திருமுறை 1 · 1.018 · 11

திருநின்றியூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
நின்றியூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறுபாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.
சொற்பிரிப்பு
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்நீல மலர்ப் பொய்கை நின்றி யூரின் நிலையோர்க்கே.
உரை

சிவபெருமான்‌ திருநின்றியூரில்‌ நிலையாக எழுந்தருளியுள்ளான்‌. அவ்வூரில்‌ மணம்‌ கமழும்‌ நீலமலர்கள்‌ மலர்ந்த பொய்கைகள்‌ பல உள்ளன. சிவன்‌ முன்னொரு காலத்தில்‌ காலனின்‌ வலிமையைக்‌ காலால்‌ உதைத்துப்‌ போக்கினவன்‌. இவனுக்குப்‌ படைக்கலம்‌ “சூலம்‌. சுண்ணப்பொடியும்‌, சந்தனமும்‌ ’திருநீறே'. பால்போலும்‌ வெண்மையான பிறைமதி அவனது செந்நிறச்‌ சடைமுடியின்‌ மேல்‌ உள்ளது.

2

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்1பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.பாடம் : 1நயந்தானாம்
சொற்பிரிப்பு
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்நச்சம் மிடறு உடையார், நறுங் கொன்றை நயந்து ஆளும்பச்சம் உடை அடிகள், திருப் பாதம் பணிவாரே
உரை

திருநின்றியூரில்‌ எழுந்தருளி விளங்கும்‌ சிவபெருமான்‌ நஞ்சை மிடற்றிலே நிறுத்தித்‌ தேவர்களைக்‌ காத்து அருளியவர்‌. மணம்‌ கமழும்‌ கொன்றை மலர்களை விரும்பிச்‌ சூடியவர்‌. தம்மை வழிபடும்‌ அடியவர்களை ஆட்கொண்டருளும்‌ அன்புடையவர்‌. அவரது பாதம்‌ பணிவார்‌ அச்சம்‌, பாவம்‌, கேடு, நாள்தோறும்‌ வரும்‌ நோய்‌ ஆகியன இலராவர்‌.

3

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மாரஅறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மைநிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்உறையும்மிறை யல்லாதென துள்ளம்முண ராதே.
சொற்பிரிப்பு
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆரஅறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!
உரை

திருநின்றியூரில்‌ உறையும்‌ சிவபெருமான்‌ நிறைந்த கங்கைப்‌ புனலைச்‌ சடைமிசை உடையவர்‌. அவ்வூரில்‌ பறையடிக்கும்‌ ஒலி, சங்கு முழங்கும்‌ முழக்கம்‌, ஊரின்‌ எல்லாப்‌ பக்கங்களிலும்‌ மிகவும்‌ ஒலிக்கும்‌ ஏனைய ஒலிகள்‌, ஆகிய யாவும்‌, இறைவனது நாத தத்துவத்தை உணர்த்துகின்றன என்பதை அறிவாளர்கள்‌ உணர்வர்‌. இல்லான்‌ உனையும்‌ சிவபெருமானை அல்லாது என்‌ உள்ளம்‌ வேறு எவரையும்‌ உணராது

4

பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றைஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.
சொற்பிரிப்பு
பூண்ட வரைமார்பில் புரி நூலன், விரி கொன்றைஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!
உரை

வானளாவிய சோலைகள்‌ சூழ்ந்த திருநின்றியூரில்‌ எழுந்தருளிய சிவபெருமான்‌ தனது மலை போன்ற மார்பில்‌ அணிகலன்களைப்‌ பூண்டுள்ளான்‌. முப்புரி நூலை அணிந்து உள்ளான்‌. விரிந்த கொன்றை மலர்‌ மாலையையும்‌ அணிந்து உள்ளான்‌. அதனோடு பொருந்தப்‌ பால்‌ போன்ற வெண்மையான திங்களைத்‌ தன்சடைமேல்‌ சூடி உள்ளான்‌. அவ்விறைவன்‌ திருவடிகளைத்‌ தொழுதல்‌ அல்லது; அவன்‌ இயல்புகளை அடியவர்‌ எவரும்‌ அறியார்‌.

5

குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்அழலின்வலன் அங்கையது ஏந்தியன லாடுங்கழலின்னோலி யாடும்புரி கடவுள்களை கண்ணே.
சொற்பிரிப்பு
குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்,அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும்கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே.
உரை

திருநின்றியூரில்‌ குழலின்‌ இசை, வண்டின்‌ இசை ஆகியவற்றைக்‌ கேட்டுக்‌ குயில்கள்‌ கூவுகின்றன. அங்குள்ள சோலைகளில்‌ நிழல்‌ அழகாகத்‌ தங்கி உள்ளது. இவ்வாறு சோலைகளால்‌ சூழப்பட்ட திருநின்றியூரில்‌ விளங்கும்‌ சிவபெருமான்‌ தனது வலத்‌ திருக்கரத்தல்‌ அழலை ஏந்தி, அனலிடை நின்று, தனது திருவடிகளில்‌ அணிந்துள்ள வீரக்கழல்களின்‌ ஒலிகள்‌ கேட்குமாறு ஆடுகின்றான்‌. அவ்வாறு ஆடுகின்ற விரும்பத்தக்க சிவன்தான்‌ நமக்கு என்றும்‌ ஆதாரமானவன்‌.

6

மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்தவீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றிஊரன்கழ லல்லாதென துள்ளம் முணராதே.
சொற்பிரிப்பு
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்தவீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றியூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!
உரை

அழகு மலிந்த, சோலைகள்‌ செறிந்த திருநின்றியூரில்‌ எழுந்தருளிய வீரம்‌ பொருந்திய சிவபெருமான்‌ புன்முறுவலைத்‌ தரும்‌ வெண்மையான பற்களை உடைய உமையம்மையைத்‌ தன்‌ திருமேனியில்‌ ஒரு பாகமாகக்‌ கொண்டுள்ளான்‌. சடைமுடியில்‌ பிறைமதியை வைத்து உள்ளான்‌. அதைச்‌ சார்ந்து கங்கையையும்‌ வைத்துள்ளான்‌. இவனுடைய திருவடிகளை அல்லாது எனது உள்ளம்‌ வேறு ஒன்றையும்‌ உணராது.

7

பற்றியொரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும்பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.
சொற்பிரிப்பு
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,சுற்றி ஒரு வேங்கை அத ளோடும் பிறை சூடும்நெற்றி ஒரு கண்ணார் நின்றி யூரின் நிலையாரே.
உரை

திருநின்றியூரின்கண்‌ நிலையாக எழுந்தருளி உள்ள சிவபெருமான்‌ பிரமனது தலைகளில்‌ ஒன்றைக்‌ கிள்ளி, அதனைக்‌ கையில்‌ ஏந்திப்‌ பலி கேட்கும்‌ இயல்பினனாய்த்‌ திரிகின்றான்‌. தேவர்களுக்குத்‌ தலைவனாக விளங்குகின்றான்‌. புலித்தோலைத்‌ தனது இடுப்பில்‌ ஆடையாகச்‌ சுற்றிக்‌ கட்டி உள்ளான்‌. தனது சடைமுடியில்‌ பிறைச்‌ சந்திரனைச்‌ சூடி உள்ளான்‌. நெற்றியில்‌ மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவன்‌. அவனை நாம்‌ துதிப்போமாக.

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

9

நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்அல்லரென ஆவரென நின்றும்மறி வரியநெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெம்செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.
சொற்பிரிப்பு
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,“அல்லர்” என, ”ஆவர்” என, நின்றும் அறிவு அரியநெல்லின் பொழில் சூழ்ந்த நின்றி யூரில் நிலை ஆர் எம்செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!
உரை

நெல்‌ வயல்களால்‌ சூழப்பட்ட திருநின்றியூரின்கண்‌ நிலையாக எழுந்தருளி உள்ள சிவபெருமானே முழு முதற்பொருள்‌ ஆவான்‌ என்றும்‌, அல்லன்‌ என்றும்‌ தருக்கிக்‌ கொண்டு நின்றவர்கள்‌ பிரம்மாவும்‌, திருமாலும்‌ ஆவார்கள்‌. பிரம்மா நல்ல தாமரை மலர்‌ மேல்‌ உறைகின்றவன்‌. உலகத்தைத்‌ தன்‌ வயிற்றகத்து அடக்கிக்‌ காட்டியவன்‌ திருமால்‌. இவர்கள்‌ இருவரும்‌ சிவபிரானது அடி, முடியைத்‌ தேடிக்‌ காண முடியாமல்‌ திகைத்தவர்கள்‌. இவர்களால்‌ காண்பதற்கு அரியவராய்‌ விளங்கியவர்‌ சிவபிரான்‌. அவர்‌ எம்‌ செல்வர்‌. அவருடைய திருவடிகளை அன்றி என்‌ சிந்தை வேறு எதையும்‌ உணராது.

10

நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றைஅறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதேநெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.
சொற்பிரிப்பு
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றைஅறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,நெறி இல்லவர் குறிகள் நினை யாதே, நின்றியூரில்மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!
உரை

சமணர்கள்‌ நெறியற்ற கீழ்மக்கள்‌. தமக்கென்று உண்மை நெறி எதுவும்‌ இல்லாத புறச்சமயிகள்‌. சமய நெறியில்‌ பயில்வதால்‌ பேராமலும்‌, மறவாமலும்‌ நினைக்கும்‌ முழு முதற்‌ பொருளாகிய சிவபெருமானை அறியக்‌ கூடிய அறிவு இல்லாதவர்கள்‌. இவர்களது அடையாளங்களைக்‌ கருதாமல்‌, திருநின்றியூரில்‌ மான்‌ ஏந்திய கையனாய்‌ விளங்கும்‌ சிவபெருமானின்‌ திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்து என்று சொல்லப்படும்‌.

11

குன்றம்மது எடுத்தானுடல் தோளுந்நெரி வாகநின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரைநன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்குன்றாத் தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
சொற்பிரிப்பு
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆகநின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரைநன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.
உரை

கயிலை மலையைத்‌ தூக்கி நகர்த்த முயற்சி செய்த இலங்கை மன்னனாகிய தசக்கிரீவனின்‌ உடல்‌, தோள்‌ ஆகியன நெரியத்‌ தன்‌ கால்விரல்‌ ஒன்றால்‌ கயிலை மலை உச்சியில்‌ இலேசாக அழுத்தியவன்‌ திருநின்றியூரில்‌ எழுந்தருளிய சிவபெருமான்‌. புகலி என்று சொல்லப்பெறும்‌ சீகாழியில்‌ நன்மைகளே செய்யும்‌ மெய்யடியார்கள்‌ பலர்‌ உளர்‌. அப்பதியில்‌ தோன்றியவர்‌ ஞானசம்பந்தர்‌. இவர்‌ திருநின்றியூர்‌ இறைவனைப்‌ போற்றிப்‌ பாடிய திருவருள்‌ நலம்‌ குன்றாத இத்திருப்பதிகப்‌ பாடல்களை உரைப்பதனால்‌ குறைவின்றிப்‌ புகழ்‌ நிறையும்‌.