திருமுறை 1 · 1.025 · 11

திருச்செம்பொன்பள்ளி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
செம்பொன்பள்ளி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்திருவார் செம்பொன் பள்ளி மேவியகருவார் கண்டத் தீசன் கழல்களைமருவா தவர்மேல் மன்னும் பாவமே.
சொற்பிரிப்பு
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களைமருவாதவர் மேல் மன்னும், பாவமே.
உரை

சிவபெருமான்‌, மணம்‌ பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாய்‌ உடையவர்‌. கருநீலம்‌ பொருந்திய கழுத்தை உடைய சிவபிரான்‌, திருமகள்‌ வாழும்‌ செம்பொன்பள்ளி என வழங்கும்‌ திருத்தலக்‌ கோயிலில்‌ எழுந்தருளியுள்ளார்‌. அவருடைய திருவடிகளை வணங்கி, அவற்றைத்‌ தம்‌ மனத்தே பொருந்த வையாதவரைப்‌ பாவங்கள்‌ பற்றும்‌.

2

வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்சீரார் செம்பொன் பள்ளி மேவியஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்சேரா தவர்மேற் சேரும் வினைகளே.
சொற்பிரிப்பு
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்சேராதவர் மேல் சேரும், வினைகளே.
உரை

சிவபெருமான்‌, கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர்‌. அழகிய முறுக்கேறிய சடைமுடியை உடைய எம்‌ ஈசனாகிய சிவபிரான்‌, சிறப்புப்‌ பொருந்திய செம்பொன்பள்ளியில்‌ எழுந்தருளியுள்ளார்‌. அந்தச்‌ சிவபிரானைச்‌ சென்று வணங்கி இடைவிடாது மனத்தில்‌ நினையாதவர்களிடம்‌ வினைகள்‌ சென்று சேரும்‌.

3

வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்திரையார் செம்பொன் பள்ளி மேவியநரையார் விடையொன் றூரும் நம்பனைஉரையா தவர்மே லொழியா ஊனமே.
சொற்பிரிப்பு
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனைஉரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.
உரை

சிவபிரான்‌, செம்பொன்பன்னியில்‌ எழுந்தருளியுள்ளார்‌. செம்பொன்பள்ளி பொன்னி நதிக்கரையில்‌ அமைந்துள்ளது. மலைகளில்‌ செழித்து வளர்ந்த சந்தன ‌மரங்களோடு, அகில்‌ மரங்களையும்‌ பொன்னி நதி அடித்துக்‌ கொண்டு வந்து, கரையில்‌ இருக்கும் செம்பொன்பள்ளியில் சேர்க்கும். அத்தகைய வளம் பொருந்திய அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும்‌ சிவபிரான்‌ வெண்ணிறம்‌ பொருந்திய விடை ஒன்றில்‌ ஊர்ந்து வருகிறான்‌. அவனுடைய புகழை உரையாதவர்களைப்‌ பற்றியுள்ள குற்றங்கள்‌ ஒழியா.

4

மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்செழுவார் செம்பொன் பள்ளி மேவியஎழிலார் புரிபுன் சடையெம் இறைவனைத்தொழுவார் தம்மேல் துயர மில்லையே.
சொற்பிரிப்பு
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.
உரை

செம்பொன்பன்ளியில்‌ எழுந்தருளிய சிவபெருமான்‌ மழுவாள்‌ ஏந்தியும்‌, உமையொரு பாகனாகவும்‌, காட்சி தருகிறான்‌. அந்த ஊர்‌ வளம்‌ பொருந்தியது. மேலும், சிவபிரான்‌ அழகு பொருந்தியதும்‌, முறுக்கேறியதுமான சிவந்த சடைமுடியை உடையவனாகவும்‌ இருக்கிறான்‌. அவ்வகைப்பட்ட எம்‌ இறைவனைத்‌ தொழுபவர்களுக்குத்‌ துயரம்‌ இல்லை.

5

மலையான் மகளோ டுடனாய் மதிளெய்தசிலையார் செம்பொன் பள்ளி யானையேஇலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்நிலையா வணங்க நில்லா வினைகளே.
சொற்பிரிப்பு
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்தசிலை ஆர் செம்பொன் பள்ளியானையேஇலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,நிலையா வணங்க, நில்லா, வினைகளே.
உரை

செம்பொன்பள்ளியில்‌ விளங்கும்‌ சிவபிரான்‌ மலையரையன்‌ மகளாகிய பார்வதி தேவி உடனாய்க்‌ காட்சி தருகிறான்‌. அவன்‌ அசுரர்களின்‌ மும்மதில்களை எய்து அழித்த மலை வில்லை உடையவன்‌. அந்தச்‌ சிவபிரானையே இலைகளையும்‌ மலர்களையும்‌ கொண்டு இரவிலும்‌, நண்பகலிலும்‌, வேறொன்றிலும்‌ மனம்‌ சென்று பற்றாது, அவனிடமே சென்று நிலைத்து நிற்குமாறு வணங்குவார்மேல்‌ வினைகள்‌ நில்லா.

6

அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்சிறையார் செம்பொன் பள்ளி மேவியகறையார் கண்டத் தீசன் கழல்களைநிறையால் வணங்க நில்லா வினைகளே.
சொற்பிரிப்பு
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களைநிறையால் வணங்க, நில்லா, வினைகளே.
உரை

பொன்னியாற்றங்கரையில்‌ அமைந்த செம்பொன்பள்ளியில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளான்‌. அந்த ஆறு, பாறைகளில்‌ பொருந்திவரும்‌ நீரில்‌ அகில்‌ மரங்களை அடித்து வந்து கரைசேர்க்கும்‌. அங்கு எழுந்தருளிய சிவபிரான்‌ விடக்கறை பொருந்திய கழுத்தை உடைய ஈசன்‌, அவனுடைய திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க, வினைகள்‌ நில்லா.

7

பையார் அரவே ரல்கு லாளொடும்செய்யார் செம்பொன் பள்ளி மேவியகையார் சூல மேந்து கடவுளைமெய்யால் வணங்க மேவா வினைகளே.
சொற்பிரிப்பு
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,கை ஆர் சூலம் ஏந்து, கடவுளைமெய்யால் வணங்க, மேவா, வினைகளே.
உரை

சிவபிரான்‌, அரவின்படம்‌ போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையைப்‌ பாகமாக உடையவன்‌. அவன்‌ வயல்கள்‌ சூழ்ந்த செம்பொன்பள்ளியில்‌ வீற்றிருக்கிறான்‌. கையில்‌ பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும்‌ சிவபிரானை, உடம்பால்‌ வணங்க வினைகள்‌ மேவா.

8

வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்தேனார் செம்பொன் பள்ளி மேவியஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கைஆனான் கழலே அடைந்து வாழ்மினே.
சொற்பிரிப்பு
வானார் திங்கள் வளர் புன்சடை வைத்துத்தேனார் செம்பொன்பள்ளி மேவியஊனார் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கைஆனான் கழலே அடைந்து வாழ்மினே.
உரை

சிவபிரான்‌, இனிமை பொருந்திய செம்பொன்பள்ளியில்‌ எழுந்தருளியுள்ளான்‌. அவன்‌ வானத்தில்‌ விளங்கும்‌ பிறைமதியை வளர்ந்துள்ள தன்னுடைய சிவந்த சடைமீது வைத்துள்ளான்‌. சிவபிரான்‌, புலால்‌ பொருந்திய பிரமனுடைய தலையோட்டில்‌ பலியேற்று உழல்வதையே தன்‌ வாழ்வின்‌ தொழிலாகக்‌ கொண்டவன்‌. அந்தச்‌ சிவபிரான்‌ திருவடிகளையே அடைந்து வாழ்வீர்களாக.

9

காரார் வண்ணன் கனகம் அனையானும்தேரார் செம்பொன் பள்ளி மேவியநீரார் நிமிர்புன் சடையெம் நிமலனைஓரா தவர்மே லொழியா ஊனமே.
சொற்பிரிப்பு
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,தேரார் செம்பொன் பள்ளி மேவிய,நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனைஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.
உரை

செம்பொன்பள்ளியில்‌ சிவபிரான்‌ இனிது அமர்ந்துள்ளான்‌. நீலமேகம்‌ போன்ற நிறழமுடையோனாகிய திருமாலும்‌, பொன்னிற மேனியனாகிய பிரமனும்‌ தேடிக்‌ காண முடியாதவனாகிய சிவபிரான்‌ அங்கு உள்ளான்‌. குற்றமற்ற எம்‌ இறைவன்‌ கங்கை அணிந்ததும்‌, நிமிர்ந்து கட்டியதுமான சிவந்த முடியை உடையவன்‌. அவனை மனம்‌ உருகித்‌ தியானிக்காதவர்கள்‌ மேல்‌ உளதாகும்‌ குற்றங்கள்‌ நீங்கா.

10

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்பேசா வண்ணம் பேசித் திரியவேதேசார் செம்பொன் பள்ளி மேவியஈசா என்ன நில்லா இடர்களே.
சொற்பிரிப்பு
“மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,பேசா வண்ணம் பேசித் திரியவே,தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவியஈசா!” என்ன, நில்லா, இடர்களே.
உரை

அழுக்கேறிய உடலினராகிய சமணரும்‌, மண்டை என்ற உண்கலத்தை ஏந்தித்‌ திரிபவர்களாகிய பெளத்தர்களும்‌ பேசக்‌ கூடாதவைகளைப்‌ பேசித்‌ திரிகின்றனர்‌. ஆனால்‌, பக்தர்களான அன்பர்கள்‌ ஒளிபொருந்திய செம்பொன்பன்னியில்‌ மேவிய ஈசா!” என்று கூற, அவர்களுடைய இடர்கள்‌ பலவும்‌ நில்லா.

11

நறவார் புகலி ஞான சம்பந்தன்செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.
சொற்பிரிப்பு
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.
உரை

ஞானசம்பந்தன்‌ தேன்நிறைந்த பொழில்களால்‌ சூழப்பட்ட புகலிப்பதியில்‌ தோன்றியவர்‌. வயல்கள்‌ சூழ்ந்த செம்பொன்பள்ளி சிவபிரான்‌ அருளைப்‌ பெறுமாறு பதிகப்பாடல்களைப்‌ பாடினார்‌. இப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ இசையோடு தமக்கு வந்த அளவில்‌ ஓதவல்லவர்கள்‌ ஓங்கி வாழ்வர்‌.