திருமுறை 1 · 1.008 · 11

திருஆவூர்ப்பசுபதீச்சரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
ஆவூர்ப்பசுபதீச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த இருந்தவூராம்விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்பண்ணியல் பாட லறாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
"புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்கண்ணியர்!" என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம்விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும்பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

புண்ணியம்‌ இரண்டனைய வடிவினர்‌ எனவும்‌, நிறைந்த செல்வம்‌ உடையவர்‌ எனவும்‌, பூத கணங்களின்‌ தலைவர்‌ எனவும்‌, அருகில்‌ வந்து பரவுவாரின்‌ மனத்தார்‌ எனவும்‌, பிறைமதிக்‌ கண்ணியர்‌ எனவும்‌, அன்புடை அடியவர்கள்‌ கூறி நின்று கைதொழுது போற்றச்‌ சிவபிரான்‌ எழுந்தருளிய ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும்‌, மணம்‌ கமழும்‌ சோலைகளால்‌ சூழப்‌ பெற்றதும்‌, எங்கும்‌ பண்ணியலோடு கூடிய பாடல்கள்‌ இடைவிடாது கேட்கப்படுவதும்‌ ஆகியது ஆவூர்‌. இவன்‌ அடியார்களே! இத்துணைச்‌ சிறப்புற்ற ஆவூர்ப்‌ பசுபதியீச்சரத்தில்‌ எழுந்தருளியிருக்கன்ற சிவபெருமானைத்‌ தொழுது உங்கள்‌ நாவால்‌ பாடுவீர்களாக!

2

முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன் அணங்கொ டிருந்தவூராம்தொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்பத்திமைப்1 பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.பாடம் : 1பத்திசை
சொற்பிரிப்பு
"முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன் வேள்வி சாடும்அத்தியர்" என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்தஊர்ஆம்தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மதுப் பாய, கோயில்பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

முத்துச்‌ செல்வத்தை உடையவர்‌ என்றும்‌, மூப்பு இலர்‌ என்றும்‌, மாட்டுத்‌ தறியில்‌ விளங்குபவர்‌ என்றும்‌, முக்கண்ணர்‌ என்றும்‌, தம்மை இகழ்ந்து செய்த தக்கனின்‌ வேள்வியை அழித்தவர்‌ என்றும்‌, அடியவர்கள்‌ போற்றித்‌ துதிக்கும்‌ தலைவராகிய சிவபிரான்‌ உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. : இவ்வூரில்‌ பொழில்களில்‌ கொத்தாக மலர்ந்த பூக்களில்‌ வண்டுகள்‌ தோய்தலால்‌ எங்கும்‌ தூயதேன்துளிகள்‌ பாய்கின்றன. கோயிலில்‌ பத்தி பூண்ட அடியவர்‌ பாடும்‌ பாடல்‌ இடைவிடாது கேட்‌கின்றன.

3

பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார்இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம்தெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்பங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார்இங்கு உயர் ஞானத்தர், வானோர் ஏத்தும் இறையவர், என்றும் இருந்த ஊர் ஆம்தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளைவயல் சேரும் பொய்கைப்பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

சினந்து வந்த கங்கையைத்‌ தம்‌ திருமுடியில்‌ வைத்த சிவபெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. திருமகளால்‌ விரும்பப்படும்‌ ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. வானவரும்‌ துதிக்க வருகின்ற சிவபிரான்‌ எழுந்தருளிய ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. பிறப்பு-இறப்பு இவைகளினின்றும்‌ விடுபட்டு முத்தி அடைவதற்கு இப்பூமியில்‌ பிறந்தே ஆகவேண்டும்‌. அவ்வாறு ஆவூரில்‌ பிறந்தவர்களாகிய சிலர்‌ நற்செயல்கள்‌ செய்து ஏற்றம்‌ அடைகிறார்கள்‌; சிலர்‌ தீய செயல்களைச்‌ புரிந்து இழிவடைகிறார்கள்‌. ஏற்றம்‌ பெற்றவர்களில்‌ இலர்‌ சிவஞானத்தைப்‌ பெற்றவர்களாய்‌ உள்ளார்கள்‌. இந்த முத்திறத்தார்களும்‌, வானவர்களும்‌ துதிக்க வருகின்ற சிவபெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. உயரமாக வளர்ந்த - தென்னஞ்‌ சோலைகளும்‌, கரும்பாலைகளும்‌, செந்நெல்பயிர்கள்‌ திளைத்து விளைவு தரும்‌ வயல்களும்‌, பொய்கைகள்‌ சூழ்ந்ததுமாகிய வளம்‌ சான்ற ஊர்‌ இவ்வூராகும்‌. சிவனடியார்களே அதனைப்‌ பாடுவீர்களாக!

4

தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்பாவியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும்ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம்பூ இயலும் பொழில் வாசம் வீசப், புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப்பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

சிவபெருமான்‌ உமாதேவியை ஒரு பாதியாக உடையவர்‌. இடப வாகனத்தில்‌ ஏறி வருபவர்‌. வறுமை புகாதவாறு என்னைக்‌ காப்பவர்‌. எனக்கு உயிர்‌ போன்றவர்‌. கருணையர்‌, என்‌ துயர்‌ போக்குதலால்‌ எனக்குத்‌ தந்தையாகவும்‌ விளங்குபவர்‌. அவர்‌ எழுந்தருளிய ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. பூக்கள்‌ நிறைந்த பொழில்களின்‌ வாசனை வீசுவதும்‌; சுருண்ட கூந்தலை. உடைய மகளிர்‌ காலாலே தாளமிட்டு ஆடித்‌ தேர்ந்த இசையோடு பாடும்‌ பாடல்கள்‌ இடைவிடாது கேட்கப்படுவதுமாகிய ஊர்‌ இவ்வூரேதான்‌.

5

இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம்கொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட மிடையிடை சேரும்வீதிப்பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
இந்து அணையும் சடையார் விடையார் இப்பிறப்பு என்னை அறுக்கவல்லார்வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம்கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதிபந்து அணையும் விரலார் தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

திங்கள்‌ தங்கும்‌ சடையினரும்‌, விடையை ஊர்தியாக உடையவரும்‌, இப்பிறவியில்‌ என்னைப்‌ பற்றிய வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும்‌, தம்மை வந்தடைந்து இன்னிசையால்‌ பாடி வழிபடுவாரிடம்‌ மன்னியிருப்பவரும்‌ ஆகிய சிவபிரான்‌; நிலைபெற்று விளங்கும்‌ ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர்‌ வாழ்வதும்‌, திருவிழாக்களில்‌ மக்கள்‌ கூட்டம்‌ இடையிடையே சேரும்‌ அகன்ற வீதிகளை உடையதும்‌, பந்தாடும்‌ கைவிரல்களினராகிய இளம்பெண்கள்‌ நிறைந்ததுமாகிய ஊரும்‌ இவ்வூரே ஆகும்‌.

6

குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொள்மாடம்சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானம்நல்கப்பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
குற்றம்அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்ஒற்றைவிடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம்சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்கப்,பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

அடியவர்‌ செய்யும்‌ குற்றங்களை நீக்கியவரும்‌, நற்குணங்களை உடையோரிடம்‌ வாழ்பவரும்‌, தம்மைக்‌ கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும்‌, ஓர்‌ எருதைத்‌ தமக்கு ஊர்தியாகக்‌ கொண்டவரும்‌, பிறர்க்கல்லாத நெற்றிக்‌ கண்ணை உடையவரும்‌ ஆகிய சிவபிரான்‌ உறையும்‌ பதி ஆவூர்‌ ஆகும்‌. செறிந்த மாட வீடுகளைச்‌ சார்ந்துள்ள வாசலில்‌ விழாக்‌ காலங்களில்‌ பெண்கள்‌ புகழ்ந்து கவி பாடக்‌ கேட்டு அவ்வீடுகளில்‌ வாழும்‌ செல்வர்கள்‌ பொற்காசுகள்‌ வழங்க, அதனைப்‌ பற்றிய கையினராய்‌ மகளிர்‌ மகிழ்ந்துறையும்‌ ஊரும்‌ இதுவே ஆகும்‌.

7

நீறுடை யார்நெடு மால்வணங்கும் நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்கூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்தஇ ருந்தவூராம்தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம்கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப்பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

திருவெண்ணீற்றை அணிந்தவரும்‌, திருமாலால்‌ வணங்கப்‌ பெறுபவரும்‌, நிமிர்த்துக்‌ கட்டிய சடைமுடி உடையவரும்‌, தம்மை நினைவார்‌ உள்ளத்தில்‌ குடி கொண்டிருப்பவரும்‌, கோவண ஆடை தரித்தவரும்‌ ஆகிய சிவபிரான்‌, மண்ணுலக மக்கள்‌ தம்மைப்‌ புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத்‌ தாற்றில்‌ உண்ணத்‌ தகுதியான பழங்களை வயிறார உண்டு, எஞ்சியுள்ள பழங்களை உண்ணவரும்‌ குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும்‌ தோட்டங்களை உடையதும்‌ இவ்வூரே ஆகும்‌.

8

வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்கண்டவர்2 சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.பாடம் : 2கண்டலர்
சொற்பிரிப்பு
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன்வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும்கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், "கதி அருள்!" என்று கை ஆரக் கூப்பி,பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

வெண்மையான தலைகளை மாலையாகக்‌ கோத்துப்‌ பிற மாலைகளுடன்‌ அணிந்துள்ள திருமேனியை உடையவரும்‌, வண்டுகள்‌ மொய்க்கும்‌ மலர்களைச்‌ சூடிய வலிய இராவணனின்‌ முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும்‌ ஆகிய சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ள இடம்‌ ஆவூர்‌ ஆகும்‌. எங்கும்‌ வளம்‌ ஓங்கியதும்‌, தரிசித்தவர்கள்‌ சித்தத்தால்‌ உயர்ந்தவர்களாய்த்‌ தமக்குக்‌ கதியருள்‌ என்று கைகளைக்‌ கூப்பிப்‌ பழமைதொட்டுச்‌ சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச்‌ சாத்தி வழிபடும்‌ இயல்பினதும்‌ ஆகியதும்‌ இவ்வூரே.ஆகும்‌.

9

மாலும் அயனும் வணங்கிநேட மற்றவ ருக்கெரி யாகிநீண்டசீலம் அறிவரி தாகிநின்ற செம்மையி னாரவர் சேருமூராம்கோல விழாவி னரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட,சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்,பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

திருமாலும்‌, பிரமனும்‌ வணங்கித்‌ தேட, அவர்கட்குச்‌ சோதிப்‌ "பிழம்பாய்‌ நீண்டு தோன்றியவரும்‌, தமது எளிமை பிறரால்‌ அறிதற்கு அரியராய்‌ விளங்குபவரும்‌ செம்மையாரும்‌ ஆகிய சிவபிரான்‌ எழுந்தருளிய ஊர்‌ ஆவூர்‌ ஆகும்‌. அழகிய விழாக்‌ காலங்களில்‌ கொடி போன்ற இடையினை உடைய பெண்கள்‌ அரங்கின்௧கண்‌ ஏறி ஆடவர்களோடு கூடிப்‌ பால்‌ போன்று இனிக்கும்‌ மொழிகளால்‌ இறைவனை ஏத்தும்‌ ஊரும்‌ இவ்வூரே ஆகும்‌.

10

பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ ரிடந்தள வேறுசோலைத்துன்னிய மாதரும் மைந்தர் தாமுஞ் சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.
சொற்பிரிப்பு
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத்துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கிதொடர்ந்தசிந்தைப்பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
உரை

பின்னித்‌ தொங்கவிடப்பட்ட சடையை உடைய சமண இல்லறத்தார்களும்‌ சாக்கியர்களும்‌ தங்களைப்‌ பற்றியும்‌ தாங்கள்‌ சார்ந்த மதங்களின்‌ சிறப்புக்களைப்‌ பற்றியும்‌ கூற, அவற்றை ஏற்க மறுத்தவராய்‌ விளங்கும்‌ சிவபெருமானாகிய ஆதி சைவன்‌ விரும்பி உறையும்‌ இடம்‌ ஆவூர்‌ ஆகும்‌. முல்லைக்‌ கொடி படர்ந்த சோலைகளில்‌ மாதரும்‌ மைந்தரும்‌ நெருங்கிச்‌ சுனையில்‌ மூழ்கிச்‌ சிவபிரானை மனம்‌ ஒன்றிப்‌ பாடுவதும்‌ இவ்வூரே ஆகும்‌.

11

எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு மானை யெழில்கொளாவூர்ப்பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்னகொண்டினி தாவிசை பாடியாடிக் கூடு மவர்உடை யார்கள்வானே.
சொற்பிரிப்பு
எண்திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை எழில்கொள்ஆவூர்ப்பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல்கண்டல்கள்மிண்டிய கானல்காழிக் கவுணியன்-ஞானசம்பந்தன்-சொன்னகொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே.
உரை

எட்டுத்‌ இசையில்‌ உள்ளவர்களும்‌ வணங்கிப்‌ போற்றும்‌ எம்‌ தலைவரும்‌, அழகிய ஆவூரில்‌ பழ அடியார்களால்‌ போற்றப்‌ பெறுபவரும்‌ ஆகிய பசுபதீயீச்சரத்து இறைவர்மேல்‌ தாழை மரங்கள்‌ நிறைந்த கடற்கரைச்‌ சோலைகளால்‌ சூழப்பட்ட €காழிப்‌ பதியில்‌ கவுணியர்‌ குடியில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள்‌, வானகத்தைத்‌ தமது உடைமையாகப்‌ பெறுவர்‌.