திருமுறை 1 · 1.016 · 11

திருப்புள்ளமங்கை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
புள்ளமங்கை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.
சொற்பிரிப்பு
பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.
உரை

திருப்புள்ள மங்கை என்ற ஊரில்‌ உள்ள ஆலந்துறை என்னும்‌ கோவிலில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. அவர்‌, பாலைக்‌ காய்ச்ச, தயிராக்கி, அத்தயிரைக்‌ கடைதலால்‌ விளைந்து வரும்‌ வெண்ணைத்‌ திரள்‌ போன்றவர்‌. காலனது வலிமை முழுவதையும்‌ அழித்தவர்‌. வேதப்புலமையில்‌ நான்முகனைப்‌ போன்ற அந்தணர்கள்‌ வாழ்கின்ற ஊர்‌ திருப்புள்ள மங்கை. இவ்வூரைச்‌ சுற்றி சோலைகள்‌ சூழ்ந்துள்ளன. இவ்வூர்க்‌ கோயிலில்‌ எழுந்தருளியுள்ள சிவபெருமானை நினைந்து வழிபடுபவர்களைத்‌ தீய வினைகள்‌ அடையா.

2

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்தஅலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை யதுவே.
சொற்பிரிப்பு
மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.
உரை

சிவபெருமான்‌ இமவான்‌ மகளாகிய பார்வதி தேவியின்‌ கணவன்‌ ஆவான்‌. அவன்‌ புள்ள மங்கை என்னும்‌ ஊரில்‌ உள்ள ஆலந்துறை என்னும்‌ கோயிலில்‌ எழுந்தருளி உள்ளான்‌. இவ்வூர்‌, அலைகளோடு கூட, நீர்‌ பெருகி வரும்‌ காவிரிக்‌ கரையில்‌ உள்ளது. இவ்வூரைச்‌ சுற்றிச்‌ சோலைகள்‌ நிறைந்துள்ளன. இவ்வூரில்‌ கலைகள்‌ பலவற்றை அறிந்த, அறிவால்‌ நிறைந்த மறையவர்கள்‌ வாழ்கிறார்கள்‌. அவர்கள்‌ இவ்வூர்‌ இறைவனை மனத்தால்‌ கருதி, காயத்தால்‌ தொழுது, வாயால்‌ ஏத்தி வழிபடுகிறார்கள்‌. இப்பூவுலகம்‌ நீர்‌ நிறைந்த கடலால்‌ சூழப்பட்டது. இந்த உலகத்தில்‌ உயிர்கள்‌ பிறவி எடுத்து, இறந்தும்‌, பிறந்தும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ இப்பிறவிச்‌ சூழூலில்‌ உழல்கின்றன. இவ்வாறு உழல்வதைக்‌ களைந்து பிறவா வரம்‌ அளிக்கக்‌ கூடியவன்‌ சிவபெருமான்‌ ஒருவனே. இவ்வூரில்‌ இருக்கின்ற சிவனை வழிபாடு செய்து பிறவிப்‌ பெருங்கடலை நீந்திக்‌ கரை சேருங்கள்‌.

3

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.
சொற்பிரிப்பு
கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல்பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச்சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந்துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!
உரை

சிவபெருமான்‌ விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவன்‌. மணம்‌ கமழும்‌ கொன்றை மலர்‌ அணிந்த சடைமுடியினை உடையவன்‌. அச்சடையின்மீது சுமையாக அமைந்த கங்கை ஆற்றை அணிந்தவன்‌. இவன்‌ புள்ள மங்கையில்‌ உள்ள ஆலந்துறை என்னும்‌ கோயிலில்‌ எழுந்தருளி உள்ளான்‌. இவ்வூர்‌ சோலைகளால்‌ சூழப்பட்டது. அங்கு சிறகுகளுடன்‌ கூடிய தேனை உண்ட வண்டுகள்‌ ரீங்காரம்‌ செய்து கொண்டிருக்கின்றன. அக்கோயிலுக்குச்‌ சென்று அப்பெருமானது திருவடிகளைத்‌ துதி செய்து தொழுவீராக.

4

தணியார்மதி யரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கைமணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்அணியார்மணல் அணைகாவிரி ஆலந்துறை யதுவே.
சொற்பிரிப்பு
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம்பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும்அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே.
உரை

சிவபெருமான்‌ தன்‌ முடியின்மீது குளிர்ந்த பிறைச்‌ சந்திரனைச்‌ சூடி உள்ளான்‌. பாம்பையும்‌ தன்‌ முடிமிசை வைத்துள்ளான்‌. இவன்‌ காவிரி நதியின்‌ தென்கரையில்‌ உள்ள புள்ளமங்கையில்‌ உள்ள ஆலந்துறை என்னும்‌ கோயிலில்‌ எழுந்தருளியுள்ளான்‌. இவ்வூரில்‌ உள்ள காவிரி நதியானது, பொன்னையும்‌, வைரக்‌ குவியல்களையும்‌ அழகிய மணியோடு கொண்டு வந்து கரையில்‌ சேர்க்கின்றன. இவ்வூரில்‌ உள்ள அடியவர்கள்‌ எமது தொண்டுகளுக்கு உரியவன்‌ இவனே என்று அங்குள்ள சிவனைத்‌ தொழுது ஏத்த வணங்குகிறார்கள்‌.

5

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்பொத்தின்னிடை ஆந்தைபல பாடும்புள மங்கைஅத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.
சொற்பிரிப்பு
மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கைஅத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.
உரை

உயிர்‌ உடலை அடுத்தற்குக்‌ காரணமான வினைகள்‌ நீங்கும்‌ வகையில்‌ பெருமானை நீவீர்‌ வணங்குவீர்களாக. செழுமையான மலர்க்‌ கொத்துக்களை உடைய சந்தனம்‌, அகில்‌ முதலியவற்றைக்‌ கொண்டு வரும்‌ காவிரியாற்றின்‌ கரைமேல்‌ உள்ளதும்‌ பொந்துகளில்‌ ஆந்தைகள்‌ பல தங்கிப்‌ பாடுவதும்‌ ஆகிய புள்ளமங்கையில்‌ அமைந்த ஆலந்துறை என்னும்‌ கோயிலை இடமாகக்‌ கொண்டுள்ள தலைவனாகிய சிவபெருமான்‌ நம்மை ஆள்வான்‌.

6

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கைஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதிஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.
சொற்பிரிப்பு
மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கைஎன் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதிஅன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.
உரை

சிவபெருமான்‌ விரும்பி உறையும்‌ இடம்‌ புள்ளமங்கையில்‌ உள்ள ஆலந்துறை இவன்‌ உலகிற்குத்‌, தான்‌ ஒருவனே மன்னனாய்‌ விளங்குபவன்‌. மழையாய்ப்‌ பயிர்களை விளைவிப்பவனும்‌ அவனே. குற்றமற்ற நால்வகைப்‌ பொன்னில்‌ சிறந்த சாம்பூநதம்‌ ஆகியவனும்‌ அவனே. அவனே எனக்குத்‌ தலைவன்‌. அவன்‌ இசைவடிவாய்‌ விளங்குபவன்‌. அவன்‌ இள ஞாயிற்றின்‌ ஒளியைப்‌ போன்ற ஒளியை உடையவன்‌. புள்ள மங்கை சென்று ஆலந்துறையில்‌ வீற்றிருக்கின்ற சிவனை வணங்குவீர்களாகுக. .

7

முடியார்தரு சடைமேல்முளை யிளவெண்மதி சூடிப்பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கைக்கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.
சொற்பிரிப்பு
முடி ஆர் தரு சடைமேல் முளை இள வெண்மதி சூடி,பொடி ஆடிய திருமேனியர், பொழில் சூழ் புளமங்கை,கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்அடியார் தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.
உரை

சிவபெருமான்‌ விரும்பி உறையும்‌ இடம்‌ சோலைகளால்‌ சூழப்பெற்ற புள்ள மங்கையில்‌ உள்ள ஆலந்துறை என்னும்‌ கோயில்‌ ஆகும்‌. இவன்‌ தன்‌ தலைமேல்‌ விளங்கும்‌ சடையின்‌ மீது முளை போன்ற இளம்‌ பிறையைச்‌ சூடி உள்ளான்‌. தன்‌ இருமேனியில்‌ வெள்ளிய திருநீறு அணிந்துள்ளான்‌. மணம்‌ கமழும்‌ மலர்களையும்‌ புனிதமான நீரையும்‌ கொண்டு தன்‌ திருவடிகளை வணங்கி ஏத்தும்‌ அடியார்களுக்கு இனியனாய்‌ விளங்குகின்றான்‌. அவன்‌ இருக்கும்‌ இடம்‌ சென்று அவனை வழிபாடு செய்வீராக.

8

இலங்கைமனன் முடிதோளிற எழிலார்திரு விரலால்விலங்கல்லிடை யடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கைஅலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.
சொற்பிரிப்பு
இலங்கை மனன் முடி தோள் இற, எழில் ஆர் திருவிரலால்விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி,புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை,அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.
உரை

சிவபெருமான்‌ விரும்பி உறையும்‌ இடம்‌ புள்ள மங்கையில்‌ உள்ள ஆலந்துறை என்னும்‌ கோயிலாகும்‌. இவன்‌ மாலைகள்‌ அணிந்துள்ளான்‌. சடை முடியை உடையவன்‌. இவ்வூரில்‌ புலன்களை வென்ற புகழுடைய அந்தணர்கள்‌, வாழ்கின்றனர்‌. வேதங்களை முறையாகக்‌ கற்றறிந்த மறையவர்கள்‌ அவனை ஓதித்‌ துதிக்கின்றார்கள்‌. இலங்கை மன்னனாகிய தசக்கிரீவன்‌ தலைகளும்‌ தோள்களும்‌ நெறிய சிவபெருமான்‌ தன்‌ எழுச்சி பொருந்திய அழகிய கால்‌ விரலால்‌ மலையின்‌ உச்சியில்‌ ஊன்ற, அவனைக்‌ கயிலை மலையிடை அகப்படுத்தி அடர்த்தான்‌. இவன்‌ ஊரை அடைந்து இவனை ஏத்தித்‌ தொழுவீர்களாக.

9

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கைவெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடிஅறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.
சொற்பிரிப்பு
செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடிஅறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.
உரை

சிவபெருமானுக்கு உரிய இடம்‌ புள்ள மங்கையில்‌ உள்ள ஆலந்துறையாகும்‌. இவன்‌ வெண்மையான திருநீற்றை மூன்று பட்டைகளாய்ச்‌ செறியப்‌ பூசியவன்‌. உத்தம இலக்கணம்‌ ஆகிய மூன்று வரி பொருந்திய முப்புரி நூல்‌ அணிந்த மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவன்‌. மணங்கமழும்‌ தாமரை மலர்மேல்‌ உறைகின்ற நான்முகனும்‌, திருமாலும்‌ தன்னைத்‌ தேடி அறியாவகை ஓங்கி அழலாய்‌ நின்றவன்‌. அவன்‌ இருக்கும்‌ இடம்‌ சென்று அவனை வணங்குவீர்களாக.

10

நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கைஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.
சொற்பிரிப்பு
நீதி அறியாத அமண் கையரொடு மண்டைப்போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கைஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.
உரை

நீதி அறியாத அமணராகிய கீழ்‌ மக்களும்‌ பிச்சைப்‌ பாத்திரத்தைக்‌ கையில்‌ ஏந்திப்‌ போதி மரத்தடியில்‌ உறையும்‌ புத்த மதத்தினரும்‌ கூறும்‌ உரைகளை மெய்ம்மை எனக்‌ கொள்ளாது எல்லாப்‌ பொருள்கட்கும்‌ ஆதியானவனாகிய புள்ளமங்கையில்‌ உள்ள ஆலந்துறைக்‌ கோயிலில்‌ உறையும்‌ 'இறைவனைத்‌ தொழுமின்‌; பல்வேறு பிரிவினராகிய தேவர்கள்‌ தொழும்‌ தன்மை பெறலாம்‌.

11

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கைஅந்தண்புனல் வருகாவிரி ஆலந்துறை யானைக்கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன்சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.
சொற்பிரிப்பு
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கைஅம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை யானைக்கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.
உரை

மரப்‌ பொந்துகளில்‌ தேனீக்கள்‌ சேகரித்த தேன்‌ மிகுதியான அளவில்‌ கடைக்கும்‌ பொழில்கள்‌ சூழ்ந்ததும்‌, அழகிய தண்மையான நீரைக்‌ கொணர்ந்து தரும்‌ காவிரிக்கரையில்‌ உள்ளதும்‌ ஆகிய புள்ளமங்கையில்‌ உள்ள ஆலந்துறை இறைவனை, மணம்‌ நிறைந்து கமழும்‌ காழிப்‌ பதியில்‌ தோன்றிய கலை நலம்‌ உடைய ஞானசம்பந்தன்‌ பாடிய சந்தம்‌ நிறைந்த இத்திருப்பதிகப்‌ பாடல்களை ஓதிப்‌ பரவசமாய்‌ ஆடத்‌, தவம்‌ கைகூடும்‌.