திருமுறை 1 · 1.002 · 11

திருப்புகலூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
புகலூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

குறிகலந்தஇசை பாடலினான் நசையாலிவ் வுலகெல்லாம்நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறிப் பலி1பேணிமுறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம் மொய்ம்மலரின்பொறிகலந்த பொழில்சூழ்ந்த யலேபுயலாரும் புகலூரே.பாடம் : 1ஏறும்பலி
சொற்பிரிப்பு
குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,முறிகலந்தது ஒருதோல் அரைமேல் உடையான் இடம்மொய்ம் மலரின்பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.
உரை

சிவபெருமான்‌ சுரத்தானங்களைக்‌ குறிக்கும்‌ இசையமைதியோடு கூடிய பாடல்களைப்‌ பாடுபவன்‌. அவன்‌ உயிர்கள்மீது கொண்ட பெருவிருப்பால்‌ இவ்வுலகம்‌ முழுவதும்‌ வாழும்‌ அவ்வுயிர்கள்‌, தம்மை உணரும்‌ நெறிகளை வகுத்து, அவற்றுள்‌ கலந்து நிற்பவன்‌. எருதின்மிசை ஏறிவந்து மக்கள்‌ இடும்‌ பிச்சையை விரும்பி ஏற்பவன்‌. இடையில்‌ மான்‌ தோலாடையை உடுத்துபவன்‌. அவன்‌ விரும்பி உறையும்‌ இடம்‌, செறிந்த மலர்கள்மீது புள்ளிகளை உடைய வண்டுகள்‌ மொய்த்துத்‌ தேனுண்ணும்‌ வானளாவிய பொழில்‌ சூழ்ந்த திருப்புகலூர்‌ ஆகும்‌.

2

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன் னொருபாகம்மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின் னுரியாடைமீதிலங்க அணிந்தானிமையோர் தொழமேவும் மிடஞ்சோலைப்போதிலங்குநசை யால்வரி வண்டிசைபாடும் புகலூரே.
சொற்பிரிப்பு
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம்மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடைமீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப்போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே.
உரை

சிவபெருமான்‌ தன்‌ காதில்‌ விளங்கும்‌ குழையை அணிந்தவன்‌. பூணூல்‌ அணிந்த அழகிய மார்பினன்‌. இடப்பாகமாக உமையம்மை விளங்கும்‌ திருமேனியன்‌. கருமானின்‌ தோலை மேல்‌ ஆடையாக அணிந்தவன்‌. அத்தகையோன்‌, இமையவர்‌ தொழுவதற்கு வசதியாகத்‌ தான்‌ தங்கி அருள்புரியும்‌ இடம்‌, சோலைகளில்‌ தேனுண்ணும்‌ விருப்பினால்‌ வரி வண்டுகள்‌ இசைபாடும்‌ புகலூராகும்‌.

3

பண்ணிலாவும்மறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந் தொழுதேத்தஉண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன் னிடமென்பர்மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும் புகலூரே.
சொற்பிரிப்பு
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப்பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த,உள் நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர்மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.
உரை

சிவபெருமான்‌ இசையமைதி விளங்கும்‌ வேதங்களைப்‌ பாடுபவன்‌ - முன்‌ கைகளில்‌ வளையல்கள்‌ விளங்கும்‌ அழகிய கைகளை உடைய உமையம்மையைத்‌ தனது தேவியாக உடையவன்‌. தன்‌ திருவடிகளை என்றும்‌ தொழுது ஏத்தும்‌ பெரியவர்களாகிய அடியார்களின்‌ உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின்‌ அடிமனத்தில்‌ என்றும்‌ நீங்காது இருப்பவன்‌. அத்தகையோன்‌ விரும்பி உறையுமிடம்‌ நிலவுலகில்‌ வாழும்‌ அடியவர்கள்‌ அடிமைத்தொழிலில்‌ மனம்‌ நிறைந்திருக்கும்‌ புகலூராகும்‌.

4

நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம் மரண்மூன்றுஞ்சீரின்மல்குமலை யேசிலையாகமு னிந்தா னுலகுய்யக்காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும் புகலூரே.
சொற்பிரிப்பு
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும்சீரின் மல்கு மலையே சிலை ஆகமுனிந்தான், உலகு உய்யக்காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர்ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.
உரை

சிவபெருமான்‌, கங்கை நீரால்‌ நனையப்பெற்று நிறைவாக உள்ள சடைமுடியை உடையவன்‌. காளையைத்‌ தனக்கு வாகனமாகக்‌ கொண்டவன்‌. முப்புரங்களையும்‌ சிறப்புமிக்க மேரு மலையை வில்லாகக்‌ கொண்டு அழித்தவன்‌. தேவர்களும்‌ அசுரர்களும்‌ திருப்பாற்கடலைக்‌ கடைந்து, இறப்பை ஒழிக்கும்‌ தன்மையை உடைய அமிர்தம்‌ பெற, முற்பட்டார்கள்‌. அதுசமயம்‌, கருநிறம்‌ உடைய நஞ்சு கடலினின்றும்‌ வெளிப்பட்டது. அது ஆலகால விஷமாக உலகில்‌ உள்ள எல்லா உயிர்களையும்‌ அழித்துவிடும்‌ நிலையில்‌ விளங்கியது. அதுசமயம்‌ சிவபெருமான்‌ சுந்தரரை ஏவி, அந்த நஞ்சை எடுத்துவரச்‌ சொல்லி அதனை அமிர்தமாகக்‌ கருதி விழுங்கி உலகில்‌ உள்ள எல்லா உயிர்களும்‌ மாண்டு போகாமல்‌ காப்பாற்றி அருளினார்‌. அத்தகையோன்‌ விரும்பி உறையுமிடம்‌ ஒழுக்கத்தால்‌ உயர்ந்த மக்கள்‌ வாழ்ந்து சிறப்பெய்தும்‌ புகலூராகும்‌.

5

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும் மடியார்மேல்பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும் பணிவாரைமெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்ப ரருள்பேணிப்பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும் புகலூரே.
சொற்பிரிப்பு
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரைமெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.
உரை

சிவபெருமான்‌ தன்‌ சிவந்த திருமேனியில்‌ வெண்ணிறமான திருநீற்றைப்‌ பூசுபவர்‌. தம்மை வந்தடையும்‌ அடியவர்களைத்‌ தாக்க வரும்‌ வினைகளை நீக்குபவர்‌. என்றும்‌ தம்மைப்‌ பாடிப்‌ பணிவார்க்கு உண்மையானவர்‌. அவர்‌ விரும்பி உறையும்‌ இடம்‌, அருளையே விரும்பிப்‌ பொய்யில்லாத மனத்தவர்‌ நீங்காது வாழும்‌ புகலூர்‌ என்பர்‌.

6

கழலினோசை சிலம்பின்னொலியோசை கலிக்கப் பயில்கானில்குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தா ரிடமென்பர்விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப் பொலிந் தெங்கும்முழவினோசைமுந் நீர2யர்வெய்த முழங்கும் புகலூரே.பாடம் : 2முன்னீர்
சொற்பிரிப்பு
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில்,குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர்விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும்முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.
உரை

சிவபெருமானுடைய இரண்டு திருவடிகளில்‌ இடக்காலில்‌ விளங்கும்‌ சிலம்பு, வலக்காலில்‌ விளங்கும்‌ வீரக்கழல்‌ ஆகியன ஒலிக்கவும்‌, குழல்‌ முதலிய இசைக்கருவிகள்‌ முழங்கவும்‌, குள்ளமான பூதகணங்கள்‌ போற்றவும்‌, பலகாலும்‌ பழகிய இடமாக இடுகாட்டில்‌ முற்றழிப்பு நடனம்‌ புரியும்‌ இடமாக விளங்குவது புகலூர்‌ ஆகும்‌. அங்குத்‌ திருவிழாக்களின்‌ ஓசையும்‌, அடியவர்‌ மனமகிழ்வோடு எங்கும்‌ முழக்கும்‌ முழவோசையும்‌ கடலோசையைத்‌ தளரச்‌ செய்யும்‌ பேரொலியாக அமைகின்றன.

7

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடை தன்மேல் விளங்கும்மதிசூடிஉள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த வுகக்கும் அருள்தந்தெம்கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள் ளிடமென்பர்3புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும் புகலூரே.பாடம் : 3கடவுட்கிடமென்பர்
சொற்பிரிப்பு
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி,உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம்கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.
உரை

சிவபெருமானது திருமுடியாகிய செஞ்சடைமேல்‌ கங்கை நீர்‌ அடங்கி விளங்குகின்றது. அதில்‌ விளக்கமான பிறைமதியைச்‌ சூடி உள்ளார்‌. தம்மிடம்‌ மனம்‌ ஒன்றி அடியவர்‌ தொழுது ஏத்த அவர்கள்‌ மனம்‌ மகிழும்‌ வண்ணம்‌ அருளைப்‌ புரிந்து வருகிறார்‌. என்னைப்‌ பற்றிய வினையையும்‌ பழியையும்‌ தீர்த்து அருளினார்‌. இவர்‌ உறையும்‌ இடம்‌, மீன்‌ கொத்தி முதலிய பறவை இனங்கள்‌ மீன்களைக்‌ கவர வந்து தங்கும்‌ வயல்களின்‌ விளைவால்‌ வளம்‌ மல்கிய புகலூராகும்‌.

8

தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான் முடிதிண்தோள்தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன் றருள்செய்தமின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும் மிடமென்பர்பொன்னிலங்கு மணிமாளிகை மேல்மதிதோயும் புகலூரே.
சொற்பிரிப்பு
தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள்,தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்தமின் இலங்கு சடையான் மட மாதொடு மேவும் இடம் என்பர்பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.
உரை

சிவபெருமான்‌ தாழ்ந்த சடைமுடியை உடையவன்‌. புகலூரில்‌ உள்ள மாளிகைகளில்‌ பொன்னும்‌ மணியும்‌ திகழ்கின்றன. மாளிகைகளின்‌ உச்சியில்‌ சந்திரன்‌ தவழ்ந்து 'செல்லுகின்றான்‌. இந்த அழகான புகலூரில்‌ சிவபெருமான்‌ தன்‌ தேவியுடன்‌ வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகின்றான்‌. அழகிய இலங்காபுரியின்‌ மன்னன்‌ ஒரு சமயம்‌ வான வீதியில்‌ தனது புஷ்ப விமானத்தில்‌ சென்று கொண்டிருந்தான்‌. அவனது வான வழியில்‌ திருக்கயிலாய மலை தோன்றிற்று. அம்மலையில்‌ சிவபெருமான்‌ வீற்றிருப்பார்‌ என்று அவனுக்குத்‌ தெரியும்‌. அவ்வாறு தெரியுமாதலால்‌ அவன்‌ அம்மலையைச்‌ சுற்றி வேறு பாதையில்‌ சென்றிருக்கலாம்‌. அதை விடுத்து அம்மலையைத்‌ தள்ளி வைத்துவிட்டு நேர்‌ பாதையில்‌ போக விருப்பம்‌ கொண்டான்‌. அந்த விருப்பம்‌ காரணமாகத்‌ தன்‌ விமானத்தைத்‌ தரையில்‌ இறக்கி, தானும்‌ இறங்கித்‌ தன்‌ தோள்‌ வலிமையாலும்‌, கைகளின்‌ பலத்தாலும்‌ கயிலை மலையை நகர்த்தி வைக்க முயற்சி செய்தான்‌. அதை அறிந்த சிவபெருமான்‌ தன்‌ கால்‌ கட்டை விரலால்‌ மலையைச்‌ சிறிது அழுத்தினான்‌. இலங்கை அரசனது தோள்கள்‌ நெரிந்து மலையின்‌ கீழ்‌ நசுக்கப்பட்டு, எழுந்திருக்க முடியாமல்‌ துன்புற்றான்‌. தன்‌ செயலுக்கு வருந்தி, இறைவனிடம்‌ மன்னிப்புக்‌ கோரி, சாம கானம்‌ பாடி இறைவனை மகிழ்வித்தான்‌. சிவபெருமான்‌ மனமிரங்கி இலங்கை மன்னனுக்கு “இராவணன்‌” என்ற பெயரையும்‌, நீண்ட ஆயுளையும்‌, சந்திரகாசம்‌ என்ற தெய்வீக வாளும்‌ கொடுத்து அருள்‌ செய்தான்‌.

9

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும் மடியார்கள்ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந் தொழுதேத்தஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மா னிடம்போலும்போகம்வைத்தபொழி லின்நிழலான் மதுவாரும் புகலூரே.
சொற்பிரிப்பு
நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள்ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்தஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும்போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.
உரை

பாம்பை முடிமிசை வைத்துள்ளவன்‌ சிவபெருமான்‌. அவன்‌ தன்‌ திருவடிகளைப்‌ போற்றும்‌ அடியார்கள்‌ தம்‌ மனத்தின்கண்‌ வைத்துப்‌ போற்றும்‌ தலைவன்‌ ஆவான்‌. பிரமனும்‌, திருமாலும்‌ தொழுதேத்த ஏகனாய்‌ எரி வடிவில்‌ மிக ஓங்கியவன்‌. எம்மானுமாகிய அவனுக்கு மிக உகந்த இடம்‌, பல்வகைப்‌ பயன்களையும்‌ தருவதோடு, நிழலாற்‌ சிறந்ததாய்‌, தேன்‌ நிறைந்து விளங்கும்‌ பொழில்‌ சூழ்ந்த புகலூராகும்‌.

10

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற் பொருளல்லாக்கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள் ளிடம்போலும்கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித் துதிசெய்துமெய்தவத்தின்முயல் வாருயர் வானகமெய்தும் புகலூரே.
சொற்பிரிப்பு
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக்கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.
உரை

சாக்கியர்களும்‌ சமணர்களும்‌ எண்ணிக்கையில்‌ மிக்கவர்கள்‌. இவர்கள்‌ உண்மையல்லாத வஞ்சகம்‌ நிறைந்த மொழிகளைக்‌ கூறுபவர்கள்‌. இவர்களது கூற்றைக்‌ கேளாதவர்கள்‌ நன்னெறி நிறைந்த மெய்யடியார்கள்‌. மிகுதியான தவம்‌ செய்பவர்கள்‌. இவர்களின்‌ தலைவன்‌ சிவபெருமான்‌. அவனுடைய அடியவர்கள்‌ மலர்‌ கொய்து வந்து தூவிப்‌ புனலாட்டி, துதி செய்து, தவநெறியில்‌ முயன்று உயர்‌ வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றுகிறார்கள்‌. இவர்கள்‌ வாழும்‌ ஊராகிய புகலூரைத்‌ தனக்கு மிக உகந்த இடமாகக்‌ கொண்டு சிவபெருமான்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌.

11

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும் புகலூரைக்கற்று நல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன் தமிழ்மாலைபற்றியென்றும்மிசை பாடியமாந்தர் பரமன் னடிசேர்ந்துகுற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப் பொலிவாரே.
சொற்பிரிப்பு
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம் பந்தன் தமிழ் மாலைபற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.
உரை

புற்றில்‌ வாழும்‌ பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான்‌ எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள்சேர்‌ புகழைக்‌ கற்று வல்லவர்கள்‌ வாழும்‌ €காழிப்‌ பதியில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ பாடிய தமிழ்‌ மாலையாகிய இந்தத்‌ திருப்பதிகத்தை; என்றும்‌ இசையோடு பாடி வழிபடும்‌ மாந்தர்கள்‌ இறைவன்‌ திருவடி நீழலை அடைந்து குற்றம்‌ குறைபாடு அகன்று புகழோங்கிப்‌ பொலிவெய்துவார்கள்‌.