திருமுறை 1 · 1.006 · 11

திருமருகலும்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
மருகல்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர் கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
சொற்பிரிப்பு
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்செங்கயல்ஆர்புனல் செல்வம்மல்கு சீர்கொள்செங்காட்டங்குடிஅதனுள்கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

நான்கு வேதங்களையும்‌ ஆறு அங்கங்களையும்‌ ஓதும்‌ நாவினராகிய அந்தணர்கள்‌ நாள்தோறும்‌ மருகற்பெருமான்‌ திருவடிகளை வணங்குகின்றார்கள்‌. வான மண்டலத்தில்‌ உள்ள சந்திரன்‌ தவழ்ந்து செல்லுதற்கு இடமாய்‌ உயர்ந்து விளங்கும்‌ மாடவீதிகளை உடையது திருமருகல்‌. அங்கு எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள்‌ நிறைந்த புனல்‌ சூழ்ந்ததும்‌, செல்வ ;வளம்‌ நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில்‌ எரியைக்‌ கையில்‌ ஏந்தி நள்ளிருளில்‌ நட்டம்‌ ஆடுதற்கு இடமாய்க்‌ கணபதீயீச்சரத்தைக் காமுறுதல்‌ ஏன்‌? சொல்வாயாக.

2

நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
சொற்பிரிப்பு
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

திருமருகலில்‌ வாழும்‌ அந்நணர்கள்‌ முப்புரிநூல்‌ அணிந்த வேத வித்துக்களாய்‌ விளங்குகிறார்கள்‌. அவர்கள்‌ முத்து வளர்த்து அதில்‌ அவிப்பொருளாக நெய்விட்டு ஓம்புகிறார்கள்‌. அந்த யாக குண்டத்தில்‌ தவழ்ந்து எரியும்‌ முத்தீயைப்‌ பாதுகாப்பாக ஓம்பி வருகிறார்கள்‌. திருமருகலில்‌ கரிய மேகங்கள்‌ தவழும்‌ மாடங்கள்‌ நிறைந்த வீடுகள்‌ உடைய வீதிகள்‌ பல உள. இத்தனை திறப்புகள்‌ வாய்ந்த திருமருகலில்‌ எழுந்தருளிய இறைவனே! தவங்கள்‌ பலவும்‌ செய்யும்‌ நான்மறையோர்‌ போற்றும்‌ புகழ்‌ பொருந்திய ஊர்‌ திருச்செங்காட்டங்குடி ஆகும்‌. அங்குள்ள கணபதீயீச்சரக்‌ கோயில்‌ உனது திருக்கரத்தில்‌ மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்‌ காமுறக்‌ காரணம்‌ என்ன? சொல்வாயாக.

3

தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
சொற்பிரிப்பு
தோலொடு நூல்இழை சேர்ந்த மார்பர், தொகும் மறை யோர்கள் வளர்த்தசெந்தீமால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்சேல்புல்குதண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?
உரை

மான்‌ தோலோடு கூடிய முப்புரி நூல்‌ அணிந்த மார்பினராய்த்‌ திரளாய்‌ நின்று வேதம்‌ பயிலும்‌ அந்தணர்கள்‌ வளர்த்த செந்தீயிலிருந்து எழுந்த கரிய புகை திருமருகலின்‌ ஆகாயத்தில்‌ மிகவும்‌ மிகுதியாக வெளிப்படுகின்றன. அங்கு மாடங்களோடு கூடிய வீதிகள்‌ பல உள. சேல்கள்‌ நிறைந்த குளிர்ந்த வயல்களை அடுத்த சோலைகளால்‌ சூழப்பட்ட சிறப்புமிக்க ஊர்‌ திருச்செங்காட்டங்குடி ஆகும்‌. இவ்விரு ஊர்களிலும்‌ விளங்கும்‌ இறைவனே, உன்‌ திருவடிகளில்‌ கட்டிய கழல்கள்‌ ஆர்க்க ஆடிக்‌ கொண்டு கணபதீயீச்சரத்தைக்‌ காமுறுதற்குக்‌ காரணம்‌ என்ன? சொல்வாயாக.

4

நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய மாமரு வும்மணிக் கோயில்மேய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
சொற்பிரிப்பு
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய,மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

நாவிற்‌ பொருந்தியவாய்ப்‌ பயிலப்பட்டு வரும்‌ வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும்‌, வேள்விகளை இடைவிடாமல்‌ செய்து வருபவர்களுமாகிய நான்மறையாளர்‌ வழிபடச்‌, செல்வம்‌ மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில்‌ விளங்கும்‌ மைந்தனே! தேன்‌ நிறைந்த அழகிய பொழில்களால்‌ சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில்‌ விளங்குகின்ற அழகும்‌ பெருமையும்‌ மிக்க கணபதியீச்சரத்தைக்‌ காமுற்று இராப்போதில்‌ நடனம்‌ ஆடுதற்குக்‌ காரணம்‌ யாது? சொல்வாயாக.

5

பாடல் முழவும் விழவும்ஓவாப் பன்மறை யோரவர் தாம்பரவ மாட நெடுங்கொடி விண்தடவும் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காடக மே1யிடமாக ஆடுங் கணபதி யீச்சரங் காமுறவே.பாடம் : 1காடயலே
சொற்பிரிப்பு
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

பாடலும்‌, அதற்கசைந்த முழவு ஒலியும்‌, திருவிழாக்கள்‌ ஒலியும்‌ இடைவிடாமல்‌ நிகழ்வதும்‌ மாடவீடுகளில்‌ கட்டிய கொடிகள்‌ வானைத்‌ தடவுவதும்‌ ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில்‌ வேதங்கள்‌ பலவும்‌ கற்ற அந்தணாளர்‌ பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம்‌ மிக்க மலர்ச்‌ சோலைகளால்‌ சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில்‌, காட்டிடமே நாடகம்‌ ஆடுதற்கு இடமாக இருக்கவும்‌, நீ நடனம்‌ புரியம்‌ இடமாகக்‌ கணபதியீச்சரத்தைக்‌ காமுறக்‌ காரணம்‌ என்ன? சொல்வாயாக.

6

புனையழ லோம்புகை அந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப மனைகெழு மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கனைவளர் கூரெரி ஏந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
சொற்பிரிப்பு
புனைஅழல் ஓம்பு கை அந்தணாளர் பொன்அடிநாள்தொறும்போற்றிஇசைப்பமனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்சினைகெழுதண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

கிரியைகள்‌ பலவற்றாலும்‌ அழகு செய்யப்‌ பெற்ற முத்தீயை வளர்க்கும்‌ கைகளை உடைய அந்தணர்கள்‌, நாள்தோறும்‌ உன்‌ திருவடிகளைப்‌ போற்றி வருகின்றனர்‌. இல்லங்களில்‌ "விளங்கும்‌ மாடங்கள்‌ நிறைந்த வீதிகளை உடையது திருமருகல்‌. அங்கு விளங்கும்‌ இறைவனே! நெற்பயிர்கள்‌ திளைத்து வளரும்‌ தண்‌ வயல்களை அடுத்த சோலைகளால்‌ சூழப்பெற்ற நீர்வளம்‌ மிக்க செங்காட்டங்குடி- அங்குள்ள கணபதியீச்சரத்தைக்‌ காமுற்று நீ எரியேந்தி நடனம்‌ புரியக்‌ காரணம்‌ என்ன? சொல்வாயாக.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன் பொன்னெடுந்தோள்வரை யாலடர்த்து மாண்டங்கு நூன்மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.
சொற்பிரிப்பு
பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன் பொன் நெடுந்தோள் வரையால்அடர்த்துமாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்சேண்தங்குமா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங் குடி அதனுள்காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

: இலங்கை மன்னன்‌ இராவணன்‌ அழகிய பெரிய தோள்களை உடையவன்‌ அவன்‌ மார்பில்‌ அணிகலன்கள்‌ பல அணிந்துள்ளான்‌. அவன்‌ இவன்‌ வீற்றிருக்கும்‌ கயிலை மலையைத்‌ தூக்கி நகர்த்து வைக்க முற்பட்டான்‌. சிவன்‌ தன்‌ கால்‌ கட்டை விரலால்‌ சிறிது அழுத்தினான்‌. இராவணன்‌ மலையால்‌ நசுக்கப்பட்டு அலறி மன்னிப்புக்‌ கோரி சாம கீதம்‌ பாடினான்‌. மாட்டுமை பொருந்திய நான்மறையோர்கள்‌ பரவி வணங்கப்படும்‌ சிவபெருமான்‌ திருமருகலில்‌ எழுந்தருளியிருக்கின்றான்‌. அங்கு விளங்கும்‌ இறைவனே! வானளாவிய மணமலர்ச்‌ சோலைகளால்‌ சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில்‌ அழகிய உன்‌ திருத்தோள்களை அசைத்து இரவில்‌ நடமிடுதற்கு இடனாய்க்‌ கணபதீயீச்சரத்தைக்‌ காமுறக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

9

அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய மந்திர வேதங்க ளோதுநாவர் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கந்தம் அகிற்புகை யேகமழுங் கணபதி யீச்சரங் காமுறவே.
சொற்பிரிப்பு
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய,மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

நான்முகனும்‌ அரவணையானும்‌ ஆதியாய முடியையும்‌ அந்தமாகிய அடியையும்‌ அறிதற்கு அரியவனான சிவனே, மந்திர வடிவான வேதங்களை ஓதும்‌ நாவினரான அந்தணர்‌ பரவி ஏத்தத்‌ திருமருகலில்‌ விளங்கும்‌ இறைவனே! செந்தமிழ்‌ வல்லோர்‌ பரவித்‌ துதிக்கும்‌ சிறப்புமிக்க செங்காட்டங்குடியில்‌ அகில்‌ புகை, மணமே கமழும்‌ கணபதீயீச்சரத்தைக்‌ காமுறக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

10

இலைமரு தேயழ காகநாளு மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும் நிலையமண் தேரரை நீங்கிநின்று2 நீதரல் லார்தொழு மாமருகல் மலைமகள் தோள்புணர் வாயருளாய் மாசில்செங் காட்டங் குடியதனுள் கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.பாடம் : 2நீங்கிநின்ற,நீங்கநின்ற
சொற்பிரிப்பு
இலை மருதே அழகு ஆக நாளு ம்இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல்,மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள்கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
உரை

மருத மரத்து இலையின்‌ சாற்றினால்‌ சாயம்‌ பூசிக்கொண்டு, கடுக்காய்‌, சுக்கு இவற்றைத்‌ தின்னும்‌ புத்தர்‌, சமணர்‌ ஆகியோரை விடுத்து, சைவர்கள்‌ தொழத்‌ திருமருகலில்‌ மலைமகளோடு உறையும்‌ மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில்‌ மான்‌ தோலை உடுத்தி நள்ளிருளில்‌ ஆடுதற்கு இடனாய்க்‌ கணபதியீச்சரத்தைக்‌ காமுறுதற்குக்‌ காரணம்‌ யாதோ? சொல்வாயாக.

11

நாலுங்குலைக்கமு கோங்குகாழி ஞானசம் பந்தன் நலந்திகழும் மாலின் மதிதவழ் மாடமோங்கும் மருகலின் மற்றதன் மேல்மொழிந்த சேலுங் கயலுந் திளைத்தகண்ணார் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் சூலம்வல் லான்கழ லேத்துபாடல் சொல்லவல் லார்வினை யில்லையாமே.
சொற்பிரிப்பு
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்சூலம்வல்லான் கழல் ஏத்துபாடல் சொல்ல வல் லார் வினை இல்லைஆமே
உரை

தொங்குகின்ற குலைகளோடு பாக்கு மரங்கள்‌ ஓங்கி வளரும்‌ €காழிப்‌ பதியினனாய ஞானசம்பந்தன்‌, நலம்‌ இகழ்வதும்‌, மேகமும்‌ பிறையும்‌ தவழும்‌ மாடங்கள்‌ ஓங்கியதுமான திருமருகல்‌ இறைவனையும்‌, சேல்‌ கயல்‌ ஆகிய மீன்‌ வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர்‌ வாழ்வதும்‌ சிறப்பு மிக்கதும்‌ ஆகிய செங்காட்டங்குடியில்‌ முத்தலைச்‌ சூலம்‌ ஏந்தியவனாய்‌ விளங்கும்‌ பெருமானையும்‌ புகழ்ந்து ஏத்திய பாடல்களைச்‌ சொல்லித்‌ துதிக்க வல்லார்‌ வினைகள்‌ இல்லையாகும்‌.