திருமுறை 1 · 1.020 · 11

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொடடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசினவிடம்அடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதிதிடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.
சொற்பிரிப்பு
தட நிலவிய மலை நிறுவி, ஒர் தழல் உமிழ்தரு பட அரவுகொடு,அடல் அசுரரொடு அமரர்கள், அலை கடல் கடைவுழி எழும் மிகு சினவிடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதிதிடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.
உரை

தேவர்கள்‌ மரணத்தை வெல்லுவதற்கு அமுதம்‌ உண்ண விரும்பினர்‌. அசுரர்களோடு ஒரு ஒப்பந்தம்‌ பேசி, அதன்படி திருப்பாற்கடலில்‌ விசாலமான பெரிய மந்தர மலையை மத்தாக நிறுத்தினர்‌. அழல்போலும்‌ கொடிய நஞ்சை உடைய படத்தோடு கூடிய வாசுகி என்னும்‌ பாம்பைக்‌ கயிறாகக்‌ கொண்டு மந்தர மலையில்‌ சுற்றி இரு பக்கங்களிலும்‌ நீளமாக விட்டுக்‌ கொண்டனர்‌. ஒரு பக்கம்‌ தேவர்களும்‌, மற்றொரு பக்கம்‌ அசுரர்களுமாக நின்று கொண்டு பாம்பாகிய கயிற்றை மாறி மாறி இழுத்துக்‌ கடைந்தனர்‌. வாசுகி என்னும்‌ பாம்பானது வலிதாங்க முடியாமல்‌ அழல்போலும்‌ தனது கொடிய நஞ்சை உமிழ்ந்தது. திருப்பாற்கடலில்‌ அமுதம்‌ தோன்றுவதற்குப்‌ பதிலாக, அதனினின்றும்‌ மிகக்‌ கொடிய ஆலகாலம்‌ என்னும்‌ நஞ்சு வெளிப்பட்டது. இரண்டு நஞ்சும்‌ சேர்ந்து மிக உக்கிரமாகத்‌ தேவர்களையும்‌ அசுரர்களையும்‌, மற்று உலகில்‌ யாவரையும்‌ அழிக்கும்‌ நிலையில்‌ இருந்தது. சிவபெருமான்‌ அந்த ஆலகாலம்‌ என்னும்‌ விஷத்தை விழுங்கத்‌ தனது கண்டத்தில்‌ நிறுத்தி உலகவர்‌ யாவரையும்‌ அழிந்து போகாமல்‌ காப்பாற்றினார்‌. அவரது கழுத்து கருநீலநிறம்‌ பெற்றது. அவரது வாகனம்‌ விடை (எருது). அவர்‌ அதன்மீது ஏறி வருபவர்‌. இவர்‌ உறையும்‌ தலம்‌ திருவீழிமிழலை. நான்கு வேதங்களையும்‌ முறையாக ஓதி உணர்ந்து உறுதி வாய்ந்த மறையவர்‌ நிறைந்துள்ள பதியும்‌ இந்தத்‌ திருவீழிமிழலையே ஆகும்‌.

2

தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனதுவரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகுதிரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.
சொற்பிரிப்பு
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனதுவரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகுதிரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே.
உரை

சலந்தரன்‌ என்னும்‌ அசுரன்‌ தனது வலிமையால்‌ மண்ணுலக்தோரையும்‌, விண்ணுலகத்தோரையும்‌ நலிவுறுத்தி வந்தான்‌. அவனது மலை போன்ற தலையை அறுத்து வீழ்த்தியது சிவபெருமான்‌ தோற்றுவித்த சக்கராயுதம்‌. அதனை பெறுவதற்குத்‌ திருமால்‌ வேண்ட, சிவபெருமான்‌ அவருக்கு அதைக்‌ கொடுத்தருளினார்‌. சிவபெருமானது சடைமுடியில்‌ புகழால்‌ மிக்க கங்கை நதியும்‌, சந்திரனும்‌ பொதிந்துள்ளன. இவன்‌ விரும்பி உறையும்‌ தலம்‌, பெரிய அலைகளை உடைய கடற்கரையையும்‌, மணலால்‌ அழகு பெறும்‌ மணல்‌ மேடுகளையும்‌ நிரம்ப உடைய திருவீழிமிழலை ஆகும்‌.

3

மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதிகலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகுசிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.
சொற்பிரிப்பு
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதிகலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே
உரை

தக்கன்‌ அறிவற்ற அற்ப புத்தியை உடையவன்‌. அவன்‌ தான்‌ செய்த யாகத்தின்‌ போது மலைமகளாகிய பார்வதி தேவிக்கு உரிய மரியாதை செய்யத்‌ தவறினான்‌. இதனால்‌ சினங்கொண்ட சிவபெருமான்‌ வீரபத்திரரைக்‌ கொண்டு தக்கனைத்‌ தண்டித்தான்‌. தக்கன்‌ தலை அறுபட்டது. அக்கினி தேவனின்‌ கை அறுபட்டது. இவ்வாறு தனது சினத்தை வெளிப்படுத்திய சிவபெருமான்‌ விரும்பி உறையும்‌ தலம்‌ திருவீழிமிழலை. இந்த ஊரைச்‌ சுற்றிப்‌ பெரிய மதில்கள்‌ உள்ளன. செழிப்பான சோலைகள்‌ வளர்ந்தோங்கி விளங்கின. கலைஞானம்‌ நிரம்பிய புலவர்களின்‌ வறுமைத்‌ துன்பம்‌ நீங்க நிறைந்த செல்வத்தை வாரி வழங்கும்‌ கொடையாளர்கள்‌ பலர்‌ இங்கு வாழ்ந்து வந்தனர்‌.

4

மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவியபெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வனஇருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதிதெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.
சொற்பிரிப்பு
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவியபெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வனஇருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதிதெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.
உரை

தேவர்களுக்குப்‌ பகைவர்களாகிய திரிபுரத்து அசுரர்களுடைய மூன்று கோட்டைகளையும்‌ கணை ஒன்றைச்‌ செலுத்தி அழித்த பெருவலி படைத்தவன்‌ சிவபெருமான்‌. அவன்‌ நன்மைகள்‌ நிறைந்த திருக்கரங்களை உடையவன்‌. வலிய பிணங்கள்‌ நிறைந்த சுடுகாட்டில்‌ நள்ளிருட்போதில்‌ சென்று, அங்குத்‌ தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசை பாடுபவன்‌. இப்பரமன்‌ மகிழ்ந்து உறையும்‌ பதி, தெருக்கள்‌ தோறும்‌ நிகழும்‌ பெருவிழாக்களின்‌ ஆரவாரம்‌ நிறைந்து வளரும்‌ திருவீழிமிழலை ஆகும்‌.

5

அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளிமணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணிதிணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே.
சொற்பிரிப்பு
அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை இருவர்கள்பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளிமணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி,திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே.
உரை

சனகாதி முனிவர்கள்‌ நால்வர்‌. சனகர்‌, சனந்தனர்‌, சனாதனர்‌ மற்றும்‌ சனற்குமாரர்‌ ஆகிய இந்நால்வரும்‌ சிவபெருமானை வணங்கி அறத்தை உபதேசிக்குமாறு வேண்டினர்‌. சிவபெருமான்‌ அழகிய கல்லால மரத்தின்‌ நிழலில்‌ எழுந்தருளியிருந்து அறநெறியை வேதங்களோடு அவர்களுக்கு உபதேசித்து அருளினார்‌. முன்னவர்கள்‌ இருவரும்‌ ஒருபுறம்‌ அமர, பின்னவர்கள்‌ இருவரும்‌ மற்றொருபுறம்‌ அமர்ந்து பணிவோடு கேட்டு மகிழ்ந்தனர்‌. திருவீழிமிழலையில்‌ ஓடுகின்ற நதியின்‌ நீர்‌ நிலமெல்லாம்‌ பரவிச்‌ செல்லுகின்றது. அந்த நதி ஒளி பொருந்திய மணிகளையும்‌, ஒப்பில்லாத மரகதத்தையும்‌ அடித்துக்‌ கொண்டு வந்து இங்குக்‌ கரையில்‌ சேர்க்கின்றது. ஆதலால்‌ அவ்வூரில்‌ எல்லா விதமான வளங்களும்‌ நிறைந்து விளங்குகின்றன. இத்துணை செழிப்பான திருவீழிமிழலையில்‌ சிவபெருமான்‌ விரும்பி உறைந்து அருள்புரிந்து வருகிறார்‌.

6

வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்துஅசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதருதிசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.
சொற்பிரிப்பு
வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல்விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து,அசைவு இல படை அருள் புரிதரும் அவன் உறை பதி அது மிகு தருதிசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே.
உரை

அருச்சுனன்‌ துரியோதனாதியரைப்‌ போரில்‌ வென்று வெற்றி அடைய சிவபெருமானிடம்‌ இருந்து பாசுபதம்‌ என்னும்‌ அஸ்திரம்‌ பெற விரும்பி, நினைதற்கும்‌ அரிய, கடுந்தவம்‌ புரிந்தான்‌. சிவபெருமான்‌ குற்றமற்ற வலிய வேடர்‌ உருவந்தாங்கி உமையம்மையோடு அருச்சுனன்‌ முன்‌ தோன்றி, தான்‌ யாரென்று காட்டிக்‌ கொள்ளாமல்‌, அவனுடன்‌ போர்‌ புரிந்து, அவனுடைய வில்‌, அம்புகளை அழித்து மல்யுத்தம்‌ செய்து அவனைத்‌ தரையில்‌ வீழ்த்தித்‌ தோல்வி அடையச்‌ செய்தான்‌. பின்னர்‌ சிவபெருமான்‌ தன்‌ வேட உருவத்தை நீக்கத்‌, தன்‌ சுயரூபத்தைக்‌ காட்டி அவனுக்கு அருள்புரிந்தான்‌. தோல்வி அடையக்கூடாத பாசுபதம்‌ என்ற கணையையும்‌ அவனுக்கு வழங்கினான்‌. இவன்‌ விரும்பி உறையும்‌ ஊர்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இவ்வூரின்‌ எல்லாத்திசைகளிலும்‌ மரங்கள்‌ செறிந்து வானளாவ வளர்ந்துள்ளன. அங்குள்ள சோலைகளில்‌ மணமுன்ள மலர்கள்‌ பூத்துக்‌ குலுங்குகின்றன.

7

நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல்மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவருசலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதிதிலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.
சொற்பிரிப்பு
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வருசலம் மலிதரு மறலிதன் உயிர் கெட, உதைசெய்த அரன் உறை பதி"திலகம் இது!" என உலகுகள் புகழ் தரு, பொழில் அணி, திரு மிழலையே.
உரை

மறையவனாகிய மார்க்கண்டேயன்‌ இறைவழிபாடு செய்வதற்கு நன்மைகள்‌ பலவும்‌ நிறைந்த வேத மந்திரங்களை ஓதி, ஆற்றுநீர்‌, நறுமணப்‌ புகை, தீபம்‌, மலர்கள்‌ ஆகியவற்றைக்‌ கொண்டு சிவபெருமானை நோக்கி நாடோறும்‌ பூசனை புரிந்து வழிபாடு செய்து வந்தான்‌. இவன்‌ உயிரைக்‌ கவர வந்த வஞ்சகம்‌ மிக்க காலனின்‌ உயிர்‌ கெடுமாறு சிவபெருமான்‌ தன்‌ காலால்‌ உதைத்தான்‌. இவன்‌ விரும்பி உறையும்‌ பதி உலக மக்கள்‌ திலகம்‌ எனப்‌ புகழ்வதும்‌, சோலைகள்‌ சூழ்ந்ததுமான திருவீழிமிழலை ஆகும்‌.

8

அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனதுகரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவியசிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.
சொற்பிரிப்பு
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனதுகரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவியசிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.
உரை

சிவபெருமான்‌ உமையம்மையோடு வீற்றிருப்பது கயிலைமலை. இலங்கை மன்னனான தசமுகன்‌ விண்‌ வழி தனது புட்ப விமானத்தில்‌ செல்லும்‌ போது, கயிலை மலை நேர்‌ பாதையில்‌ இருந்தது. அதனைப்‌ பெயர்த்து எடுத்து நகர்த்த முயற்சி செய்தான்‌. சிவபெருமான்‌ தன்‌ கால்விரலால்‌ கயிலை மலையின்‌ உச்சியில்‌ அழுத்தினான்‌. தசமுகனது பத்துத்‌ தலைகளும்‌, இருபது கரங்களும்‌ நெரிந்தன. இவ்வாறு ஊன்றிய சிவபெருமான்‌ திருவடிகளில்‌ வீரக்கழல்கள்‌ அணிந்துள்ளான்‌. வரன்‌ முறையால்‌ உலகைப்‌ படைக்கும்‌ பூவின்‌ நாயகனான பிரமன்‌ தனது ஆணவத்தால்‌ விளைந்த அறியாமையினால்‌ சிவபெருமானை இகழ்ந்தான்‌. அவ்வாறு தவறு இழைத்தவனுக்கு மறக்கருணையால்‌ உண்மை அறிவைப்‌ புகட்ட விரும்பிய சிவபெருமான்‌, ஐந்தாயிருந்த அவன்‌ சிரங்களில்‌ ஒன்றைப்‌ பைரவரை அனுப்பிக்‌ கிள்ளி எடுத்து விட்டான்‌. பிரம்மாவின்‌ அந்த மண்டை ஓட்டினைச்‌ சிவன்‌ தனது பலிப்‌ பாத்திரமாகக்‌ கொண்டு, பலியேற்றுத்‌ திரிகின்றான்‌. அவன்‌ விரும்பி உறையும்‌ பதி திருவீழிமிழலை ஆகும்‌.

9

அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண1 னளவிட ஒழியவொர்பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறைசயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதிசெயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.பாடம் : 1மகிழ்வண
சொற்பிரிப்பு
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல் ஒழிய, ஒர்பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒர் படி உரு அது வர, வரல்முறை,"சய சய!" என மிகு துதி செய, வெளி உருவிய அவன் உறை பதிசெயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.
உரை

திருமாலும்‌ பிரம்மாவும்‌ சிவபெருமானது அடிமுடி தேடிக்‌ காண முடியாத நிலையில்‌ அவன்‌ ஒரு சோதிப்‌ பிழம்பாய்த்‌ தோன்றிய தோற்றத்தைக்‌ கண்டு அஞ்சி, அவ்விருவரும்‌ முறையாக சயசய எனப்‌ போற்றித்‌ துதி செய்தனர்‌. இவ்வாறு வணங்கப்பட்ட அண்டங்‌ கடந்த அச்சிவபெருமான்‌ விரும்பி உறையும்‌ பதி திருவீழிமிழலை ஆகும்‌. இங்குள்ள வெற்றி விளங்கும்‌ உயர்ந்த மதில்களின்‌ மேல்‌ சந்திரன்‌ தோய்ந்து செல்லுகின்றான்‌.

10

இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளியபுகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவிதிகழ்சுரர் தருநிகர்2 கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.பாடம் : 2தருநிகழ்
சொற்பிரிப்பு
இகழ்உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண்விரகினர்திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளியபுகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவிதிகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே.
உரை

சமணர்கள்‌ மிகவும்‌ தந்திரசாலிகள்‌. பிறரால்‌ இகழத்தக்க வடிவம்‌ உடையவர்கள்‌. உரோமங்களைத்‌ தலையினின்றும்‌ பறித்து எடுப்பதால்‌ முண்டிதமான (முடி இல்லாத தலை முண்டமாக) தலையோடு திரிபவர்கள்‌. சாக்கியர்கள்‌ எனப்படும்‌ புத்தர்கள்‌, காவி ஆடையை உடலில்‌ போர்த்திக்‌ கொண்டு திரிபவர்கள்‌. இவ்விருதிறத்தார்களின்‌ அறிவற்ற கொள்கைகள்‌ அழிந்தொழிய சிவபெருமான்‌ தன்‌ அடியவர்களுக்கு மிகவும்‌ அருள்புரிபவனும்‌, புகழனுமாக விளங்கினான்‌. இவன்‌ விரும்பி உறையும்‌ பதி திருவீழிமிழலை ஆகும்‌. இப்பதி, நீர்‌ வளம்‌ மிக்கது. கடலாற்‌ சூழப்பட்டது. கற்பக விருட்சத்தைப்‌ போன்ற கொடையாளர்‌ மிக்கு இங்கு வாழ்கின்றனர்‌.

11

சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகுதனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.
சொற்பிரிப்பு
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகுதன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள்,இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.
உரை

தாருகா வனத்து ரிஷிகள்‌ வேள்வி செய்து அதனின்று ஒரு கொடூரமான யானையை உருவாக்கி சிவபெருமானை அழித்து வர ஏவினார்கள்‌. சினவேகத்தோடு வந்த யானையை சிவபெருமான்‌ மடக்கிப்பிடித்து அதன்‌ தோலை உரித்துத்‌ தன்‌ உடலில்‌ போர்த்துக்‌ கொண்டான்‌. இவன்‌ விரும்பி உறையும்‌ ஊர்‌ திருவீழிமிழலையாகும்‌. மிக்க செல்வங்களால்‌ நிறைந்த மனமகிழ்வுடையவர்கள்‌ வாழ்வது சிவபுரம்‌ என்னும்‌ சீகாழி ஊராகும்‌. இவ்வூரில்‌ அவதரித்த மன்னன்‌ போன்றவனும்‌, தமிழ்‌ விரகனுமாகிய ஞானசம்பந்தன்‌ இத்திருப்பதிகப்‌ பத்துப்‌ பாடல்களையும்‌ பாடி அருளினான்‌. இப்பாடல்களை மனமகழ்வோடு பயில்பவர்கள்‌, அழகிய திருமகள்‌, கலைமகள்‌, சயமகள்‌ அவர்க்கு இனமான புகழ்மகள்‌ ஆகியோர்‌ தம்பால்‌ பொருந்தப்‌, பெரிய இவ்வுலகின்௧ண்‌ இனிதாக வாழ்வர்‌.