திருமுறை 1 · 1.097 · 11

திருப்புறவம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
சீர்காழி - 08-புறவம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

எய்யா வென்றித் தானவ ரூர்மூன் றெரிசெய்தமையார் கண்டன் மாதுமை வைகுந் திருமேனிச்செய்யான் வெண்ணீ றணிவான் திகழ்பொற் பதிபோலும்பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவம்மே.
சொற்பிரிப்பு
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்தமை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவ(ம்)மே.
உரை

திருப்புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியானது இளையாத வெற்றியை உடைய அசுரர்களின்‌ முப்புரங்களை எரித்த நீலகண்டனான சிவபெருமான்‌, உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும்‌ அழகிய பதியாகும்‌. இப்பெருமான்‌ சிவந்த மேனியனாய்‌ வெண்ணீறு அணிந்தவராக விளங்குகின்றார்‌. இப்பதியில்‌ பொய்‌ எதுவும்‌ கூறாத நாவினை உடைய அறவோர்கள்‌ வாழ்கின்றனர்‌.

2

மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்றநாதனென் றேத்தும் நம்பரன் வைகுந் நகர்போலும்மாதவி மேய வண்டிசை பாட மயிலாடப்போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே.
சொற்பிரிப்பு
“மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்றநாதன்” என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவ(ம்)மே.
உரை

திருப்புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியானது, ஒரு சமயம்‌ உமையம்மையை ஒரு பாகமாகவும்‌, மற்றொரு சமயத்தில்‌ திருமாலை ஒரு பாகமாகவும்‌ கொண்டு மகிழ்ந்திருக்கின்றவனும்‌, நாதன்‌ எனப்‌ போற்றுகின்றவனுமாகிய சிவபெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ நகராகும்‌.இங்குள்ள குருக்கத்து மரத்தில்‌ மேவிய வண்டுகள்‌ இசைபாட, மயில்கள்‌ ஆடுகின்றன. அவற்றிற்குப்‌ பரிசாகப்‌ புன்னை மரங்களின்‌ விரிந்த மலர்கள்‌ மகரந்தங்களைப்‌ பொன்னாகச்‌ சொரிகின்ற இயற்கை வளம்‌ நிறைந்த புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌.

3

வற்றா நதியும் மதியும் பொதியுஞ் சடைமேலேபுற்றா ரரவின் படமா டவுமிப் புவனிக்கோர்பற்றா யிடுமின் பலியென் றடைவார் பதிபோலும்பொற்றா மரையின் பொய்கை நிலாவும் புறவம்மே.
சொற்பிரிப்பு
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலேபுற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்பற்று ஆய், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவ(ம்)மே.
உரை

புறவம் என்னும் சீகாழிப் பதியானது என்றும் நீர் வற்றாத கங்கையும், பிறையும் பொருந்திய சடையின்மேல்‌, புற்றை இடமாகக்‌ கொண்ட பாம்பு படத்துடன்‌ ஆடிக் கொண்டிருக்க ‘எனக்குப்‌ பலி இடுமின்‌’ என்று பல ஊர்களுக்குச்‌ செல்லும்‌ சிவபெருமானது பதியாகும்‌. இப்பெருமான்‌ இவ்வுலகத்திற்கு ஒரு பற்றுக்‌ கோடாக இருக்க எமக்குப்‌ பலி இடுமின்‌ என்று வரும் இறைவனது பதி புறவம்‌ ஆகும்‌. இப்பதியில்‌ அழகிய தாமைரைகள்‌ மலர்ந்துள்ள பொய்கைகள்‌ உள்ளன (இடுமின்‌ பலி)

4

துன்னார் புரமும் பிரமன் சிரமுந் துணிசெய்துமின்னார் சடைமேல் அரவும் மதியும் விளையாடப்பன்னா ளிடுமின் பலியென் றடைவார் பதிபோலும்பொன்னார் புரிநூல் அந்தணர் வாழும் புறவம்மே.
சொற்பிரிப்பு
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,பல்நாள், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவ(ம்)மே.
உரை

சிவபெருமான்‌, பகைவர்களாகிய அசுரர்களின்‌ முப்புரங்களையும்‌ அழித்தவர்‌, பிரமனின்‌ தலைகளில்‌ ஒன்றை அழித்தவர்‌, மின்னல்‌ போல்‌ ஒளிவிடும்‌ அவருடைய சடைமுடிமேல்‌ பாம்பும்‌ மதியும்‌ விளையாடுகின்றன. பல நாள்களும்‌ ஊர்‌ ஊராகச்‌ சென்று பலி இடுமின்‌ என்று கூறித்திரிகின்றார்‌. இவர்‌ வாழும்‌ ஊர்‌ சீகாழி என்னும்‌ பதியாகும்‌. இப்பதியில்‌ பொன்னாலாகிய முப்புரிநூல்‌ அணிந்த அறவோர்கள்‌ வாழுகின்றனர்‌.

5

தேவா அரனே சரணென் றிமையோர் திசைதோறுங்காவா யென்று வந்தடை யக்கார் விடம்உண்டுபாவார் மறையும் பயில்வோ ருறையும் பதிபோலும்பூவார் கோலச் சோலைசுலாவும் புறவம்மே.
சொற்பிரிப்பு
“தேவா! அரனே! சரண்!” என்று இமையோர் திசைதோறும்,“காவாய்!” என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவ(ம்)மே.
உரை

புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியானது, தேவர்கள்‌ பாற்கடலில்‌ தோன்றிய விடத்தின்‌ கொடுமை தாங்காது, திசைதோறும்‌ சூழ்ந்து நின்று, ‘தேவனே! அரனே! உன்னிடம்‌ அடைக்கலம்‌ எங்களைக்‌ காப்பாயாக!’ எனச்‌ சரண்‌ அடைந்தபோது, அந்தக்‌ கரிய விடத்தை தன்‌ தொண்டையில்‌ பதித்துக்‌ கொண்ட சிவபெருமான்‌ வாழும்‌ பதியாகும்‌. இப்பதியில்‌ பாடல்களாக அமைந்த வேதங்களைப்‌ பலரும்‌ பயில்கின்றனர்‌. இப்பதியில்‌ மலர்கள்‌ நிறைந்த அழகிய சோலைகள்‌ சூழ்ந்துள்ளன.

6

கற்றறி வெய்திக் காமன்முன் னாகும் முகவெல்லாம்அற்றர னேநின் னடிசர ணென்னும் அடியோர்க்குப்பற்றது வாய பாசுப தன்சேர் பதியென்பர்பொற்றிகழ் மாடத் தொளிகள் நிலாவும் புறவம்மே.
சொற்பிரிப்பு
‘கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்அற்று, “அரனே! நின் அடி சரண்!” என்னும் அடியோர்க்குப்பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி’ என்பர்பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவ(ம்)மே.
உரை

புறவம்‌ என்னும்‌ பதியானது, மெய்யறிவு நூல்களைக்‌ கற்று, அதனால்‌ நல்லறிவு எய்தி, மன்மதனின்‌ தூண்டுதலால்‌ உண்டாகும்‌ காம இச்சைகள்‌ எல்லாம்‌ அழிவுபட்டு, அரனே! நின்‌ திருவடிகளே சரண்‌ என்று சரணடையும்‌ பக்தர்களுக்கு பற்றுக்‌ கோடாய்‌ விளங்கும்‌ பாசுபதன்‌ என்று சொல்லப்படும்‌ சிவபெருமான்‌ எழுந்தருளிய பதியாகும்‌. இப்பதியில்‌ பொன்‌ நிறைந்து விளங்கும்‌ மாடவீடுகளின்‌ ஒளி சூழ்ந்துள்ளது.

7

எண்டிசை யோரஞ் சிடுவகை கார்சேர் வரையென்னக்கொண்டெழு கோல முகில்போற் பெரிய கரிதன்னைப்பண்டுரி செய்தோன் பாவனை செய்யும் பதியென்பர்புண்டரி கத்தோன் போன்மறை யோர்சேர் புறவம்மே.
சொற்பிரிப்பு
“எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி” என்பர்புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவ(ம்)மே
உரை

முன்னொரு காலத்தில்‌, எண்‌ திசையில்‌ உள்ளவர்கள்‌ அஞ்சி நடுங்குமாறு, கரி மலையைப்‌ போலவும்‌, நீரை முகந்து கொண்டு எழுந்த அழகிய கரிய மேகம்‌ போலவும்‌ வந்த பெரிய களிற்று யானையைக்‌ கொன்று, அதன்‌ தோலை உரித்துப்‌ போர்த்த சிவபெருமான்‌ விரும்பியிருக்கும்‌ பதி புறவம்‌ என்னும்‌ சகாழிப்‌ பஇயாகும்‌. தாமரை மலர்மேல்‌ உறையும் நான்முகன்‌ போன்று வேதங்களில்‌ வல்ல அறவோர்கள்‌ இப்பதியில்‌ வாழ்கின்றனர்.‌

8

பரக்குந் தொல்சீர்த் தேவர்கள் சேனைப் பௌவத்தைத்துரக்குஞ் செந்தீப் போலமர் செய்யுந் தொழில்மேவும்அரக்கன் திண்தோள் அழிவித் தானக் காலத்திற்புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவம்மே.
சொற்பிரிப்பு
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவ(ம்)மே.
உரை

எங்கும்‌ பரவிய பழமையான புகழை உடைய தேவர்களின்‌ கடல்‌ போன்ற படையை ஊழித்தீப்‌ போன்று அழிக்கும்‌ ஆற்றல்‌ கொண்டவன்‌ இராவணன்‌. இவனுடைய வலிய தோள்‌ வலிமையை அக்காலத்தில்‌ அழித்தருளிய சிவபெருமான்‌ எழுந்தருளிய பழமையான ஊர்‌ புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌. இப்பெருமான்‌ அனைத்து உலகங்களையும்‌ காத்தருளும்‌ வேந்தனாக விளங்குகின்றார்‌.

9

மீத்திக ழண்டந் தந்தய னோடு மிகுமாலும்மூர்த்தியை நாடிக் காணவொ ணாது முயல்விட்டாங்கேத்த வெளிப்பா டெய்திய வன்றன் இடமென்பர்பூத்திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவம்மே.
சொற்பிரிப்பு
“மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்குஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம்” என்பர்பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவ(ம்)மே.
உரை

பொருள்‌: மேன்மையாக விளங்கும்‌ உலகங்களைப்‌ படைத்த பிரமனும்‌, புகழால்‌ மேம்பட்ட திருமாலும்‌, அழலுருவாய்‌ வெளிப்பட்ட சிவமூர்த்தியின்‌ அடிமுடிகளைக்‌ காணாது, தமது முயற்சியைக்‌ கைவிட்டு ஏத்திப்‌ பணிய, அவர்கட்கு காட்சி தந்தருளிய சிவபெருமானது இடம்‌ புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌. இப்பதியில்‌ உள்ள மலர்கள்‌ நிறைந்த சோலைகளில்‌ தென்றல்‌ காற்று உலாவி மக்களுக்கு சுகத்தை அளிக்கின்றது.

10

வையகம் நீர்தீ வாயுவும் விண்ணும் முதலானான்மெய்யல தேரர் உண்டிலை யென்றே நின்றேதம்கையினி லுண்போர் காண வொணாதான் நகரென்பர்பொய்யக மில்லாப் பூசுரர் வாழும் புறவம்மே.
சொற்பிரிப்பு
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;மெய் அல தேரர், “உண்டு, இலை” என்றே நின்றே தம்கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவ(ம்)மே.
உரை

மண்‌, நீர்‌, காற்று, தீ, விண்‌ ஆகிய ஐம்பூதங்களில்‌ நிறைந்து, அவற்றின்‌ முதலாக விளங்கும்‌ இறைவன்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுன்ள நகர்‌ புறவம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌. புத்தரும்‌ சமணரும்‌ உண்மையில்லாதவற்றைப்‌ பேசுபவர்கள்‌. ‘உண்டு, இல்லை’ என்ற உரைகளால்‌ ‘அத்தி நாத்தி’ எனக்‌ கூறித்திரிபவர்கள்‌. தம்‌ கைகளால்‌ உணவேற்று உண்பவர்கள்‌. இவர்கள்‌ சிவபெருமான்‌ உறையும்‌ நகரைக்‌ காண ஒண்ணார்கள்‌. இந்நகரில்‌ நெஞ்சில்‌ பொய்யறியாத பூசுரரார்கள்‌ (அறவோர்கள்‌) வாழ்கின்றனர்‌.

11

பொன்னியல் மாடப் புரிசை நிலாவும் புறவத்துமன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்றதன்னியல் பில்லாச் சண்பையர் கோன்சீர்ச் சம்பந்தன்இன்னிசை ஈரைந் தேத்தவல் லோர்கட் கிடர்போமே.
சொற்பிரிப்பு
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்துமன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்றதன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன் சீர்ச் சம்பந்தன்-இன் இசைஈர் ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.
உரை

சீவபோதமற்றுச்‌ _ சிவபோதமுடையவனாய்ச்‌ சண்பையர்‌ தலைவனாக மிக்க புகழோடு விளங்குபவர்‌ திருஞானசம்பந்தர்‌. இவர்‌, பொன்னால் இயன்ற மாடங்களின்‌ மதில்கள்‌ சூழ்ந்த புறவம்‌ என்னும்‌ பதியில்‌ நிலைபெற்று விளங்கும்‌ சிவபெருமானின்‌ சேவடிகளை நாள்தோறும்‌ பணிந்து போற்றி இப்பதிகத்தை இன்னிசையோடு பாடினார்‌. இப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ பாடித்‌ துதிக்க வல்லவர்களுக்கு இடர்‌ போகும்‌.