திருமுறை 1 · 1.012 · 11

திருமுதுகுன்றம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
முதுகுன்றம்
நாடு
நடுநாடு

1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்டதொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம்கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டுமுத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்டதொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டுமுத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.
உரை

பொருள்‌: தேவர்கள்‌ எல்லோரும்‌ கூடி மந்தர மலையை மத்தாக நட்டுக்‌ கடலைக்‌ கடைந்தபோது கொடிது எனக்‌ கூறப்பெறும்‌ ஆலகால விடம்‌ தோன்ற அதனை உண்டவன்‌ சிவபெருமான்‌. அவன்‌, தன்‌ அழகிய நீண்ட சடைமுடியில்‌ பூங்கொத்துக்களைச்‌ சூடியவன்‌. அவன்‌ எரிசுடர்‌ வண்ணன்‌. அவன்‌ எழுந்தருளிய இடம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. மலர்க்‌ கொத்துக்கள்‌, குளிர்ந்த சந்தனம்‌, அகில்‌, ஒளி தரும்‌ குங்கும மரம்‌ ஆகியவற்றைத்‌ தன்‌ அலைக்கரங்களால்‌ ஏந்திக்‌ கொண்டு வந்து மணிமுத்தாறு நதி திருமுதுகுன்றத்தில்‌ அடிவீழ்ந்து வணங்குகின்றது. அதனை நாம்‌ அடைவோமாக.

2

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.
உரை

சிவபெருமான்‌ தழைகளுடன்‌ கூடிய ஆலமர நீழலில்‌ யோகியாய்‌ இருந்து தவம்‌ செய்கின்றான்‌. நூல்‌ இழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்து திருமுதுகுன்றத்தில்‌ போகியாய்‌ உறைகின்றான்‌. திருமுதுகுன்றத்தில்‌ மேகங்கள்‌ உயர்வானில்‌ இடிகளை உண்டாக்குகின்றன. இந்த ஒலியை யானையின்‌ பிளிறு என அங்கு வாழும்‌ சிங்கங்கள்‌ கருதுகின்றன. அவைகளின்‌ நகங்கள்‌ அழகாய்‌ வளைந்த ஒளியோடு விளங்குகின்றன. அவைகள்‌ எரிபோலும்‌ கண்களை உடையன. அவைகள்‌ குகைகளில்‌ வாழ்ந்து கொண்டு கர்ச்சிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தது திருமுதுகுன்றம்‌.

3

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்களையார்தரு கதிராயிரம் உடையவ்வ வனோடுமுளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண்தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடுமுளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.
உரை

உயிர்களுடன்‌ அநாதியாகவே வருகின்ற பசுவேதனை எனப்படும்‌ ஆணவமலத்‌ துன்பம்‌, அத்துன்பத்தை நீக்குவதற்காகக்‌ கூட்டப்படுகின்ற பாசவேதனை எனப்படும்‌ நல்வினை தீவினைகளுக்கு மூலமாகிய கன்மமலத்‌ துன்பம்‌, ஆன்மாவுக்குச்‌ சிறிது அறிவையும்‌ சிறிது மயக்கத்தையும்‌ தருமாறு கூட்டப்படுகின்ற மாயாமலத்துன்பம்‌ ஆகிய இவை . நீங்குமாறு சிவபெருமான்‌ திருமுதுகுன்றத்தில்‌ எழுந்தருளி அருள்புரிந்து வருகின்றான்‌. இங்குள்ள வானளாவிய மலையில்‌ ஒளி பொருந்திய ஆயிரம்‌ கிரணங்கள்‌ கொண்ட சூரியனும்‌, முளைத்தெழுந்து வளரும்‌ சந்திரனும்‌ தவழ்ந்து செல்லுகின்றன. அதனை நாம்‌ அடைவோம்‌.

4

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லாநரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்அரசார்வர1 வணிபொற்கல னவைகொண்டு பன் னாளும்முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.பாடம் : 1அரசாரர
சொற்பிரிப்பு
சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லாநரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர்அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும்முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.
உரை

சிவபெருமான்‌ எழுந்தருளிய திருமுதுகுன்றத்தில்‌ தேவர்களும்‌, சிறந்த தவத்தை மேற்கொண்டவர்களும்‌, கின்னரி என்ற வாத்தியத்தை மீட்டி இசைபாடும்‌ தேவ இனத்தவரான கின்னரர்களும்‌ கூட்டமாக வந்து மக்களுலகில்‌ வாழும்‌ மாமுனிவர்களுடன்‌ சேர்ந்து தொழுது செல்லுகின்றார்கள்‌. இங்கு நடக்கும்‌ திருமணத்திற்கு அரசிளங்‌ குமரர்கள்‌ வருகின்றார்கள்‌. அவர்களைப்‌ பொன்‌ அணிகலங்கள்‌ கொண்டு வரவேற்கும்‌ மண முரசு பன்னாளும்‌ ஒலித்துக்‌ கொண்டே இருக்கின்றது. நாமும்‌ அந்த ஊரை அடைவோம்‌.

5

அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டுமுறையால்மிகு முனிவர்தொழும் முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர்கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,மறை ஆயினபல சொல்லி,ஒண் மலர் சாந்து அவை கொண்டு,முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.
உரை

திருமுதுகுன்றத்தில்‌ எழுந்தருளிய சிவபெருமான்‌, ஒலிக்கின்ற வீரக்கழல்‌ அணிந்த அந்தகாசூரனைக்‌ கூரிய மூவிலை வடிவாய்‌ அமைந்த குருதிக்‌ கறை படிந்த அழகிய நீண்ட வேலின்‌ முனையில்‌ குத்தி ஏந்திக்‌ கொண்டிருக்கின்றான்‌. இங்கு முனிவர்கள்‌ பலரும்‌ வேதங்கள்‌ பலவும்‌ சொல்லி நறுமலர்‌, சந்தனம்‌ முதலான பொருள்களைக்‌ கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்றார்கள்‌. நாமும்‌ அங்கு சென்று அவனை வழிபடுவோமாக.

6

ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்கோவாதஇன்னருள் செய்தஎம் மொருவற்கிடம் உலகில்சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்குஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார்,மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே.
உரை

திருமுதுகுன்றத்தில்‌ விருப்பத்தோடு எழுந்தருளியுள்ள சிவபெருமான்‌, அம்புகள்‌ பூட்டிய வில்லை ஏந்திய வேடன்‌ உருவந்தாங்கி அருச்சுனனிடம்‌ போர்‌ செய்து அவனைத்‌ தோற்கடித்தான்‌. பின்னர்‌ அவன்‌ இரங்க அவனுக்கு அருள்‌ செய்தான்‌ (அவனுக்கு பாசுபதாஸ்திரமும்‌ கொடுத்தருளினான்‌). சாவாமை பெற்றவர்களும்‌, மீண்டும்‌ பிறப்பு எய்தாதவர்களும்‌, மிகுதியான தவத்தைப்‌ புரிந்தவர்களும்‌ மூப்பு அடையாத முனிவர்‌ பலரும்‌ இங்கு வந்து இறைவனை வணங்கிச்‌ செல்லுகிறார்கள்‌. நாமும்‌ அவனைச்‌ சென்று அடைவோம்‌.

7

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர்மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலைமுழவோடிசை நடமுன்செயும் முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர்,மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில்விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை,முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே.
உரை

சிவபெருமான்‌ தழலை ஒத்த சிவந்த திருமேனியர்‌. பிறைச்‌ சந்திரனைத்‌ தனது சடைமுடியில்‌ அணிந்தவர்‌. திருமால்‌ இடபமாக வர, அதன்மீது மிகவும்‌ உகந்து ஏறி வருபவர்‌. அவர்‌ வேதங்களை அருளியவர்‌. அவர்‌ எழுந்தருளியுள்ள கோயில்‌ உள்ள ஊர்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. அங்கு, கோயில்‌ விழாக்களில்‌ பலவிதமான ஓசைகள்‌ ஒலிக்கின்றன. அழகுமிகு நங்கையர்கள்‌ தக்க நடன சாலைகளில்‌ முழவோசையோடு பாடி நடனம்‌ செய்கிறார்கள்‌. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமுதுகுன்றத்தை நாமும்‌ சென்று அடைவோம்‌.

8

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லாமுதுவேய்கள் முத்துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லாமுதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.
உரை

இலங்கை மன்னனாகிய இராவணன்‌ பொல்லா மொழிகளைக்‌ கருதிக்‌ கயிலை மலையைப்‌ பெயர்த்துத்‌ தள்ளி வைக்க முயன்றான்‌. அவன்‌ வடுவுள்ள வாய்கள்‌ பத்தும்‌ அலறும்படி, தன்‌ விரலால்‌ மலையை ஊன்றி அடர்த்த சிவபெருமானது கோயில்‌ விளங்குவது திருமுதுகுன்றமாகும்‌. இத்தலத்தில்‌ செங்காந்தள்‌ மலர்‌ பூத்திருக்கின்றன. அம்மலர்களின்‌ கைகள்‌ நிறையும்படி அருகில்‌ உள்ள முதிய மூங்கில்கள்‌ குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும்‌ சோலைகளால்‌ சூழப்பட்டது இவ்வூராகும்‌. அங்கு சென்று நாம்‌ அடைவோம்‌.

9

இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரியசெயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகேமுயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய,செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்-புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகேமுயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.
உரை

தற்பெருமை பேசிய பிரம்மன்‌ திருமால்‌ ஆகிய இருவராலும்‌ அறிதற்கு அரிய திருவிளையாடல்‌ செய்து வென்று எரிஉருவில்‌ தீப்பிழம்பாக விளங்கிய சிவபெருமான்‌ விரும்பிய ஊர்‌ திருமுதுகுன்றமாகும்‌. இங்கு மேகங்கள்‌ தோயும்‌ வளமையான சோலைகள்‌ உள்ளன. நீர்வளம்‌ மிக்க நிலப்பரப்புகள்‌ உள்ளன. இந்த நீர்நிலைகட்கு அருகில்‌ வரும்‌ முயல்கள்‌ பயந்து ஓடுமாறு வெள்ளிய கயல்‌ மீன்கள்‌ துள்ளிக்‌ குதிக்கின்றன. இத்தகைய வளமுடைய திருமுதுகுன்றத்தை நாம்‌ அடைவோம்‌.

10

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்கருகுகுழல் மடவார்கடி குறிஞ்சியது பாடிமுருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.
சொற்பிரிப்பு
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி,முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.
உரை

சமணர்களாலும்‌ புத்தர்களாலும்‌ அறியப்‌ பெறாதவன்‌ சிவபெருமான்‌. அவன்‌ இமவான்‌ மருமகன்‌ ஆவான்‌. அவன்‌ இடபக்கொடியை உடையவன்‌. அவன்‌ விரும்பி எழுந்தருளிய இடம்‌ திருமுதுகுன்றம்‌. இங்கு மலர்சூடிய கரிய கூந்தலை உடைய இளம்பெண்கள்‌ தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப்‌ பண்ணால்‌ முருகப்‌ பெருமானின்‌ பெருமைகளைப்‌ பாடி வணங்குகின்றார்கள்‌. இந்தத்‌ திருமுதுகுன்றத்தை நாம்‌ அடைவோம்‌.

11

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்தநிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.
சொற்பிரிப்பு
முகில் சேர்தரு முதுகுன்று உடை யானை, மிகு தொல் சீர்புகலிநகர் மறை ஞானசம் பந்தன், உரைசெய்தநிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.
உரை

மேகங்கள்‌ வந்து தங்கும்‌ திருமுதுகுன்றத்தில்‌ விளங்கும்‌ பெருமானைப்‌ பழமையான மிக்க புகழுடைய புகலி நகரில்‌ தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன்‌ உரைத்த ஒப்பற்ற தமிழ்‌ மாலையாகிய இப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ இசையோடு பகர்ந்து வழிபடும்‌ அடியவர்களைத்‌ துன்பங்களும்‌ அவற்றைத்‌ தரும்‌ பாவங்களும்‌ அடையா.