திருமுறை 1 · 1.026 · 11

திருப்புத்தூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
புத்தூர்
நாடு
பாண்டியநாடு

1

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைதிங்க ளோடு திளைக்குந் திருப்புத் தூர்க்கங்கை தங்கு முடியா ரவர்போலும்எங்கள் உச்சிஉறையும் இறையாரே.
சொற்பிரிப்பு
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலைதிங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,கங்கை தங்கும் முடியார் அவர்போலும்எங்கள் உச்சி உறையும் இறையாரே.
உரை

திருப்புத்தூர்‌ வளம்‌ நிறைந்தது. அங்கு விரும்பத்தக்க தேன்‌ விம்மிச்‌ சுரக்கின்ற, மணம்‌ நிறைந்த சோலைகள்‌ உள்ளன. சோலைகளில்‌ உள்ள மரங்கள்‌ வானளாவ உயர்ந்துள்ளன. உயர்ந்த மரங்கள்‌ அங்குத்‌ தவழும்‌ திங்களோடு பழகித்‌ திளைக்கின்றன. அவ்வளவு வளமுடைய திருப்புத்தூரில்‌ எழுந்தருளிய சிவபெருமானார்‌ கங்கை தங்கிய சடைமுடியினராகக்‌ காட்டி தருகிறார்‌. அவர்‌ எங்கள்‌ உச்சியில்‌ உறையும்‌ இறைவர்‌ ஆவார்‌.

2

வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.
சொற்பிரிப்பு
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத்தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்,ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.
உரை

பன்றி வடிவம்‌ எடுத்த திருமால்‌ உலகை அழிக்கத்‌ தொடங்கினார்‌. அதனைக்‌ கண்ட தேவர்கள்‌ அஞ்சினார்கள்‌. சிவபெருமானிடம்‌ தங்களையும்‌ உலகையும்‌ காப்பாற்ற வேண்டும்‌ என்று வேண்டினார்கள்‌. அவர்களுடைய வேண்டுகோளைப்‌ பெருமான்‌ ஏற்றார்‌. பன்றியை அடக்கி, அதன்‌ பல்லையும்‌ கொம்பையும்‌ தம்‌ மார்பில்‌ அணிந்து கொண்டார்‌. திருப்புத்தூரில்‌ பொழில்கள்‌ அதிகம்‌ உண்டு. அவைகள்‌ வேனிற்காலத்தில்‌ மணத்தை வெளிப்படுத்தும்‌. சோலைகளும்‌ நிறைய உள்ளன. அவைகளில்‌ வாழும்‌ வண்டுகள்‌ தேனை உண்டு திளைத்து ஒலி செய்யும்‌. அவ்வாறு வளம்‌ நிறைந்த திருப்புத்தூரில்‌ சிவபிரான்‌ குறைவின்றி உறைந்துள்ளார்‌.

3

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்ஓங்கு கோயில் உறைவா ரவர்போலும்தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.
சொற்பிரிப்பு
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.
உரை

சிவபிரான்‌, தம்மை அடைக்கலமாக அடைந்த தங்களைத்‌ தவழவிட்ட செந்நிற முடியினை உடையவர்‌. சிவபிரான்‌, தம்முடியின்மிசை தேன்நிறைந்த கொன்றை மலர்களைச்‌ சூடியுள்ளார்‌. நல்ல வரிகளை உடைய வண்டுகள்‌ பக்கங்களில்‌ இருந்து இசைபாடிக்‌ கொண்டே, பெருமான்‌ சூட்டியுள்ள கொன்றை மலரில்‌ திளைக்கின்றன. திருப்புத்தூரில்‌ ஓங்கி உயர்ந்துள்ள கோவிலில்‌ சிவபிரான்‌ எழுந்தருளிய பெருமானார்‌ ஆவார்‌.

4

நாற விண்ட நறுமா மலர்கவ்வித்தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.
சொற்பிரிப்பு
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.
உரை

சிவபிரான்‌, ஆன்‌ ஏற்றுக்‌ கொடியைத்‌ தனதாகக்‌ கொண்டவர்‌. திருப்புத்தூர்‌ வளம்மிக்கது. மணம்‌ வீசுமாறு சிறந்த நறுமலர்கள்‌ மலர்ந்துள்ளன. வண்டுகள்‌ அவைகளைத்‌ தம்‌ வாயால்‌ கவ்வித்‌ தேனை உண்டு திளைக்கின்றன. சிவபிரான்‌ அந்தத்‌ திருப்புத்தூரில்‌ பலகாலம்‌ தங்கிய வாழ்க்கையினை உடையவர்‌ ஆவார்‌.

5

இசைவி ளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும்வசைவி ளங்கும் வடிசேர்1 நுதலாரே.பாடம் : 1மடிசேர்
சொற்பிரிப்பு
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத்திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,பசை விளங்கப் படித்தார் அவர் போலும்வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.
உரை

திருப்புத்தூர்‌ புகழ்‌ வாய்ந்தது. அது புகழால்‌ விளக்கம்‌ பெற்றது. இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவது. நான்கு திசைகளிலும்‌ பொழில்கள்‌ சூழ்ந்தது. இவ்வகைப்பட்ட திருப்புத்தூரில்‌ சிவபிரான்‌ எழுந்தருளியுள்ளார்‌. கங்கையாகிய பெண்‌ விளங்கும்‌ அழகிய சென்னியை உடையவர்‌. அவர்‌, தம்மை வழிபடுவோர்க்கு அன்பு வளருமாறு பழகும்‌ பெருமானார்‌ ஆவார்‌.

6

வெண்ணி றத்த விரையோ டலருந்தித்தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.
சொற்பிரிப்பு
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.
உரை

திருப்புத்தூர்‌ தண்ணீர்‌ வளம்‌ மிக்கது. அங்குள்ள மலர்கள்‌ வெள்ளிய நிறம்‌ உடையனவாய்‌ உள்ளன. அவை மணம்‌ பொருந்தியவை. அங்குத்‌ தெளிந்த தன்மை உடையதாய்‌ உள்ள தண்ணீர்‌, அந்த மலர்களை அடித்துக்‌ கொண்டு பாயும்‌ வளம்‌ வாய்ந்தது. அந்தத்‌ திருப்புத்தூரில்‌ எழுந்தருளியுள்ள சிவபெருமான்‌ பேரொளிப்‌ பிழம்பானவர்‌. இவர்‌ வெண்மை நிறமுடைய விடை உருவம்‌ எழுதிய கொடியை உடையவரும்‌ ஆவர்‌.

7

நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும்செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்மையுள் நஞ்ச மருவும் மிடற்றாரே.
சொற்பிரிப்பு
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்,தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.
உரை

திருப்புத்தூர்‌ வயல்வளம்‌ நிறைந்தது. அங்கு நெய்தல்‌, ஆம்பல்‌, செங்கழுநீர்‌ ஆகிய மலர்கள்‌ வயல்களில்‌ எங்கும்‌ மலர்ந்து, நிறைந்து விளங்கும்‌. சிவபிரான்‌, கருநீலம்‌ பொருந்திய நஞ்சு மருவும்‌ கழுத்தை உடையவர்‌. இவர்‌ திருப்புத்தூரில்‌ உமையொரு பாகம்‌ மகிழ்ந்த சிவனாய்‌ எழுந்தருளியுள்ளார்‌.

8

கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்இருக்க வல்ல இறைவ ரவர்போலும்அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
சொற்பிரிப்பு
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்இருக்க வல்ல இறைவர் அவர் போலும்அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
உரை

திருப்புத்தூர்‌ செல்வம்‌ நிறைந்த செம்மையாளர்கள்‌ வாழும்‌ இடம்‌. திருவிழாக்கள்‌ பல நிகழும்‌ இடம்‌. இங்குள்ள சிவபெருமான்‌, இராவணனாகிய அரக்கனைக்‌ கால்விரலால்‌ தளர அடர்த்தவர்‌. அவர்‌ திருப்புத்தூரில்‌ எழுந்தருளி இருக்கும்‌ வல்லவரான இறைவராவார்‌.

9

மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞைதெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்பெருகி வாழும் பெருமா னவன்போலும்பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
சொற்பிரிப்பு
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞைதெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்பெருகி வாழும் பெருமான் அவன்போலும்பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
உரை

திருப்புத்தூரில்‌, எங்கும்‌ பொருந்தியனவாய்‌ வளரும்‌ இளமயில்கள்‌ தெருக்கள்‌ தோறும்‌ உலவிக்‌ களிக்கின்றன. அங்கு எழுந்தருளியுள்ள இறைவன்‌, பிரமனும்‌ திருமாலும்‌ அறியமுடியாத பெரியோன்‌ ஆவான்‌. அவன்‌ திருப்புத்தூரில்‌ பெருமை பெருகியவனாய்‌ வாழும்‌ பெருமான்‌ ஆவான்‌.

10

கூறைபோர்க்குந் தொழிலா ரமண்கூறல்தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்ஏறுகொண்ட கொடியெம் இறையாரே.
சொற்பிரிப்பு
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல்தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர்,ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும்ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.
உரை

மேல்‌ ஆடையைப்‌ போர்த்துத்‌ திரிதலைத்‌ தொழிலாகக்‌ கொண்ட பெளத்தர்‌, சமணர்‌ ஆகியோருடைய உரைகளை நம்பாதீர்கள்‌. ஆனேறு எழுதிய கொடியினை உடையவராய்த்‌ திருப்புத்தூரில்‌ நான்கு வேதங்களாகவும்‌, ஆறு அங்கங்களாகவும்‌ விளங்கும்‌ சிவபெருமானைத்‌ தெளிமின்கள்‌.

11

நல்ல கேள்வி ஞான சம்பந்தன்செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்அல்லல் தீரும் அவலம் அடையாவே.
சொற்பிரிப்பு
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்அல்லல் தீரும்; அவலம் அடையாவே.
உரை

செல்வரும்‌, உயர்ந்தவருமான சிவபெருமான்‌ உறையும்‌ திருப்புத்தூரை, நன்மை தரும்‌ வேதங்களை உணர்ந்த ஞானசம்பந்தன்‌ அடைந்து, வழிபட்டுச்‌ சொல்லிய பத்துப்‌ பாடல்களையும்‌ ஓத வல்லவர்களுக்குத்‌ துன்பங்கள்‌ நீங்கும்‌. எக்காலத்திலும்‌ அவர்களை அவலம்‌ அடையா.