கந்தர் கலிவெண்பா
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரியபாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு (1)
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்தபோதமும் காணாத போதமாய் - ஆதிநடு (2)
அந்தம் கடந்த நித்தியானந்த போதமாய்ப்பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த (3)
குறியும் குணமும் ஒரு கோலமும் அற்று எங்கும்செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு (4)
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றேமனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் (5)
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்தஞ்சம்என நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத (6)
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில் (7)
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்தந்திரத்தில் சாராது சார்வதுபோல் - முந்தும் (8)
கருவின்றி நின்ற கருவாய் அருளேஉருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் (9)
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயபோக அதிகாரப் பொருளாகி - ஏகத்து (10)
உருவும் அருவும் உருவருவும் ஆகிப்பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் (11)
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்தி அளித்தற்கு மலபாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் (12)
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்பெந்தம் உறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் (13)
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்த அத்து வாக்களும் முற்கூறத் தகும்சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் (14)
ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனி எண்பான்ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய (15)
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போல்சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய (16)
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்நற்கா ரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் (17)
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவேநன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் (18)
விரத முதலாய பல மெய்த்தவத்தின் உண்மைச்சரியை கிரியா யோகம் சார்வித்து - அருள்பெருகு (19)
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்துஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் (20)
சத்திநிபாதம் தருதற்கு இருவினையும்ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த (21)
மலபரி பாகம் வரும் அளவில் பன்னாள்அலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது (22)
அறிவுக்கு அறிவாகி அவ்அறிவுக்கு எட்டாநெறியில் செறிந்த நிலை நீங்கிப் - பிரியாக் (23)
கருணைத் திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக்குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு - திருநோக்கால் (24)
ஊழ்வினையைப் போக்கி உடல் அறுபத்து எட்டு நிலம்ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக (25)
ஆணவமான படலம் கிழித்து அறிவிற்காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் (26)
அடிஞானத்தால் பொருளும் ஆன்மாவும் காட்டிக்கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது (27)
தேக்கு பரமானந்தத் தெள்ளமுதம் ஆகி எங்கும்நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் (28)
வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்இரவும் கடந்து உலவா இன்பம் - மருவுவித்துக் (29)
கன்ம மலத்தார்க்கு மலர்க்கண் மூன்றும் தாழ்சடையும்வன்மழுவும் மானும் உடன் மால் விடைமேல் - மின்னிடத்துப் (30)
பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளிவெற்பில்வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த (31)
கரும மலக் கட்டு அறுத்துக் கண்ணருள்செய்து உள்நின்றுஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகி எழு (32)
மூன்று அவத்தையும் கழற்றி முத்தர் உடனே இருத்திஆன்ற பரமுத்தி அடைவித்துத் - தோன்றவரும் (33)
யான் எனது என்று அற்ற இடமே திருவடியாமோன பரானந்தம் முடியாக - ஞானம் (34)
திருவுருவா இச்சை செயல் அறிவு கண்ணாஅருளதுவே செங்கை அலரா - இருநிலமே (35)
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே! எவ்வுயிர்க்கும்பின்னமற நின்றபெருமானே! - மின்னுருவம் (36)
தோய்ந்த நவரத்னச் சுடர்மணியால் செய்த பைம்பொன்வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் (37)
துண்டம் இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனையபுண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட (38)
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்குஅருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி (39)
பலவும் எழுந்து சுடர் பாலித்தால் போலக்குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் (40)
புன்முறுவல் பூத்து அலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள் (41)
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத் தடிந்துதெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் (42)
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்பவாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் (43)
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்முடிக்கும் கமல முகமும் - விடுத்து அகலாப் (44)
பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் (45)
போகமு றும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் (46)
வந்து அடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த (47)
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்தபாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் (48)
தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்மேவக் குழைத்து அணைந்த மென்கரமும் - ஓவாது (49)
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் (50)
வைத்த கரதலமும் வாம மருங்கில் கரமும்உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த (51)
சிறுதொடிசேர் கையும் மணி சேர்ந்த தடங்கையும்கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் (52)
அதிர் கேடகம் சுழற்றம் அங்கைத் தலமும்கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத (53)
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்தஅம்பொன் மணிப்பூண் அகன் மார்பும் - பைம்பொன் (54)
புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டு உடையும்அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் (55)
நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும்பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி (56)
இளம்பருதி நூறாயிரம் கோடி போலவளம்தரு தெய்வீக வடிவும் - உளம்தனில் கண்டு (57)
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பர் அகத் தாமரையின்மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே! - ஓதிய ஐந்து (58)
ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்நீங்காத பேருருவாய் நின்றோனே! - தாங்கரிய (59)
மந்திரமே சோதியா வான்பதமே மாமுடியாத்தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால் (60)
ஒத்த புவனத்து உருவே உரோமமாத்தத்துவங்களே சத்த தாதுவா - வைத்த (61)
கலையே அவயவமாக் காட்டும் அத்து வாவின்நிலையே வடிவமாய் நின்றோய்! - பலகோடி (62)
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும் (63)
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்ஏவித் தனிநடத்தும் எங்கோவே! - மேவ (64)
வரும் அட்ட மூர்த்தமாம் வாழ்வே! மெய்ஞ்ஞானம்தரும்அட்ட யோகத் தவமே! - பருவத்து (65)
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் (66)
பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்தேரின்பம் நல்கும் திருநாடும் - பாரின்பம் (67)
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவுஅல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில் (68)
ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்து ஐந்தெழுத்தைக்கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் (69)
தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்காய்ந்தசிவ ஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ (70)
பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலராநாரகத்துள் கட்டும் நறுந்தொடையும் - காரணத்துள் (71)
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்வந்த நவநாத மணிமுரசும் - சந்ததமும் (72)
நீக்கமின்றி ஆடி நிழல் அசைப்பான் போல்புவனம்ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து (73)
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியேபேசும் தசாங்கம் எனப் பெற்றோனே! - தேசுதிகழ் (74)
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்பாங்குறையும் முக்கட் பரஞ்சோதி - ஆங்கொருநாள் (75)
வெந்தவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கிஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து (76)
திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப - விரிபுவனம் (77)
எங்கும் பரக்க இமையோர்கண்டு அஞ்சுதலும்பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் (78)
எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதி என்று எம்மான்கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு (79)
பூதத் தலைவ! கொடு போதிஎனத் தீக்கடவுள்சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று (80)
அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்சென்னியில் கொண்டு உய்ப்பத் திருவுருவாய் - முன்னர் (81)
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடிநறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல் (82)
கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு (83)
கையால் எடுத்தணைத்துக் கந்தன்எனப் பேர்புனைந்துமெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய (84)
முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த (85)
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்துஉள்ளம் உவப்ப உயர்ந்தோனே! - கிள்ளைமொழி (86)
மங்கை சிலம்பின் மணிஒன் பதில்தோன்றும்துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் (87)
விருப்பால் அளித்த நவவீரருக்குள் முன்னோன்மருப்பாயும் தார்வீர வாகு நெருப்பில் - உதித்து (88)
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்செங்கண் கிடாய்அதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன் (89)
விடுக்குதி என்று உய்ப்ப அதன்மீது இவர்ந்து எண் திக்கும்நடத்தி விளையாடும் நாதா! - படைப்போன் (90)
அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தொன்றுஉகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் (91)
சிட்டித் தொழில் அதனைச் செய்வது எங்ஙன் என்றுமுனம்குட்டிச் சிறை இருந்தும் கோமானே! - மட்டவிழும் (92)
பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்பமுன்னம் பிரமம் மொழிந்தோனே! - கொன்னெடுவேல் (93)
தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாகவீர வடிவேல் விடுத்தோனே! - சீரலைவாய்த் (94)
தெள்ளு திரைகொழிக்கும் செந்தூரில் போய்க்கருணைவெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக் (95)
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம் (96)
சூரனைச் சோதித்து வருக என்று தடந்தோள் விசயவீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன் (97)
வானவரை விட்டு வணங்காமையால் கொடியதானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானுப் (98)
பகைவன் முதலாய பாலருடன் சிங்கமுகனைவென்று வாகை முடித்தோய்! - சகமுடுத்த (99)
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்த நெடும்சூருடலம் கீண்ட சுடர்வேலோய் - போரவுணன் (100)
அங்கம் இரு கூறாய் அடல்மயிலும் சேவலுமாய்த்துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள் (101)
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமாய்ஏறி நடாத்தும் இளையோனே! - மாறிவரு (102)
சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎனமேவத் தனித்துயர்ந்த மேலோனே! - மூவர் (103)
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்சிறைவிடுத்து ஆட்கொண்டு அளித்த தேவே - மறைமுடிவாம் (104)
சைவக் கொழுந்தே! தவக்கடலே! வானுதவும்தெய்வக் களிற்றைமணம் செய்தோனே - பொய்விரவு (105)
காமம் முனிந்த கலைமுனிவன் கண் அருளால்வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு (106)
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்ஏனல் புனங்காத்து இனிது இருந்து - மேன்மைபெறத் (107)
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்து அளித்தவள்ளிக் கொடியை மணந்தோனே! - உள்ளம் உவந்து (108)
ஆறு திருப்பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே! - நாறுமலர்க் (109)
கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்செந்தில் பதி புரக்கும் செவ்வேளே! - சந்ததமும் (110)
பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி (111)
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல்பூதமும் தீ நீரும் பொருபடையும் - தீது அகலா (112)
வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்எவ்விடம் வந்து எம்மை எதிர்த்தாலும் - அவ்விடத்தில் (113)
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும்அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத் (114)
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறுஅருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம் (115)
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் (116)
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்துஉல்லாச மாகஉளத்திருந்து - பல்விதமாம் (117)
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை (118)
எழுத்து முதலாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்துபழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் (119)
இம்மைப் பிறப்பில் இருவாதனை அகற்றிமும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து (120)
ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய (121)
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டுஅடியேற்கு முன்னின்று அருள். (122)