திருமுறை 1 · 1.007 · 11

திருநள்ளாறும்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
நள்ளாறு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்றுநாடகம் ஆடும்நள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்தஆடக மாடம் நெருங்குகூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
சொற்பிரிப்பு
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
உரை

பாடகம்‌ என்னும்‌ அணிகலன்‌ அணிந்த மென்மையான அடிகளை உடைய உமையம்மையோடு, பிணக்காடாகிய இடுகாட்டைப்‌ பற்றி நின்று நாடகம்‌ ஆடும்‌ நள்ளாற்று நம்‌ பெருமானே! கையில்‌ வளையல்‌ அணிந்த மகளிர்‌ தம்‌ துணைவர்களோடும்‌ கூடி வந்து வழிபடும்படியாய்ப்‌ பொன்‌ மாளிகைகள்‌ நிறைந்த கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ விரும்பி உறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக. குறிப்புரை: பாடகம்‌ - காலணிகளுள்‌ ஒன்று. பாடக, மெல்லடி என்று இணைத்தது பாடகத்தின்‌ வன்மையும்‌ அதனைத்‌ தாங்கல்‌ ஆற்றாத அடியின்‌ மென்மையும்‌ குறித்தவாறு. சூடகம்‌ - வளை. துணைவர்‌ - கணவர்‌. ஆடகமாடம்‌ - பொன்‌ மாளிகைகள்‌.

2

திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் செஞ்சடை மாட்டயல் வைத்துகந்துநங்கண் மகிழுநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்பொங்கிள மென்முலை யார்களோடும் புனமயி லாட நிலாமுளைக்கும்அங்கழ கச்சுதை1 மாடக்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.பாடம் : 1அங்களபச்சுதை
சொற்பிரிப்பு
திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல் வைத்து உகந்து,நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா முளைக்கும்அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை

பிறைமதி, அழகிய மலர்கள்‌, . வளமான கங்கை நதி. ஆகியவற்றைத்‌ தன்‌ செஞ்சடையின்மேல்‌ அருகருகே வைத்து மகிழ்ந்து நம்‌ கண் களிக்குமாறு நள்ளாற்றின்௧கண்‌ எழுந்தருளிய நம்பெருமானே! பூரித்து எழும்‌ மென்மையான இளைய தனங்களை உடைய மடந்தையரோடு கானகத்தில்‌ வாழும்‌ ஆண்‌ மயில்கள்‌ கூடலில்‌ களித்தாடுகின்றன. பெருமை மிக்க தமிழ்ச்‌ சங்கத்தனையும்‌; நிலவொளி மிகுதியாகப்‌ பிரகாசிக்குமாறு வெண்மையான சுண்ணாம்பினால்‌ கட்டப்பட்ட: மாடங்களையும்‌ உடைய கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ விரும்பி உறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

3

தண்ணறு2 மத்தமுங் கூவிளமும் வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்நண்ணல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார்அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.பாடம் : 2தண்ணுறு
சொற்பிரிப்பு
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி, யார்க்கும்நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை

குளிர்ந்த மணம்‌ வீசும்‌ ஊமத்தை மலர்‌, வில்வம்‌ ஆகியவற்றையும்‌ வெண்மையான தலை மாலையையும்‌ அணிந்துள்ள நம்பெருமானே! உன்‌ அருள்‌ இருந்தாலன்றி உன்னை யாராலும்‌ அடைந்து வழிபடற்கரிய நள்ளாற்றின்கண்‌ எழுந்தருளியவனே! புண்ணிய வாணரும்‌, மாதவர்களும்‌ வந்து ஏத்துவதும்‌, அணிகலன்கள்‌ புனைந்த மகளிர்‌ உனது புகழ்‌ சேர்ந்த பாடல்களைப்‌ பாடுவதுமான கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ விரும்பி உறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

4

பூவினில் வாசம் புனலிற்பொற்புப் புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடுநாவினிற் பாடல்நள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்தேவர்கள் தானவர் சித்தர்விச்சா தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கிஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
சொற்பிரிப்பு
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில் நாற்றத்தோடு,நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து பொங்கி,ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
உரை

பூக்களில்‌ வாசனையாய்‌, நீரில்‌ தண்மையாய்‌, புதிய சந்தனத்தில்‌ மணமாய்‌, நாவில்‌ பாடலாய்க்‌ கலந்து விளங்கும்‌ நள்ளாற்று நம்‌ பெருமானே! தேவர்களும்‌, அசுரர்களும்‌, சித்தர்களும்‌, வித்யாதரர்களும்‌ ஆகிய கூட்டத்தினரோடு சிறந்து விளங்குபவனே! பசுவினிடம்‌ தோன்றும்‌ பஞ்சகவ்வியங்களால்‌ ஆட்டி வழிபடக்‌ கூடியவனே! கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ விரும்பி உறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

5

செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் திருந்து புகையு மவியும்பாட்டும்நம்பும்பெருமைநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்உம்பரும் நாக ருலகந்தானும் ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்அம்புத நால்களால் நீடுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
சொற்பிரிப்பு
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும், பாட்டும்,நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?
உரை

செம்பொன்னால்‌ செய்த மாலைகள்‌, திருவாசி மாலைகள்‌ ஆகியவற்றுடன்‌ மணப்புகை, நிவேதனம்‌, தோத்திரம்‌, முதலியவற்றையும்‌ விரும்பி ஏற்கும்‌ பெருமை உடைய விண்ணவரும்‌, நாகர்‌ உலகத்தவரும்‌, ஒலிக்கும்‌ நள்ளாற்றில்‌ விளங்கும்‌ நம்‌ பெருமானே! கடலால்‌ சூழப்பட்ட மண்ணுலக மக்களும்‌ உன்னை ஏத்துகின்றனர்‌. நான்கு மேகங்களால்‌ சூழப்பட்ட கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ விரும்பி உறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக. திருவாசி (ஒருவகை மாலை). அவி - 'நைவேத்தியம்‌. பாட்டு - தோத்திரம்‌. விரும்பும்‌ பெருமை - அனைவரும்‌ இவரே எமக்கு அடைக்கலமாவார்‌ என்று நம்பும்‌ பெருமை. உம்பர்‌ - அம்புதம்‌ நால்களான்‌ நீடுங்கூடல்‌ - நான்கு மேகங்கள்‌ கூடிய கூடல்‌ நகர்‌.

6

பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்நாகமும் பூண்டநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர்நண்ணும் புணர்வுபூண்டஆகமு டையவர் சேருங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
சொற்பிரிப்பு
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய பேழ்வாய்நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்டஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை

இடப்பாகமாக உமையம்மையை வைத்துக்‌ கொண்டு, படமும்‌ புள்ளிகளும்‌ பெரிதாகப்‌ பிளந்த வாயையும்‌ உடைய நாகத்தைப்‌ பூண்டுள்ள நள்ளாறுடைய நம்‌ பெருமானே! சிவபுண்ணியத்தில்‌ மிக்க அடியவர்‌ நின்னை மனத்தில்‌ வைத்துத்‌ தியானிப்பதனால்‌ போகமும்‌, நண்ணுவதற்குரிய யோக நெறியினை மேற்கொண்டு ஒழுகுதற்கேற்ற உடம்பு உடையவராய்‌ சேர்ந்துறையும்‌ கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ ,அமர்ந்து உறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

7

கோவண ஆடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்நாவணப் பாட்டுநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்பூவண மேனி இளையமாதர் பொன்னும் மணியுங் கொழித்தெடுத்துஆவண வீதியி லாடுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
சொற்பிரிப்பு
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும்,நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து,ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை

வேதமாகிய கோவண ஆடையும்‌, திருநீற்றுப்‌ பூச்சும்‌, கொடிய மழுவாயுதத்தை ஏந்தலும்‌, சிவந்த சடையும்‌) நாவில்‌ பல்வே று சந்தங்களில்‌ பாடும்‌ வேதப்‌ பாட்டும் உடையவனாய்‌ இலங்கும்‌ நள்ளாற்றுள்‌ எழுந்த ருளிய நம்‌ பெருமானே! பூப்போலும் மெல்லிய மேனியை உடைய இளம்‌ பெண்கள்‌ பொன்‌, மணி முதலியவற்றைக்‌ கொழித்து எடுத்துக்‌ கடைவீதியில்‌ விளையாடும்‌ கூடல்‌ ஆலவா யின்கண்‌ நீ அமர்ந்து விளங்கக்‌ காரணம் யாதோ? சொல்வாயாக.

8

இலங்கை இராவணன் வெற்பெடுக்க எழில்விர லூன்றி யிசைவிரும்பிநலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும்அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
சொற்பிரிப்பு
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி, இசை விரும்பி,நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச் சிந்தைசெய்யும்அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை

இலங்கை மன்னன்‌ இராவணன்‌ கயிலை மலையைப்‌ பெயர்த்தபோது, சிவபெருமான்‌ தனது அழகிய கால்‌ விரலை ஊன்றி அடர்த்துப்‌ பின்‌ அவனது இசையை விரும்பிக்‌ கேட்டு, அவனுக்கு நன்மைகள்‌ பலவும்‌ பொருந்துமாறு உளங்கொண்ட நள்ளாறுடைய நம்‌ பெருமானே! ஐம்புல இன்பங்களை வெறுத்து, அவற்றைத்‌ தரும்‌ ஐம்பொறிகளை மடை மாற்றி, புந்தியில்‌ உன்னையே சிந்தனை செய்யும்‌ தூய வாழ்க்கையை உடைய சிவஞானிகள்‌ வாழும்‌ கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ அமர்ந்துறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

9

பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்நணுகல் அரியநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி யென்றும்ஓவாதணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
சொற்பிரிப்பு
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாதுஅணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை

பாம்பணையானாகிய திருமாலும்‌ தாமரை மலரில்‌ எழுந்தருளிய நான்முகனும்‌ முறையே பன்றியாயும்‌ பறவை இனங்களில்‌ மேம்பட்ட அன்னமாயும்‌, அடிமுடிகளைத்‌ தேடியும்‌ நணுக முடியாத நள்ளாறுடைய நம்‌ பெருமானே! மணி ஓலியும்‌, சங்கொலியும் சிறந்த முரசின்‌ ஒலியும்‌ என்றும்‌ இடையறாது கேட்கும்‌ சிறப்பினதும்‌, மேம்பட்ட வேந்தர்கள் புகுந்து வழிபடும் பெருமையதும்‌ ஆகிய கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ எழுந்தருளி விளங்கக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக

10

தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியில் நீங்கிய வத்தவத்தர்நடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்எடுக்கும் விழவும்நன் னாள்விழவும் இரும்பலி யின்பினோ3 டெத்திசையும்அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.பாடம் : 3பலியன்பினோ
சொற்பிரிப்பு
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர்நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எத்திசையும்அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?
உரை

ஓலைத்‌ தடுக்கைக்‌ கையில்‌ ஏந்தித்‌ திரியும்‌ சமணர்களும்‌ சாக்கியர்களும்‌ மரபு நீங்கிய வீண்‌ தவத்தராவர்‌. அவர்கள்‌ மெய்ந்‌ நெறியாகிய சைவ சமயத்தைக்‌ கண்டும்‌, அச்சமயிகளின்‌ வழிபடு கடவுளைக்‌ கண்டும்‌, நடுக்கம்‌ உறுமாறு திருநள்ளாற்றுள்‌ விளங்கும்‌ நம்‌ பெருமானே! நாள்‌ விழாவும்‌, சிறப்பு விழாவும்‌, நன்கு நடைபெற, அவ்விழாவில்‌ வழங்கும்‌ பெருவிருந்தால்‌ விளையும்‌ மகிழ்வு எத்திசையும்‌ பொருந்திப்‌ பெருமை சேர்க்கும்‌ மாடக்‌ கூடல்‌ ஆலவாயின்கண்‌ நீ மகிழ்ந்துறைதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

11

அன்புடை யானை அரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்றுநன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும்பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்னஇன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவ ரேத்த இருப்பர்தாமே.
சொற்பிரிப்பு
அன்பு உடையானை, அரனை, "கூடல் ஆலவாய் மேவியது என்கொல்?" என்று,நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும்பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்—ஞானசம்பந்தன்—சொன்னஇன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே.
உரை

எல்லா உயிர்களிடத்தும்‌ அன்புடையவனாம்‌, அரனைக்‌ கூடல்‌ ஆலவாயில்‌ மேவியதற்குக்‌ காரணம்‌ யாதெனக்‌ கேட்டுத்‌ தூய பொன்‌ போன்றவனாகவும்‌, தலைவனாகவு ம்‌ விளங்கும்‌ திருநள்ளாற்று இறைவனை நயமாகப்‌ போற்றி, நலம்‌ பயக்கும்‌ செம்பொன்‌ நிறைந்த மாடவீடுகளால் சூழப்பட்ட சீகாழிப்‌ பதியில்‌ தோன்றிய பூசுரனாகிய ஞானசம்பந்தன்‌ பாடிய இனிய இத்தி ருப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ ஓதவல்லவர்‌, இமையவர்‌ ஏத்தத்‌ தேவருலகில்‌ விளங்குவர்‌.