திருமுறை 1 · 1.014 · 11

திருக்கொடுங்குன்றம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
கொடுங்குன்றம்
நாடு
பாண்டியநாடு

1

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்ஆனிற்பொலி யைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.
சொற்பிரிப்பு
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.
உரை

வளைந்த பிறைச்‌ சந்திரன்‌ வானின்கண்‌ விளங்கும்‌ மழை மேகங்களைக்‌ கிழித்து ஓடிச்‌ சென்று சேரும்‌ குளிர்ந்த சாரலை உடையது கொடுங்குன்றம்‌. இது, பசுவிடம்‌ விளங்கும்‌, பால்‌, நெய்‌, தயிர்‌, கோமயம்‌, கோசலம்‌ ஆகிய ஐந்து பொருள்களையும்‌ மகிழ்ந்து ஆடி (அபிஷேகித்துக்‌ கொண்டு) உலகம்‌ போற்றத்‌ தேன்‌ போலும்‌ மொழியினைப்‌ பேசும்‌ உமையம்மையோடு சிவபிரான்‌ மேவிய திருத்தலமாகும்‌.

2

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடிஎயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.
சொற்பிரிப்பு
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம்அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.
உரை

கொடுங்குன்றத்தில்‌ உள்‌ விரிந்த மலைகளில்‌ ஆண்‌ மயில்கள்‌, தண்ணிய தம்‌ பெடைகளைத்‌ தழுவித்‌ தோகை விரித்தாடுகன்றன. அங்குள்ள குளிர்ந்த சோலைகளில்‌ குயில்கள்‌ இன்னிசை பாடுகின்றன. இது கூரிய வேல்போலும்‌ நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக்‌ கையில்‌ ஏந்தி நின்று, ஆடுபவனும்‌ முப்புரங்கள்மீது கணை தொடுத்து அழித்தவனுமாகிய சிவபெருமான்‌ எழுந்தருளிய திருத்தலமாகும்‌.

3

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான் வளநகரே.
சொற்பிரிப்பு
மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி,குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல்வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.
உரை

அருவிகள்‌, ஒளிவீசும்‌ மணிகளையும்‌, பசும்பொன்‌, முதல்‌ மணமுள்ள மலர்கள்‌ ஆகியவற்றைத்‌ தள்ளிக்‌ கொண்டு வந்து நீரைச்‌ சொரியும்படியான மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம்‌, சடைமுடியில்‌ பொங்கி எழும்‌ கங்கை நதியையும்‌, வெண்மையான பிறைச்சந்திரனையும்‌, மணம்‌ கமழும்‌ கொன்றை மலரையும்‌, மதத்தை ஊட்டும்‌ ஊமத்தை மலரையும்‌ அணிந்துள்ள சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ள வளமையான நகரமாகும்‌.

4

பருமாமத கரியோடரி யிழியும்1 விரி சாரல்குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்பொருமாஎயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்தபெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.பாடம் : 1யிரியும்
சொற்பிரிப்பு
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்தபெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.
உரை

கொடுங்குன்றத்தில்‌ பெரிய மலைச்‌ சாரல்கள்‌ உள்ளன. அங்கு பெரிய கரிய மத யானைகளும்‌, சிங்கங்களும்‌, இரை தேடவும்‌, நீர்‌ பருகவும்‌ இறங்கி வருகின்றன. அங்கு, பெரிய மணிகளைப்‌ பொன்னோடு சொரியும்‌ அருவிகள்‌ உள்ளன. இது, எதிர்த்துப்‌ பொர வந்த பெரிய முப்புரக்‌ கோட்டைகளை, மலையாகிய வில்லில்‌ தொடுத்த கணையால்‌ பொடியாக்கின சிவபெருமான்‌ உமையம்மையோடு எழுந்தருளிய தலம்‌ ஆகும்‌.

5

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கைபாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.
சொற்பிரிப்பு
மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும்கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம்நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கைபாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.
உரை

கொடுங்குன்றத்தில்‌ பெரிய மலைச்‌ சாரல்கள்‌ உன்ளன. அங்கு, மேகத்திடம்‌ தோன்றும்‌ இடியின்‌ ஓசையைக்‌ கேட்டு, கோட்டான்‌ என்னும்‌ பறவை இனங்கள்‌ அஞ்சி மலையினின்றும்‌ இறங்கி வந்து பறந்து திரின்றன. சிவபெருமான்‌ தனது முடியில்‌ நாகத்தையும்‌, இள வெண்‌ பிறையையும்‌ சூடி உள்ளான்‌. அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக்‌ கொண்டுள்ளான்‌. தேவர்கள்‌ தன்னை வணங்குமாறு பழமையான கொடுங்குன்றத்தில்‌ எழுந்தருளி உள்ளான்‌

6

கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்அம்மானென வுள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.
சொற்பிரிப்பு
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்“அம்மான்!” என உள்கித் தொழு வார்கட்கு அருள் செய்யும்பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.
உரை

கொடுங்குன்றத்தில்‌ கொய்யத்தக்க மண மலர்களைக்‌ கொண்ட சோலைகள்‌ உள்ளன. துதிக்கை உடைய கரிய மத யானைகளின்‌ கூட்டம்‌ இடியின்‌ குரல்‌ அதிரக்‌ கேட்டு அஞ்சி இச்சோலைகளில்‌ புகுந்து ஒளிந்து கொள்ள வருகின்றன. இவரே நம்‌ தலைவர்‌ என இடைவிடாது நினைந்து தொழும்‌ அடியவர்கட்கு ' அருள்‌ செய்யும்‌ சிவபெருமான்‌ விண்ணோர்‌ தன்னைத்‌ தொழ இக்கொடுங்குன்றத்தில்‌ வீற்றிருந்து அருள்‌ வழங்குகின்றான்‌.

7

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்டகுரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்அரவத்தொடும் இளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றைநிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.
சொற்பிரிப்பு
மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்டகுரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றைநிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.
உரை

கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆயவற்றின்‌ நாள்‌ அரும்புகள்‌ குரவ மலர்களோடு விண்டு மணம்‌ விரவும்‌ பொழில்‌ சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம்‌, அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம்‌ கமழும்‌ கொன்றை மலர்‌ ஆகியவற்றை நிரம்பத்‌ தன்‌ முடிமேல்‌ அணிந்துள்ள சிவபிரானது நெடு நகராகும்‌.

8

முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்துகுட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனேபிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.
சொற்பிரிப்பு
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து,குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனேபிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.
உரை

யானைக்‌ கூட்டங்கள்‌ யாரும்‌ தடுப்பார்‌ இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப்‌ பிறரால்‌ அகழப்படாது இயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில்‌ இறங்கி நின்று நீராடுகின்ற இடம்‌ கொடுங்குன்றம்‌. தன்னோடு மனம்‌ பொருந்தாது கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணனின்‌ முடியணிந்த பத்துத்‌ தலைகளையும்‌ அடர்த்து நசுக்கியவன்‌ ஆகிய சிவபெருமான்‌ உமையம்மையோடு மேவும்‌ பெருநகர்‌ ஆகும்‌.

9

அறையும்மரி குரலோசையையஞ்சியடும் ஆனைகுறையும்மன மாகிம்முழைவைகுங்கொடுங் குன்றம்மறையும்மவை யுடையானெனநெடியானென இவர்கள்இறையும்மறி வொண்ணாதவன்மேயவ்வெழில் நகரே.
சொற்பிரிப்பு
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனைகுறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம்மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள்இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.
உரை

சிங்கத்தின்‌ கர்ச்சனை ஓசையைக்‌ கேட்டு வெருண்டு, கொல்லும்‌ தன்மையினவாகிய யானைகள்‌ மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப்‌ பகுதிகளில்‌ மறைந்து வைகும்‌ இடம்‌ ஆகிய கொடுங்குன்றம்‌ வேதங்களுக்கு உரியவனான நான்முகன்‌, திருமால்‌ ஆகிய இருவரும்‌ சிறிதும்‌ அறிய முடியாதவனாய்‌ நின்ற சிவபிரான்‌ மேவிய அழகிய நகரம்‌.

10

மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.
சொற்பிரிப்பு
மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக்குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம்புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற,பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.
உரை

மதம்‌ பொருந்திய யானைகள்‌ தம்மின்‌ வலிய சிங்கம்‌ வருதலைக்‌ கண்டு அஞ்சி மலையைக்‌ குத்திப்‌ பெரிய குகையில்‌ தங்கியிருக்கும்‌ கொடுங்குன்றம்‌ புத்தர்களும்‌ பொல்லா மனமுடைய சமணர்களும்‌, புறங்கூறத்‌ தன்‌ பக்தர்கட்கு அருன்‌ செய்பவனாகிய சிவபிரான்‌ மேவிய பழமையான நகராகும்‌

11

கூனற்பிறை சடைமேல்மிக வுடையான் கொடுங்குன்றைக்கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணிஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.
சொற்பிரிப்பு
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி,ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்,ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.
உரை

வளைந்த பிறைச்‌ சந்திரனைச்‌ சடைமுடி மீது அழகு மிகுமாறு அணிந்துள்ள சிவபிரான்‌ எழுந்தருளப்‌ பெற்றது திருக்கொடுங்குன்றம்‌ ஆகும்‌. கடற்கரைச்‌ சோலைகளால்‌ சூழப்பட்டது கழுமல மாநகர்‌. இவ்வூர்த்‌ தலைவனும்‌, நல்ல கவுணியர்‌ கோத்திரத்தில்‌ தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன்‌ திருக்கொடுங்குன்றத்து இறைவனைப்‌ பாடிய தமிழ்‌ மாலைகளை ஓதி வழிபட வல்லவர்‌ தம்மிடமுள்ள குறைபாடுகள்‌ நீங்கித்‌ துன்பங்கள்‌ அகன்று உலகம்‌ போற்றும்‌ புகம்‌ உடையோர்‌ ஆவர்‌.