திருமுறை 1 · 1.001 · 11

திருப்பிரமபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டபாடை
தலம்
சீர்காழி - 01-பிரமபுரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

தோடுடைய செவியன்விடை யேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்தபீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.பாடம் : 1பூசி எனது.
சொற்பிரிப்பு
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!
உரை

அப்பா, எனக்குப்‌ பால்‌ கொடுத்தவள்‌ யார்‌ தெரியுமா? அகிலாண்டகோடி ஆன்மாக்களை ஈன்றும்‌ பின்னையும்‌ கன்னி என மறைகள்‌ பேசுகின்ற உமையம்மை. அவளைத்‌ தன்‌ உடம்பில்‌ இடப்பாகத்தில்‌ வைத்திருக்கிறான்‌ சிவபெருமான்‌. ஆதலால்‌ அவனுடைய இடது திருச்செவியில்‌ தோடு அணிந்திருந்தான்‌. அவன்‌ இடபத்தின்‌ (காளையின்‌) மீது ஏறி வந்தான்‌. அவன்‌ திருமுடியில்‌ தூய்மையான வெண்ணிற களங்கமில்லாத ஒரு கலைச்‌ சந்திரனைச்‌ சூடி இருந்தான்‌. அவன்‌ உடம்பு முழுவதும்‌ திருவெண்ணீற்றைப்‌ பூசி இருந்தான்‌. நான்‌ தனிமையில்‌ இருந்ததினால்‌ அவன்‌ என்‌ உள்ளத்தில்‌ புகுந்து என்னைக்‌ கொள்ளை கொண்டுள்ள கள்வனாகி விட்டான்‌. பல இதழ்களைக்‌ கொண்ட தாமரை மலரில்‌ வீற்றிருக்கின்ற நான்முகன்‌ என்று சொல்லப்படும்‌ பிரமதேவன்‌ முன்னொரு காலத்தில்‌ தன்‌ படைப்புத்‌ தொழிலை இழந்து விட்டான்‌. அதனை மீண்டும்‌ பெறுவதற்கு இந்தப்‌ பெருமை வாய்ந்த நம்‌ ஊராகிய பிரமபுரத்திற்கு வந்தான்‌. வந்து அவன்‌ இதோ விண்ணில்‌ காட்சி கொடுக்கின்றானே இவனைக்‌ காதலாகிக்‌ கசிந்து, கண்ணீர்‌ மல்கி, வணங்கித்‌, தனது படைப்புத்‌ தொழிலை மீண்டும்‌ தந்தருள வேண்டுமென்று இரங்கினான்‌. அவனுக்கு அருள்புரிந்தவன்தான்‌ இதோ தெரிகின்றானே இந்தப்‌ பெம்மான்‌. அவன்‌ நமது பிரமபுரத்தைத்‌ தனது ஊராகக்‌ கொண்டு அருளாட்சி செய்து வருகிறான்‌. அவன் தான்‌ அப்பா எனக்குப்‌ பாலைக்‌ கொடுக்கச்‌ சொல்ல அம்மை பாலைக்‌ கறந்து, அதில்‌ எண்ணரிய சிவஞானத்து இன்னமுதத்தையும்‌ குழைத்து அந்தப்‌ பாலைக்‌ கொடுத்தாள்‌. பால்‌ மிகவும்‌ ருசியாக இருந்தது. வேகமாகக்‌ குடித்தேன்‌. அதனால்‌ கடைவாயில்‌ சிறிது பால்‌ சிந்திவிட்டது. அதோ விண்ணிலே காட்சி அளிக்கின்ற வேத நாயகனான அம்மையப்பரை உமக்குத்‌ தெரியவில்லையா அப்பா? எனக்கு மிக நன்றாகக்‌ காட்சி அருளுகின்றானே! (சிவபாத இருதயர்‌ கண்களுக்கு இறைவன்‌ புலப்படவில்லை).

2

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டுவற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
முற்றல்ஆமை இளநாகமொடு ஏன முளைக் கொம்பு அவை பூண்டு,வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதுஏத்த,பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!
உரை

அப்பா, நான்‌ காண்பிக்கும்‌ அம்மையப்பரை உம்‌ கண்கள்‌ காணவில்லை போலும்‌. இன்னும்‌ ஒரு சில அடையாளங்கள்‌ சொல்லுகிறேன்‌. வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும்‌, பன்றியினது கூர்மையான கொம்பினையும்‌ கோர்த்து மாலையாக அணிந்திருக்கிறான்‌. அது மாத்திரமன்று. என்றும்‌ இளமையாக இருக்கின்ற நாகப்பாம்பைத்‌ தன்‌ கழுத்தில்‌ சுற்றி மாலைபோல்‌ அணிந்துள்ளான்‌. தசை நீங்கப்‌ பெற்ற, காய்ந்து போன பிரமனது கபாலத்தில்‌ (மண்டை ஓட்டில்‌) பிச்சை கேட்டுத்‌ திரிகின்றான்‌. அவன்தான்‌ என்முன்‌ தோன்றி எனது உள்ளத்தைக்‌ கவர்ந்து கொண்ட கள்வன்‌ ஆயினான்‌. அவன்‌ எனக்கு அருள்புரிந்தது போல, இறைவன்‌ புகழையே கற்றும்‌, கேட்டும்‌, தெளிந்த சிந்தை உடையராகிய பெரியார்கள்‌ அவன்‌ திருவடிகளைத்‌ தங்கள்‌ கையால்‌ தொழுது வணங்கும்‌ பொழுது அவர்களுக்கும்‌ இடபத்தின்மீது அம்மையோடு ஊர்ந்து வந்து அருள்புரிகின்றான்‌. அவன்‌ பிரமபுரமாகிய நமது ஊரை இருப்பிடமாகக்‌ கொண்டு அருள்‌ ஆட்சி செய்து வருகின்றான்‌. இவனுடன்‌ வந்த உமையம்மைதான்‌ எனக்குப்‌ பால்‌ ஊட்டினாள்‌.

3

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடிஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்“ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப்பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
உரை

அந்த சிவபிரானைப்‌ பற்றி இன்னும்‌ சொல்லுகிறேன்‌; கேள்‌. அவனுடைய சிவந்த திருச்சடைமுடி மேல்‌ கங்கை நீர்‌ நிரம்பி நிமிர்ந்து உள்ளது. அதே திருச்சடை முடியில்‌ ஒரே ஒரு கலையை மட்டும்‌ உடைய வெண்மையான பிறைச்சந்திரனையும்‌ சூடி உள்ளான்‌. அழகு மிகுந்த, கூட்டமான; வெண்மையான சங்கு வளையல்கள்‌ என்‌ முன்கையிலிருந்து நழுவி விடும்படியாய்‌ என்னை மெலிவித்தான்‌. அவன்‌ என்‌ முன்‌ தோன்றி என்‌ உள்ளத்தைக்‌ கொள்ளை கொண்டு விட்ட கள்வனாகி விட்டான்‌. மகா சங்கார காலத்தில்‌ (ஊழிக்காலத்தில்‌ - மகாப்‌ பிரளய காலத்தில்‌) உலகம்‌ அனைத்திலும்‌ உள்ள எல்லா ஊர்களும்‌ அழிந்து போக பிரமபுரம்‌ மட்டும்‌ அழியாது உலகிற்கே ஒரு வித்தாக புகழோடு இருந்து வருகிறது. ஆதலால்‌ இந்த ஊரை தனது ஊராகக்‌ கொண்டு சிவபெருமான்‌ அருள்புரிந்து வருகிறார்‌. அவனோடு வந்த அம்மை தான்‌ எனக்குப்‌ பால்‌ அடிசில்‌ கொடுத்தாள்‌.

4

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!
உரை

அப்பா, எனக்குப்‌ பாலைக்‌ கொடுக்கச்‌ சொன்ன சிவபெருமானுடைய பெருமையை இன்னும்‌ சொல்லுகிறேன்‌, கேட்பீராக. வித்யுன்மாலி, தாருகாட்சன்‌, கமலாட்சன்‌ என்று மூன்று அசுரர்கள்‌ இருந்தார்கள்‌. அவர்கள்‌ தங்கம்‌, வெள்ளி, இரும்பு இவைகளால்‌ ஆன உலோகக்‌ கோட்டைகளைக்‌ கட்டிக்‌ கொண்டு ஆகாயத்தில்‌ மகிழ்ச்சியாகப்‌ பறந்து கொண்டு தேவர்களுக்குத்‌ ' துன்பம்‌ செய்து வந்தார்கள்‌. தேவர்கள்‌ தங்கள்‌ துன்பத்தை நீக்கக்‌ கோரிச்‌ சிவபெருமானிடம்‌ முறையிட்டார்கள்‌. அவன்‌ மேருமலையை வில்லாக்கி வாசுகி என்ற பாம்பை நாணாகக்‌ கொண்டு எய்து இம்மூன்று கோட்டைகளையும்‌ அழித்தான்‌. இன்னும்‌ ஒரு செய்தி சொல்லுகிறேன்‌ கேள்‌. பிரம்மாவுக்கு ஆதியில்‌ ஐந்து தலைகள்‌ இருந்தன. அவன்‌ தனக்கும்‌ ஐந்து தலைகள்‌; சிவனுக்கும்‌ ஐந்து தலைகள்‌. அதனால்‌, சிவனும்‌ தானும்‌ ஒரே சம அந்தஸ்து உடையவர்கள்‌ என்று தருக்கொடு திரிந்து வந்தான்‌. அதனை அறிந்த சிவபெருமான்‌ தனது நகத்தால்‌ ஒரு தலையைக்‌ கிள்ளி எடுத்து விட்டார்‌. அதன்‌ பிறகு அவன்‌ நான்கு தலைகளை உடைய நான்முகன்‌ என்று விளங்கினான்‌. கிள்ளி எறிந்த அவன்‌ தலை ஓட்டினைப்‌ பிச்சா பாத்திரமாகக்‌ கொண்டு சிவன்‌ பிச்சை எடுப்பவன்‌ போல பாவனை செய்து கொண்டு வந்து எனது உள்ளத்தைக்‌ கொள்ளை கொண்ட கள்வனாகி விட்டான்‌. நாகப்பாம்பு மண்‌ தரையில்‌ பொந்து அடித்து மண்ணுக்குள்‌ விருப்பமாக உறையும்‌. அந்தப்‌ பாம்பையும்‌, காற்றிலே அசைந்தாடி மணம்‌ வீசுகின்ற நல்ல அழகான கொன்றை மலர்‌ மாலையையும்‌, தனது மலை போன்ற மார்பில்‌ அணிந்துள்ளான்‌. வேண்டுதல்‌ - வேண்டாமை இல்லாதவன்‌ ஆனபடியால்‌ மாறுபட்ட இந்த இரு பொருள்களை மாலைகளாக அணிந்துள்ளான்‌. அத்தோடு நில்லாமல்‌ உமாதேவியையும்‌ தன்‌ உடம்பின்‌ இடப்பாகத்தில்‌ வைத்துக்கொண்டு இருவரும்‌ மகிழ்ச்சியாக இருந்தார்கள்‌. இப்பேர்ப்பட்டவன்‌ நமது பிரமபுரத்தைத்‌ தனது ஊராகக்‌ கொண்டு 'அருள்புரிந்து வருகின்றான்‌. இவன்‌ ஆணையிட உமையம்மை எனக்குப்‌ பால்‌ கொடுத்தாள்‌.

5

ஒருமைபெண்மையுடை யன்சடையன் விடையூரும்இவ னென்னஅருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்த தோர்காலம்இது வென்னப்பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும்(ம்) இவன்! என்னஅருமைஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்“கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப்பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
உரை

அப்பா, அவன்‌ பெருமையை இன்னும்‌ சொல்லுகிறேன்‌. அவனுடைய அழகிய திருமேனியிலே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன்‌. இடப்பக்கத்தில்‌ பெண்‌ உருவின்‌ திருமுடியில்‌ பின்னிய சடையையும்‌, வலப்பக்கத்தில்‌ ஆண்‌ உருவின்‌ திருமுடியில்‌ அவிழ்ந்த சடையையும்‌ கொண்டவன்‌. அவன்‌ எப்போது எங்கு சென்றாலும்‌ விடை (காளை)யின்‌ மீது ஊர்ந்து வருபவன்‌. இவ்வாறு எல்லாம்‌ அவனது திருமேனி அழகை, தோழியர்‌ எடுத்துக்கூற, அந்த அழகே உருக்கொண்டு என்‌ முன்னே வந்து தோன்றி எனது உள்ளத்தைக்‌ கொள்ளை கொண்ட கள்வன்தான்‌ சிவபெருமான்‌. சர்வ சங்கார காலத்தில்‌, மேகத்தின்‌ கருமை நிறத்தைப்‌ பெற்ற கடல்‌, பொங்கி வந்து உலகம்‌ அனைத்தையும்‌ அழித்தபோது நமது ஊராகிய பிரமபுரம்‌ மட்டும்‌ தோணிபுரமாய்‌ அழியாமல்‌ மிதந்தது. இப்படிப்பட்ட பெருமையை உடைய பிரமபுரத்தில்‌ வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகின்றான்‌ நம்‌ சிவபெருமான்‌.

6

மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்திஇறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!
உரை

அப்பா, அவன்‌ எப்படிப்பட்ட கள்வன்‌ தெரியுமா? அவன்‌ தன்‌ கையில்‌ மழு ஆயுதத்தைப்‌ பிடித்துக்கொண்டும்‌ ஒலி வடிவில்‌ உள்ள வேதத்தைப்‌ பாடிக்‌ கொண்டும்‌, ஆடிக்கொண்டும்‌ என்‌ முன்னே வந்து தோன்றி என்னைப்‌ பரவசப்படுத்தினான்‌. எனது உள்ளம்‌ புகுந்து என்னைக்‌ கொள்ளை கொண்டு விட்ட கள்வன்‌ ஆகிவிட்டான்‌. என்‌ முன்‌ கையில்‌ (மணிக்கட்டில்‌) உள்ள ஓரின வெண்மை நிறமுடைய சங்கு வளையல்கள்‌ சோர்ந்து நழுவி விழும்‌ நிலையை அடைந்தன. நம்முடைய ஊராகிய பிரமபுரத்து நந்தவனத்தில்‌ மணம்‌ நிறைந்த பூக்களைக்‌ கொண்ட செடிகொடிகள்‌ அடர்ந்து ஓரே இருளாக இருக்கிறது. சோலைகளில்‌ நீண்டு உயர்ந்த மரங்கள்‌ வளர்ந்துள்ளன. இந்த இரு இடங்களிலும்‌ சந்திரனது நிலவொளி அங்குமிங்குமாக சிதறிக்‌ கிடக்கின்றது. இத்துணை சிறப்பு உள்ள நமது பிரமபுரத்தில்‌ இருந்து அருளாட்சி செய்கின்ற இறைவன்தான்‌ எனக்குப்‌ பால்‌ கொடுக்க, இறைவியிடம்‌ கூறினான்‌.

7

சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்தஉடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,உடைமுயங்கும் அரவோடுஉழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்கடல்முயங்கு கழி சூழ்குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
உரை

அப்பா சிவனைப்பற்றி இன்னும்‌ சொல்லுகிறேன்‌. சிவனது திருச்சடையில்‌ கங்காதேவி வீற்றிருக்கின்றாள்‌. அவனுடைய நான்கு திருக்கரங்களில்‌ இடது திருக்கரம்‌ ஒன்றில்‌ அனலை (நெருப்பை) வைத்துக்‌ கொண்டுள்ளான்‌. அவன்‌ இடுப்பில்‌ உடுத்தியுள்ள ஆடையைச்‌ சுற்றிப்‌, பாம்பைக்‌ கொண்டு இறுகக்‌ கட்டி உள்ளான்‌. ஊடத்தக்க ஒரு பெண்ணையும்‌, அஞ்சத்தக்க நெருப்பையும்‌, பாம்பையும்‌ உடம்பிலே கொண்டு எரிவீசி நடனமாடித்‌ திரிபவனாயிருக்கின்றான்‌. இவ்வாறு விநோதமான காட்டு உடையவனாய்‌ இருந்தும்‌, அவனுடைய பேரழகும்‌, கருணையும்‌, எல்லா உயிர்களையும்‌ பகை நீக்கி ஆளும்‌ வன்மையும்‌ என்‌ உள்ளத்தைக்‌ கவர்ந்தது. அவ்வாறு கவர்ந்த கன்வன்‌ போகியாய்‌ இருந்து எல்லா உயிர்களுக்கும்‌ போகத்தைப்‌ புரிய வைத்தான்‌. அவன்‌ நமது ஊராகிய பிரமபுரத்தை ஏன்‌ விரும்பித்‌ தங்கி அருள்‌ ஆட்சி செய்து வருகிறான்‌ தெரியுமா? நம்‌ ஊரைச்சுற்றி உப்பங்கழிகள்‌ கடலைத்‌ தழுவுவது போல்‌ அருமையாக காட்சி தருகின்றன. அதை அடுத்து குளிர்ந்த வானளாவிய மரங்களை உடைய சோலைகள்‌. அந்தச்‌ சோலையில்‌ அன்னப்‌ பறவைகள்‌ தங்கள்‌ அழகிய சிறகுகளை விரித்து ஆடிக்கொண்டு தம்முடைய பெடைகளேோடு முயங்கித்‌ திரிகின்றன. இப்படிப்பட்ட அழகிய நம்‌ ஊரை அவன்‌ விரும்பி இருப்பது வியப்பல்லவே!

8

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்தஉயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்தஉயர்இலங்கை அரையன் வலிசெற்று,எனது உள்ளம் கவர்கள்வன்துயர்இலங்கும் உலகில்பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
உரை

அப்பா இன்னும்‌ சொல்லுகிறேன்‌; கேள்‌. இலங்கை மன்னனாகிய தசக்கரீவன்‌ ஒரு நாள்‌ விண்‌ வழியாகத்‌ தனது புஷ்ப விமானத்தில்‌ சென்று கொண்டிருந்தான்‌. அவனுடைய நேர்பாதையில்‌ திருக்கயிலாய மலை அமைந்திருந்தது. அந்த மலையை விடுத்து வேறுபாதையில்‌ அவன்‌ சென்றிருக்கலாம்‌. அவனது தோள்‌ வலிமையாலும்‌, அவன்‌ சிவனிடமிருந்து பெற்ற பல வரங்களின்‌ மகிமையாலும்‌, அவனுக்கு ஆணவம்‌ மேலோங்கி நின்றது. தன்‌ தோள்‌ வலியால்‌ சிவபெருமான்‌ வீற்றிருக்கும்‌ திருக்கயிலை மலையை நகர்த்தி வைக்கமுற்பட்டான்‌. சிவபெருமான்‌ இதனை உணர்ந்து தனது கால்‌ கட்டை விரலால்‌ கயிலை மலையை இலேசாக அழுத்தினார்‌. தசக்கிரீவன்‌ நசுங்கித்‌ திணறி விட்டான்‌. தன்‌ தவறை உணர்ந்தான்‌. சிவனிடம்‌ மன்றாடி மன்னிப்புக்‌ கேட்டு, இனி தவறு செய்யமாட்டேன்‌ என்று உறுதி அளித்து சாமகானம்‌ பாடிச்‌ சிவபெருமானை மகிழ்வித்தான்‌. பரம கருணா மூர்த்தியாகிய சிவபெருமான்‌ அவனை மன்னித்து அவனுக்கு இராவணன்‌ என்ற பெயரையும்‌, நாளும்‌, வாளும்‌ (நீண்ட ஆயுளையும்‌, ஓர்‌ உடைவாளினையும்‌) கொடுத்து அருள்புரிந்தார்‌. அப்பேர்ப்பட்ட கருணா மூர்த்தி என்‌ உள்ளத்தைக்‌ கவர்ந்த கள்வனாகச்‌ செயல்பட்டான்‌. சிவன்‌ நம்முடைய பிரமபுரத்தில்‌ தங்கி அருளாட்சி செய்து வருவதற்கு மற்றொரு காரணம்‌ சொல்லுகிறேன்‌ கேள்‌. ஒவ்வொரு ஊழிக்காலத்தின்‌ முடிவில்‌ (மகாசங்கார காலத்தில்‌) உலகிலுள்ள எல்லா ஊர்களும்‌ அழிந்து போக நம்முடைய பிரமபுரம்‌ ஊர்‌ மாத்திரம்‌ அழிந்து போகாது. தன்‌ பெயர்‌ ஊழி ஊழி தோறும்‌ விளங்கும்படியாக நிலையாக உள்ளது. இதனால்‌ தான்‌ சிவன்‌ இங்கு வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறான்‌.

9

தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்வாணுதல் செய்மகளீர் முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல் செய்பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
தாள்நுதல் செய்து,இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,பேணுதல் செய் பிரமாபுரம் மேவியபெம்மான் இவன் அன்றே!
உரை

சிவனைப்பற்றி இன்னும்‌ சொல்லுகிறேன்‌. முன்னொரு காலத்தில்‌ திருமாலும்‌, தாமரை மலரில்‌ எழுந்தருளியிருக்கும்‌ நான்முகனும்‌ (பிரம்மாவும்‌) நானே முதற்பொருள்‌, நானே முதற்பொருள்‌ என்று தம்முள்‌ வாதம்‌ செய்து கொண்டும்‌ போர்‌ செய்து கொண்டும்‌ இருந்தனர்‌. அப்பொழுது அவர்களிடையே சிவபெருமான்‌ ஒரு சோதிமலையாய்‌ நின்றான்‌. நின்ற பொழுது வானில்‌ ஓர்‌ அசரீரி வாக்குத்‌ தோன்றியது. அது “நீங்கள்‌ இதன்‌ அடியையும்‌ முடியையும்‌ காண முயலுங்கள்‌. உங்களில்‌ யார்‌ உயர்ந்தவன்‌ - யார்‌ முதற்பொருள்‌ என்பதனை பரமன்‌ உங்களுக்கு உணர்த்துவான்‌” என்று கூறியது. திருமால்‌ பன்றி உருவம்‌ தாங்கி பூமியைத்‌ தோண்டித்‌ திருவடியைத்‌ தேடும்‌ முயற்சியில்‌ இறங்கிப்‌ பலகாலம்‌ கழித்தும்‌ அவனால்‌ திருவடியைக்‌ காண முடியாது திரும்பிவிட்டான்‌. நான்முகன்‌ அன்னப்‌ பறவை உருவம்‌ தாங்க, விண்ணிலே பலகாலம்‌ பறந்து சென்றும்‌ இறைவன்‌ திருமுடியைக்‌ காண முடியவில்லை. அதுசமயம்‌ வானில்‌ ஒரு தாழம்பூ இறங்கிக்‌ கொண்டிருந்தது. நான்முகன்‌ அந்தத்‌ தாழம்பூவைப்‌ பார்த்து “நீ எங்கிருந்து வருகிறாய்‌?” என்று கேட்க, தாழம்பூ “நான்‌ சிவன்‌ திருமுடியில்‌ இருந்து வருகின்றேன்‌” என்று பதில்‌ கூறியது. “எவ்வளவு நாட்களாக நீ இறங்கி வந்து கொண்டிருக்கிறாய்‌” என்று நான்முகன்‌ மீண்டும்‌ கேட்டான்‌. அதற்குத்‌ தாழம்பூ “நான்‌ சிவன்‌ திருமுடியைவிட்டு நீங்கிப்‌ பல ஊழிக்காலம்‌ சென்று விட்டது” என்று பதில்‌கூறியது. அதைக்‌ கேட்ட நான்முகன்‌ பதறிப்போய்‌ இன்னும்‌ பலகாலம்‌ நம்மால்‌ பறந்து செல்ல முடியாது .என்பதை உணர்ந்து தாழம்பூவைத்‌ தனக்காக ஒரு பொய்‌ சொல்ல வேண்டினான்‌. நீ சிவபெருமான்‌ திருமுடியில்‌ இருக்கும்‌ பொழுது நானும்‌ அங்கு வந்து தரிசனம்‌ செய்தேன்‌ என்று திருமால்‌ முன்பு கூறவேண்டும்‌ என்று கேட்டுச்‌ சம்மதம்‌ பெற்றுக்‌ கொண்டான்‌. திருமாலும்‌, நான்முகனும்‌ இளைத்து இறைவன்‌ முன்‌ நின்றனர்‌. தாழம்பூவும்‌ நின்றது. அது சமயம்‌, தாழம்பூ “நான்‌ சிவனது திருமுடியில்‌ இருந்த சமயம்‌ நான்முகன்‌ அங்கு வந்து சேர்ந்தான்‌. அப்பொழுது நான்‌ அவனைக்‌ கண்டேன்‌” என்று கூறிற்று. அதனைக்‌ கேட்ட சிவபெருமான்‌ மிகவும்‌ சினந்து, “ஏன்‌ இந்த பொய்‌ சொல்லுகிறாய்‌? நான்முகனே நீ இவ்வாறு தாழம்பூவைப்‌ பொய்‌ சொல்லத்‌ தூண்டியதற்காக உனக்கு இந்தப்‌ பூவுலகில்‌ ஒரு கோயிலும்‌ இல்லாது போகும்‌; தாழம்பூவே! நீ பொய்‌ சாட்சி சொன்னதற்காக எந்தவொரு சிவபூசைக்கும்‌ நீ உதவாது போவாயாக” என்று சாபமிட்டார்‌. பின்னர்‌, திருமால்‌, நான்முகன்‌ இவர்கள்‌ இருவருடைய ஆணவத்தை அகற்றி அவர்கள்‌ இருவரும்‌ தன்‌ ஆணைக்கு உட்பட்டவர்கள்‌ என்பதை உணரச்‌ செய்து மறைந்து அருளினார்‌. அத்தகைய முழுமுதல்‌ பொருளாகிய சிவபெருமான்‌ எனது உள்ளத்தைக்‌ கவர்ந்த கன்வனாகி விட்டான்‌. வாள்‌ போன்ற நெற்றியை உடைய மகளிர்‌ முதலாக உலகத்தில்‌ உள்ள அனைவரும்‌ ஏத்திப்‌ போற்றுதலினாலே அவர்களைக்‌ காப்பாற்றுகின்ற பிரமபுரத்தில்‌ சிவன்‌ வீற்றிருந்து அருளாட்சி செய்து வருவதின்‌ சிறப்பை நீ அறிந்து கொள்வாயாக.

10

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லாஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
சொற்பிரிப்பு
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லாஒத்தசொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்“மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர் மாயம் இது!” என்ன,பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!
உரை

அறிவு விளங்கப்‌ பெறாத புத்தர்களும்‌, புறங்கூறிப்‌ பொய்த்து உயிர்‌ வாழும்‌ சமணர்களும்‌, சான்றோர்கள்‌ வகுத்த நன்னெறியில்‌ அமையாது, தமக்கு ஏற்புடையனவாகத்‌ தோன்றிய கருத்துக்களைப்‌ பொதுமக்கள் மீது எல்லா வகையானும்‌ தணித்துக்‌ கொண்டு வருவதை வழக்கமாகக்‌ கொண்டு வாழ்ந்து வந்தனர்‌. ஆனால்‌ அச்சமயத்‌ தலைவர்கள்‌ எனது உள்ளத்தைக்‌ கவர்ந்தார்கள்‌ இல்லை. திருக்கண்டியூர்‌, திருக்கோவிலூர்‌, திருவதிகை, திருப்பறியலூர்‌, திருவிற்குடி, திருவழுவூர்‌ (வைப்புத்தலம்‌), திருக்குறுக்கை, திருக்கடவூர்‌ முதலிய எட்டு ஊர்களில்‌ (அட்ட வீரட்டத்தலங்கள்‌) சிவபெருமான்‌ தனது மறக்கருணையால்‌ ஆன்மாக்களை உய்விக்கும்‌ நோக்கத்தில்‌ வீரச்செயல்கள்‌ பலபுரிந்து அருள்செய்தார்‌. அதில்‌ திருவழுவூரில்‌ மதம்‌ பிடித்த ஓர்‌ யானையைத்‌ தன்‌ வசப்படுத்த, அதன்‌ தோலை உரித்து, தன்‌ உடம்பில்‌ போர்த்திக்‌ கொண்டு, ஒரு பித்தனைப்‌ போல மாயச்‌ செயல்கள்‌ பலவும்‌ செய்து கொண்டு வந்தவன்‌ என்‌ உள்ளத்தைக்‌ கவர்ந்த கள்வனாகி விட்டான்‌. அவன்தான்‌ பிரமபுரத்தில்‌ வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகின்றான்‌.

11

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேயபெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னைஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்ததிருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.
சொற்பிரிப்பு
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம் பந்தன் உரை செய்ததிரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.
உரை

நல்ல அருமையான சிறந்த நெறிகளை நான்கு வேதங்களும்‌ உணர்த்துகின்றன. இந்த வேதங்களில்‌ தலையாய வல்லமை வாய்ந்தவன்‌ நான்முகன்‌ என்று கூறப்படும்‌, படைப்புத்‌ தொழிலைச்‌ செய்யும்‌ பிரமதேவன்‌ ஆவான்‌. அவன்‌ பிரமபுரத்தைப்‌ அடைந்து இங்குள்ள முதல்வனைப்‌ போற்றிப்‌ பூசித்துப்‌ பேறு பெற்றான்‌. பிரமபுரத்தைச்‌ சுற்றிலும்‌ அகன்ற பெரிய குளங்களில்‌ தாமரை மலர்கள்‌ பூத்துக்‌ குலுங்குகின்றன. இந்த அழகிய பிரமபுரத்தில்‌ மேவி இருந்து அருள்‌ வழங்கி, முத்தியைக்‌ கொடுக்கும்‌ முதல்வனாகிய சிவபெருமானை, திருஞானசம்பந்தர்‌ தனது மெய்‌, வாய்‌, கண்‌; மூக்கு, செவி என்கின்ற ஐம்புலன்களையும்‌ அடக்கி மனதை ஒருமைப்‌ படுத்தி, அதனை அவன்‌ திருவடியிலே பதித்து, அவனுடைய பெருமைகளை நன்கு உணர்ந்து அவனைப்‌ போற்றி, திருநெறியாகவும்‌ நன்னெறியாகவும்‌ விளங்கும்‌ இத்தமிழ்ப்‌ பதிகத்தைப்‌ பாடி அருளினார்கள்‌. உள்ளத்தைச்‌ சிதற விடாமல்‌ இத்திருப்பதிகத்தை ஒன்றிய மனத்தோடு, பாட்டின்‌ பொருளை நன்றாக உணர்ந்து பிரமபுரத்து இறைவனை நோக்கி ஓத வல்லவர்களுடைய பழைய வினைகள்‌ தீர்தல்‌ எளிதாக அமையும்‌.