திருமுறை 1 · 1.023 · 11

திருக்கோலக்கா

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
கோலக்கா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மடையில் வாளை பாய மாதரார்குடையும் பொய்கைக் கோலக் காவுளான்சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
சொற்பிரிப்பு
மடையில் வாளை பாய, மாதரார்குடையும் பொய்கைக் கோலக்கா உளான்சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள்உடையும், கொண்ட உருவம் என்கொலோ?
உரை

நீரைத்‌ தேக்கி வெளியிடும்‌ மடையில்‌ வாளைமீன்கள்‌ துள்ளிப்‌ பாயுமாறு, பெண்கள்‌ கையால்‌ குடைந்து நீராடுகின்ற வளமான பொய்கைக்‌ கரையில்‌ அமைந்துள்ளது திருக்கோலக்கா. அந்தத்‌ திருக்கோலக்காவில்‌ எழுந்தருளியுள்ள சிவபிரான்‌ சடைமுடியையும்‌ அதன்கண்‌ பிறையையும்‌ கொண்டிருக்கிறான்‌. திருமேனி முழுவதும்‌ திருநீற்றுப்‌ பூச்சையும்‌, இடையில்‌ ஆடையாகக்‌ கோவண உடையையும்‌ கொண்ட உருவம்‌ உடையவனாக இருப்பது ஏனோ?

2

பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னிகொண்டான் கோலக் காவு கோயிலாக்கண்டான் பாதங் கையாற் கூப்பவேஉண்டான் நஞ்சை உலக முய்யவே.
சொற்பிரிப்பு
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னிகொண்டான், கோலக்காவு கோயிலாக்கண்டான், பாதம் கையால் கூப்பவே,உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.
உரை

சிவபிரான்‌, உமையன்னையைத்‌ தன்னுடைய திருமேனியில்‌ இடப்பாகமாகக்‌ கொண்டான்‌. கலைகள்‌ ஒவ்வொன்றாகக்‌ குறைந்து வந்த இளம்பிறையைச்‌ சடைமுடிமீது ஏற்றுக்‌ கொண்டான்‌. திருப்பாற்கடலில்‌ நஞ்சு தோன்றியபோது “காவாய்‌” என அனைவரும்‌ கைகூப்பி வணங்க, உலகம்‌ உய்யுமாறு அந்த நஞ்சினை உண்டு அருள்‌ செய்தான்‌. இவ்வளவு சிறப்புக்களை உடைய சிவபிரான் ‌ திருக்கோலக்காவினைத்தன்‌ இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌.

3

பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்கோணற் பிறையன் குழகன் கோலக்காமாணப் பாடி மறைவல் லானையேபேணப் பறையும் பிணிக ளானவே.
சொற்பிரிப்பு
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,கோணல் பிறையன், குழகன், கோலக்காமாணப் பாடி, மறை வல்லானையேபேண, பறையும், பிணிகள் ஆனவே.
உரை

சிவபிரான்‌ அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணியாகக்‌ கொண்டவன்‌. அவன்‌, சிவந்த சடையின்‌ மேல்‌ வளைந்த பிறையைச்‌ சூடியவன்‌. என்றும்‌ மாறாத இளமைத்‌ தன்மையை உடைய அந்தச்‌ சிவபிரான்‌ திருக்கோலக்காவில்‌ எழுந்தருளியுள்ளான்‌. வேதங்களை அருளிய அந்தப்‌ பெருமானைப்‌ பேணியும்‌, தருக்கோலக்காவின்‌ மாட்சிமை தங்கப்‌ பாடியும்‌ தொழுதால்‌ பிணிகள்‌ யாவும்‌ நீங்கும்‌.

4

தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்குழுக்கொள் பூதப் படையான் கோலக்காஇழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.
சொற்பிரிப்பு
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,குழுக் கொள் பூதப்படையான், கோலக்காஇழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!
உரை

பல்வேறு காலங்களிலும்‌ செய்த பாவங்களை நீக்க வேண்டும்‌ என்று விரும்புகின்றவர்களே! மழு ஆயுதத்தைப்‌ படைக்கலனாகக்‌ கொண்ட செல்வன்‌ சிவபிரான்‌. அவன்‌ மானை ஏந்திய அழகிய கைகளை உடையவன்‌; பல்வேறு குழுக்களாக அமைந்துள்ள பூதங்களின்‌ படையை உடையவன்‌. இவ்வளவு சிறப்புக்களைத்‌ தாங்கிய சிவபிரானுடைய திருக்கோலக்காவைத்‌ தவறாமல்‌ சென்று தரிசித்து வாருங்கள்‌. உங்களுடைய பாவங்கள்‌ அகலும்‌.

5

மயிலார் சாயல் மாதோர் பாகமாஎயிலார் சாய எரித்த1 எந்தைதன்குயிலார் சோலைக் கோலக் காவையேபயிலா நிற்கப் பறையும் பாவமே.பாடம் : 1எயிலார் புரமூன் றெரித்த
சொற்பிரிப்பு
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,எயிலார் சாய எரித்த எந்தை தன்குயில் ஆர் சோலைக் கோலக்காவையேபயிலா நிற்க, பறையும், பாவமே.
உரை

சிவபிரான்‌, ஆண்‌ மயில்‌ போலும்‌ ஒளி வீசும்‌ நடையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன்‌. அவன்‌, அரக்கர்களுடைய முப்புரங்கள்‌ கெடுமாறு எரித்தவன்‌. அவன்‌ எங்கள்‌ தந்‌தையாவான்‌. குயில்கள்‌ நிறைந்து வாழும்‌ சோலைகளை உடைய திருக்கோலக்காவை விரும்பி உறைகிறான்‌. அந்தத்‌ திருக்கோலக்காவைப்‌ பலகாலும்‌ நினைக்கப்‌ பாவங்கள்‌ நீங்கும்‌.

6

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.
சொற்பிரிப்பு
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!
உரை

ஒன்றிலிருந்து .பிறிதொன்றாகக்‌ கிளைக்கும்‌ வினைப்பகையை நீக்கிக்‌ கொள்ள விரும்புகின்றவர்கனே! கொடிகள்‌ கட்டப்பட்டு, விழாக்கள்‌ பலவும்‌ நிகழ்த்தப்பெறும்‌ தலம்‌ திருக்கோலக்கா. அங்கு விரும்பித்‌ தங்கும்‌ எம்‌ தலைவன்‌ ஆகிய சிவபிரான்‌, மணம்‌ பொருந்திய கொன்றை மலர்‌ விரவிய சென்னியை உடையவன்‌. அத்தகைய பெருமானுடைய திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.

7

நிழலார் சோலை நீல வண்டினங்குழலார் பண்செய் கோலக் காவுளான்கழலான் மொய்த்த பாதங் கைகளால்தொழலார் பக்கல் துயர மில்லையே.
சொற்பிரிப்பு
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்கழலால் மொய்த்த பாதம் கைகளால்தொழலார் பக்கல் துயரம் இல்லையே.
உரை

கோலக்காவில்‌ நிழல்‌ செறிந்த சோலைகள்‌ உள்ளன. அங்கு நீலநிறம்‌ பொருந்திய வண்டினங்கள்‌ வேய்ங்குழல்‌ போல இசை வழங்கும்‌. அவ்வகைப்பட்ட திருக்கோலக்காவில்‌ சிவபிரான்‌ விளங்கி உறைகிறான்‌. அவனுடைய வீரக்கழல்‌ செறிந்த திருவடிகளைக்‌ கைகூப்பித்‌ தொழுபவர்‌ பக்கம்‌ துயரம்‌ வாராது

8

எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனைமுறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்குறியார் பண்செய் கோலக் காவையேநெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
சொற்பிரிப்பு
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனைமுறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்குறி ஆர் பண் செய் கோலக்காவையேநெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
உரை

அலைகள்‌ எறியும்‌ கடலால்‌ சூழப்பட்ட இலங்கைக்கு மன்னன்‌ இராவணன்‌. அவன்‌ கயிலை மலையைப்‌ பெயர்க்க முயன்றான்‌. அதனால்‌, அவனுடைய நீண்ட கைகள்‌ முரிந்து போகும்படிச்‌ சிவபிரான்‌ அடர்த்தான்‌. அவ்வகைப்பட்ட சிவபிரானைச்‌ சுரத்தானங்களைக்‌ குறித்த பண்ணிசையால்‌ தருக்கோலக்காவில்‌, சிவாகம நெறிகளின்படி வழிபடுவார்களுக்கு வினைகள்‌ நீங்கும்‌.

9

நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்கூற்ற முதைத்த குழகன் கோலக்காஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.
சொற்பிரிப்பு
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,கூற்றம் உதைத்த, குழகன்—கோலக்காஏற்றன்—பாதம் ஏத்தி வாழ்மினே!
உரை

மணம்‌ பொருந்திய தாமரை மலர்மேல்‌ விளங்கும்‌ நான்முகனும்‌, ஆற்றல்‌ பொருந்திய ஆதிசேடனாகிய அணையில்‌ உறங்கும்‌ திருமாலும்‌ காண்பதற்கு இயலாதவன்‌ சிவபெருமான்‌. அவன்‌ இயமனை உதைத்த குழகன்‌. அத்தகைய சிவபெருமான்‌ திருக்கோலக்காவில்‌ விரும்பி உறைகிறான்‌. அந்த இறைவனுடைய திருவடிகளைப்‌ போற்றி வாழ்வீர்களாக.

10

பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்உற்ற துவர்தோ யுருவி லாளருங்குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்பற்றிப் பரவப் பறையும் பாவமே.
சொற்பிரிப்பு
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,உற்ற துவர் தோய் உரு இலாளரும்,குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்பற்றிப் பரவ, பறையும், பாவமே.
உரை

நீராடாமல்‌ தம்‌ உடலில்‌ சேர்ந்த மாசுடன்‌ தோன்றும்‌ சமணரும்‌, தம்‌ உடலில்‌ பொருந்திய துவராடையால்‌ தம்முடைய உருவத்தை மறைத்துக்‌ கொள்ளும்‌ பெளத்தர்களும்‌ குற்றமுடைய சமய நெறிகளை மேற்கொண்டவர்‌ ஆவர்‌. அவர்கள்‌ தம்முடைய தெய்வம்‌ என்று ஏற்றுக்கொள்ளாத திருக்கோலக்கா இறைவனைப்‌ பற்றுங்கள்‌. போற்றி வழிபடுங்கள்‌. பாவங்கள்‌ தீரும்‌.

11

நலங்கொள் காழி ஞான சம்பந்தன்குலங்கொள் கோலக் காவு ளானையேவலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.
சொற்பிரிப்பு
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,குலம் கொள் கோலக்கா உளானையேவலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.
உரை

திருவருள்‌ நலங்கள்‌ யாவும்‌ நிறைந்த சீகாழிப்பதியில்‌ தோன்றியவர்‌ ஞானசம்பந்தர்‌. பண்பால்‌ உயர்ந்த குலத்தினரைக்‌ கொண்டது திருக்கோலக்கா. அங்கு விளங்கும்‌ இறைவனை ஞானசம்பந்தர்‌ திருவருள்‌ வென்றியைக்‌ கொண்ட இந்தத்‌ திருப்பதிகப்‌ பாடல்களால்‌ பாடினார்‌. இந்தத்‌ திருப்பாடல்களை ஓதி வழிபட வல்ல வாய்மையாளர்கள்‌, அவர்களுடைய மலைபோன்ற திண்ணிய வினைகள்‌ நீங்கப்‌ பெற்றுச்‌ சிறந்து வாழ்வார்கள்‌.