதாக்கி ஓதும்‌ தொழில்‌ வல்லவர்‌ நல்லவர்‌ ஆவர்‌.