திருமுறை 1 · 1.003 · 11

திருவலிதாயம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
வலிதாயம்
நாடு
தொண்டைநாடு

1

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப் புனல்தூவிஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்த உயர்சென்னிமத்தம்வைத்தபெரு மான்பிரியா துறைகின்ற வலிதாயம்சித்தம்வைத்தஅடி யாரவர்மேல டையாமற் றிடர்நோயே.
சொற்பிரிப்பு
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னிமத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.
உரை

வலிதாயம்‌ சித்தம்‌ வைத்த அடியார்களை இடர்நோய்‌ அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள்‌, விளங்குகின்ற அழகிய மலர்களை வலது உள்ளங்கையில்‌ ஏந்தி மந்திரத்தோடு நீர்‌ வார்த்துப்‌ பூசிக்க அவர்களோடு ஓரே இசையில்‌ அம்மந்திரங்களைச்‌ சொல்லி உலக மக்கள்‌ தாமும்‌ வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச்‌ சூடிய பெருமான்‌ பிரியாதுறையும்‌ வலிதாயம்‌ என்ற தலத்தைத்‌ தம்‌ சித்தத்தில்‌ வைத்துள்ள அடியவர்கள்‌ மேல்‌, துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

2

படையிலங்குகரம் எட்டுடை யான்படி றாகக்கனலேந்திக்கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும் வலிதாயம்அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல் துயர்தானே.
சொற்பிரிப்பு
படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக்கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில்,மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.
உரை

படைக்கலங்களை ஏந்திய எட்டுத்‌ திருக்கரங்களை உடைய : பெருமானும்‌, பொய்யாகப்‌ பலியேற்பது போலப்‌ பிரம கபாலத்தைக்‌ கையில்‌ ஏந்தி வீடுகளின்‌ வாயில்களிற்‌ சென்று பலியேற்று உண்ணும்‌ கள்வனும்‌ ஆகிய பெருமான்‌ உறையும்‌ கோயிலை உடையதும்‌, நீர்வரும்‌ வழிகள்‌ அடுத்துள்ள பொழில்களின்‌ நீழலில்‌ தேன்மணம்‌ கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும்‌ அடியவர்களை, வினை, அல்லல்‌, துயர்‌ ஆகியன வந்தடைய மாட்டா.

3

ஐயனொய்யன்அணி யன்பிணியில்லவ ரென்றுந் தொழுதேத்தச்செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோ டுறைகோயில்வையம்வந்துபணி யப்பிணிதீர்த் துயர்கின்ற வலிதாயம்உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால் வினைதீருந் நலமாமே.
சொற்பிரிப்பு
ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த,செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திரு மாதோடு உறை கோயில்வையம் வந்து பணிய, பிணி தீர்த் துஉயர்கின்ற வலி தாயம்உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.
உரை

வலிதாயத்தை உய்யும்‌ வண்ணம்‌. நினைமின்‌; நினைந்தால்‌ பிணி தீரும்‌, இன்பம்‌ ஆம்‌ என வினை முடிபு கொள்க. அழகன்‌, நுண்ணியன்‌, அருகிலிருப்பவன்‌, செந்நிற மேனியன்‌, நெடிய மழுவை ஏந்தும்‌ ஆற்றலன்‌, அவன்‌ பாசங்கள்‌ நீங்கிய அடியவர்‌ ' எக்காலத்தும்‌ வணங்கித்‌ துதிக்குமாறு உமையம்மையோடு உறையும்‌ கோயில்‌ உலக மக்கள்‌ அனைவரும்‌ வந்து பணிய அவர்களின்‌ பிணிகளைத்‌ தீர்த்து உயரும்‌ திருவலிதாயம்‌ என்ற அத்தலத்தை நீவீர்‌ உய்யும்‌ வண்ணம்‌ நினையுங்கள்‌. நினைந்தால்‌ வினைகள்‌ தீரும்‌. நலங்கள்‌ உண்டாகும்‌.

4

ஒற்றைஏறதுடை யான்நடமாடி யோர்பூதப் படைசூழப்புற்றில்நாகம்அரை யார்த்துழல்கின்ற எம்பெம்மான் மடவாளோடுற்றகோயிலுல கத்தொளிமல் கிடஉள்கும் வலிதாயம்பற்றிவாழும்அது வேசரணாவது பாடும் மடியார்க்கே.
சொற்பிரிப்பு
ஒற்றை ஏறு அது உடையான்; நடம் ஆடி, ஒர் பூதப்படை சூழ;புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான்; மடவாளோடுஉற்ற கோயில் உலகத்து ஒளி மல் கிட உள்கும் வலி தாயம்பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.
உரை

அடியவர்க்கு வலிதாயத்தைப்‌ பற்றி வாழ்வதே சரண்‌ என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன்‌. இறந்த பூதப்படைகள்‌ சூழ்ந்து வர, புற்றில்‌ வாழும்‌ நாகங்களை இடையில்‌ கட்டி நடனமாடி, உழலும்‌ எம்பெருமான்‌, உமையம்மையோடு உறையும்‌ கோயில்‌ உலகத்தின்‌ பெருமையையும்‌ சேரத்‌ திகழ்கின்ற திருவலிதாயம்‌. இறைவனை யாடி துதி செய்யும்‌ அடியவர்கட்கு அத்தலத்தைப்‌ பற்றி வாழ்வதே அரணாம்‌.

5

புந்தியொன்றிநினை வார்வினை யாயினதீரப் பொருளாயஅந்தியன்னதொரு பேரொளியான் அமர்கோயில் அயலெங்கும்மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்சிந்தியாதஅவர் தம்மடும்வெந் துயர்தீர்த லெளிதன்றே.
சொற்பிரிப்பு
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆயஅந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்சிந்தியாத அவர் தம் அடும் வெந் துயர் தீர்தல் எளிது அன்றே.
உரை

வலிதாயம்‌ கோயிலைச்‌ சிந்தியாதவர்‌ துயர்‌ தீர்தல்‌ எளிதன்று என முடிபு கொள்க. மனம்‌ ஒன்றி நினைபவர்‌ வினைகளைத்‌ தீர்த்து அவர்க்குத்‌ தியானப்‌ பொருளாய்ச்‌ செவ்வான்‌ அன்ன பேரொளியோடு காட்சி தரும்‌ இறைவன்‌ எழுந்தருளியுள்ள கோயிலாய்‌ அயலில்‌ மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும்‌ சிறப்பை உடைய திருவலிதாயத்தைச்‌ சிந்தியாத அவர்களைத்‌ தாக்கும்‌ கொடிய துன்பம்‌ தீர்தல்‌ எளிதன்று.

6

ஊனியன்றதலை யிற்பலிகொண்டு லகத்துள் ளவரேத்தக்கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன் சடைதன்மேல்வானியன்றபிறை வைத்தஎம் மாதிமகிழும் வலிதாயம்தேனியன்றநறு மாமலர்கொண்டு நின்றேத்தத் தெளிவாமே.
சொற்பிரிப்பு
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த,கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல்வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம்தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.
உரை

வலிதாயத்து இறைவனை நறுமாமலர்‌ கொண்டு நின்றேத்தத்‌ தெளிவு ஆம்‌ என வினை முடிபு கொள்க. ஊன்‌ கழிந்த பிரம கபாலத்தில்‌ பலி ஏற்று உலகத்தவர்‌ பலரும்‌ ஏத்தக்‌ காட்டில்‌ திரியும்‌ களிற்று யானையின்‌ தோலை உரித்துப்‌ போர்த்துத்‌ திரியும்‌ கள்வனும்‌, சடையின்மேல்‌ வானகத்துப்‌ பிறைக்கு அடைக்கலம்‌ அளித்துச்‌ சூடிய எம்‌ முதல்வனும்‌ ஆகிய பெருமான்‌, மகழ்ந்துறையும்‌ திருவலிதாயத்தைத்‌ தேன்‌ நிறைந்த நறுமலர்‌ கொண்டு நின்று ஏத்தச்‌ சிவஞானம்‌ விளையும்‌.

7

கண்ணிறைந்தவிழி யின்னழலால் வருகாமன் னுயிர்வீட்டிப்பெண்ணிறைந்தவொரு பால்மகிழ்வெய்திய பெம்மா னுறைகோயில்மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும் வலிதாயத்துண்ணிறைந்தபெரு மான்கழலேத்த நம்உண்மைக் கதியாமே.
சொற்பிரிப்பு
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி,பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்துஉள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.
உரை

வலிதாய நாதன்‌ கழலை ஏத்தினால்‌ வீட்டின்பத்தை அடையலாம்‌ என வினை முடிபு காண்க. நெற்றி விழியின்‌ அழலால்‌, தேவர்‌ ஏவலால்‌ வந்த காமனது உயிரை அழித்துத்‌ தனது திருமேனியின்‌ பெண்ணிறைந்த இடப்பாகத்தால்‌ மகழ்வெய்திய பெருமான்‌ உறை கோயிலாய்‌ நிலவுலகெங்கும்‌ நிறைந்த புகழைக்‌ கொண்ட அடியவர்கள்‌ வணங்கும்‌ திருவலிதாயத்துள்‌ நிறைந்து நிற்கும்‌ பெருமான்‌ திருவடிகளை வணங்கினால்‌ வீடு பேறு அடையலாம்‌.

8

கடலில்நஞ்சமமு துண்டிமையோர் தொழுதேத்த நடமாடிஅடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மா னமர்கோயில்மடலிலங்குகமு கின்பலவின் மதுவிம்மும் வலிதாயம்உடலிலங்கும் உயிர்ருள்ளளவுந் தொழஉள்ளத் துயர்போமே.
சொற்பிரிப்பு
கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி,அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம்உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.
உரை

திருப்பாற்கடலைக்‌ கடைந்தபோது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள்‌ தொழுது வாழ்த்த நடனம்‌ ஆடி, வலிமை மிக்க இலங்கை மன்னனின்‌ ஆற்றலை அழித்துப்‌ பின்‌ அவனுக்கு நல்லருள்‌ புரிந்த இறைவன்‌ எழுந்தருளிய கோயிலை உடையதும்‌, மடல்கள்‌ விளங்கும்‌ கமுகு பலாமரம்‌ ஆகியவற்றின்‌ தேன்‌ மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத்‌ தலத்தை நினைக்க மனத்துயர்‌ கெடும்‌.

9

பெரியமேருவரை யேசிலையா மலைவுற்றா ரெயில்மூன்றும்எரியஎய்தவொரு வன்னிருவர்க் கறிவொண்ணா வடிவாகும்எரியதாகியுற வோங்கியவன் வலிதாயந் தொழுதேத்தஉரியராகவுடை யார்பெரியா ரெனஉள்கும் முலகோரே.
சொற்பிரிப்பு
பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார் எயில் மூன்றும்எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்எரி அது ஆகி உற ஓங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த,உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.
உரை

வலிதாயத்தை வணங்குவாரைப்‌ பெரியார்‌ என உலகோர்‌ உள்குவர்‌ என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர அசுரர்களின்‌ கோட்டைகள்‌ மூன்றையும்‌, மிகப்‌ பெரிய மேருமலையை வில்லாகக்‌ கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும்‌, திருமால்‌ பிரமன்‌ ஆகிய இருவராலும்‌ அறிய ஒண்ணாத அழல்‌ வடிவாய்‌ உயர்ந்து ஓங்கியவனும்‌ ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத்‌ தொழுது ஏத்தலைத்‌ தமக்குரிய கடமையாகக்‌ கொண்ட உலக மக்கள்‌ பலரும்‌ பெரியார்‌ என நினைந்து போற்றப்படுவர்‌.

10

ஆசியாரமொழி யாரமண் சாக்கியரல் லாதவர்கூடிஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப் பொருளென்னேல்வாசிதீர அடியார்க்கருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்பேசும்ஆர்வ முடையாரடி யாரெனப்பேணும் பெரியோரே.
சொற்பிரிப்பு
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடிஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்!வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்பேசும் ஆர்வம் உடையார் அடி யார் எனப் பேணும் பெரியோரே.
உரை

மனமார வாழ்த்தும்‌ இயல்பினரல்லாத சமணர்‌ சாக்கியர்‌ ஆகிய புறச்சமயிகள்‌ கூடி இகழ்ந்தும்‌ அன்பின்றியும்‌ பேசும்‌ சொற்களைப்‌ பொருளாகக்‌ கொள்ளாதீர்‌. குற்றம்‌ தீர அடியவர்களுக்கு அருள்‌ செய்து புகழால்‌ ஓங்கிய பெருமானது வலிதாயத்தின்‌ புகழைப்‌ பேசும்‌ ஆர்வம்‌ உடையவர்களுக்கு யாம்‌ அடியர்‌ எனப்‌ பெரியோர்களே பேணுவீர்களாக.

11

வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும் வலிதாயத்தண்டவாணனடி யுள்குதலால்அருள் மாலைத் தமிழாகக்கண்டல்வைகுகடற் காழியுள்ஞான சம்பந்தன் தமிழ்பத்துங்கொண்டுவைகியிசை பாடவல்லார் குளிர்வானத் துயர்வாரே.
சொற்பிரிப்பு
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்துஅண்டவாணன் அடி உள்குதலால், அருள் மாலைத் தமிழ் ஆக,கண்டல் வைகு கடல் காழியுள் ஞான சம்பந்தன் தமிழ் பத்தும்கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.
உரை

வலிதாய நாதன் மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார்‌ குளிர்‌ வானத்துயர்வார்‌ என முடிபு காண்க. வண்டுகள்‌ மொய்க்கும்‌ மணம்‌ நிறைந்த சோலைகள்‌ வளரும்‌ திருவலிதாயத்தில்‌ விளங்கும்‌ அனைத்துலக நாதனின்‌ திருவடிகளைத்‌ தியானிப்பதால்‌, தாழைகள்‌ வளரும்‌ கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்‌ பதியில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ தமிழ்‌ மாலையாக அருளிச்‌ செய்த இந்தத்‌ திருப்பதிகத்தைச்‌ சிறந்த தோத்திரமாகக்‌ கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாட வல்லார்‌ குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும்‌ உயர்வு பெறுவர்‌.