அபிராமியம்மை பதிகம்
காப்பு
தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய்,ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லிநண்ணும்பொற் பாதத்தில் நன்கு
கலையாத கல்வியும், குறையாத வயதும்,ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 1
கார் அளக பந்தியும், பந்தியின் அலங்கலும்,கரிய புருவச் சிலைகளும்,கர்ண குண்டலமும், மதி முக மண்டலமும்,நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக்,கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும்,சிறிய கொவ்வையின் கனி அதரமும்,குமிழ் அனைய நாசியும், குந்த நிகர்தந்தமும் கோடு சோடான களமும்,வார் அணிந்து இறுமாந்த வனமுலையும்,மேகலையும், மணி நூபுரப் பாதமும்,வந்து எனது முன் நின்று, மந்தகாசமுமாகவல் வினையை மாற்றுவாயே;ஆர மணி வானில் உறை தாரகைகள் போலநிறை ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 2
மகர வார் குழை மேல் அடர்ந்து, குமிழ் மீதினில் மறைந்து,வாளைத் துறந்து, மைக் கயலை வென்ற நின் செங்கமலவிழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ-செகம் முழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து,மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச், செங்கோலும்,மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிரி உலகு ஆண்டு, பின்புபுகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி, நிறை புத்தேளிர்வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப் புகழவிண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்;அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே!ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 3
மறி கடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும்,மாதிரக் கரி எட்டையும், மா நாகம் ஆனதையும்,மா மேரு என்பதையும், மா கூர்மம் ஆனதையும், ஓர்பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும்,புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவனையும்,அரையில் புலி ஆடை உடையானையும்,முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்,பழைமை முறைமை தெரியாத நின்னை-மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்மொழிகின்றது ஏது சொல்வாய்?அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 4
வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர,அருள் மழை பொழிந்தும்,இன்ப வாரிதியிலே நின்னது அன்பு எனும்சிறகினால் வருந்தாமலே அணைத்துக்,கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக்கூட்டம் முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும்புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும்,நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னைஎன்று ஓதும்; நீலி என்று ஓதுவாரோ?ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ்ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 5
பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒருபல் உயிர்க்கும், கல் இடைப் பட்ட தேரைக்கும்,அன்று உற்பவித்திடு கருப் பை உறு சீவனுக்கும்,மல்கும் சராசரப் பொருளுக்கும், இமையாத வானவர்குழாத்தினுக்கும், மற்றும் ஒரு மூவருக்கும், யாவருக்கும்,அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே,நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும்,மிகு நவ நிதி உனக்கு இருந்தும்,நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால்,அந் நகைப்பு உனக்கே அல்லவோ?அல் கலந்து, உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை,ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 6
நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று, நித்தமாய்,முத்தி வடிவாய், நியமமுடன் முப்பத்து இரண்டுஅறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்,-வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து, கால் வேசற்று,இலச்சையும் போய், வெண் துகில் அரைக்கு அணியவிதியற்று, நிர்வாண வேடமும் கொண்டு, கைக்கு ஓர்ஓடு ஏந்தி, நாடு எங்கும் உள்ளம் தளர்ந்து நின்று,உன்மத்தன் ஆகி, அம்மா! உன் கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந்து, ஏங்கி, உழல்கின்றது ஏது சொல்வாய்?ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 7
ஞானம் தழைத்து, உன் சொரூபத்தை அறிகின்றநல்லோர் இடத்தினில் போய், நடுவினில் இருந்து, உவந்து,அடிமையும் பூண்டு, அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு,ஈனம்தனைத் தள்ளி எனது, நான் எனும் மானம்இல்லாமலே துரத்தி, இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து,நெஞ்சு இருள் அற, விளக்கு ஏற்றியே-வான் அந்தம் ஆன விழி அன்னமே! உன்னை என்அகத் தாமரைப் போதிலே வைத்து, வேறே கவலை அற்று,மேல் உற்ற பர வசம் ஆகி, அழியாதது ஓர்ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?ஆதி கடவூரின் வாழ்வே?அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 8
சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற தாய் ஆகில்,எனக்குத் தாய் அல்லவோ? யான் உன் மைந்தன் அன்றோ?எனது சஞ்சலம் தீர்த்து, நின்றன்முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி, என் முகத்தை உன்முந்தானையால் துடைத்து, மொழிகின்ற மழலைக்குஉகந்துகொண்டு, இள நிலா முறுவல் இன்புற்று, அருகில் யான்குலவி விளையாடல் கொண்டு, அருள் மழை பொழிந்து,அங்கை கொட்டி, வா என்று அழைத்துக்,குஞ்சர முகன், கந்தனுக்கு இளையன் என்று எனைக்கூறினால், ஈனம் உண்டோ?அலை கடலிலே தோன்றும் ஆராத அமுதமே!ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 9
கைப் போது கொண்டு, உன் பதப் போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக்கிலேன்; கண் போதினால், உன் முகப் போதுதன்னை, யான் கண்டு தரிசனை புரிகிலேன்;முப் போதில் ஒரு போதும், என் மனப் போதிலே முன்னி,உன் ஆலயத்தின் முன் போதுவார் தமது பின் போத நினைகிலேன்;மோசமே போய் உழன்றேன்;மைப் போதகத்திற்கு நிகர் எனப் போது எரு-மைக் கடா மீது ஏறியே, மா கோர காலன் வரும்போது,தமியேன் மனம் கலங்கித் தியங்கும்அப் போது, வந்து உன் அருட்போது தந்து அருள்;;ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 10
மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளிஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த,மிகு வேதனைகளும் துரத்தப்,பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும்துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப்,பல காரியமும் துரத்த,நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த,வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னைநமனும் துரத்துவானோ?அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!அருள் வாமி! அபிராமியே! 11
கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்கலா மதியை நிகர் வதனமும், கருணை பொழி விழிகளும்,விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்,சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்குமணி மிடறும், மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்இலங்கு கர தலமும், விரல் அணியும் அரவும்,புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும்,பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும்புகழ்ந்துமே- போற்றி என வாழ்த்த, விடை மேல்மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து, அருள் செய்;வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 12
சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சலசலோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி!சுலட்சணி! சாற்ற அரும் கருணாகரி!அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோத்ரி! அமலை!செக சால சூத்ரி! அகில ஆத்ம காரணி! வினோத சய நாரணி!அகண்ட சின்மய பூரணி!சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி!கௌமாரி! உத் துங்க கல்யாணி! புட்ப அத்திர அம்புயபாணி! தொண்டர்கட்கு அருள் சர்வாணி!வந்து அரி, மலர்ப் பிரமராதி துதி, வேத ஒலி வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 13
வாச மலர் மரு அளக பாரமும், தண் கிரண மதி முகமும்,அயில் விழிகளும், வள்ள நிகர் முலையும், மான் நடையும்,நகை மொழிகளும், வளமுடன் கண்டு, மின்னார்பாச பந்தத்திடை, மனம் கலங்கித், தினம் பல வழியும்எண்ணி, எண்ணிப் பழி பாவம் இன்னது என்று அறியாமல்,மாயப்ர- பஞ்ச வாழ்வு உண்மை என்றே,ஆசை மேலிட்டு, வீணாக, நாய் போல் திரிந்து அலைவதுஅல்லாமல், உன்றன் அம்புயப் போது எனும் செம் பதம்துதியாத அசடன் மேல் கருணை வருமோ?மாசு இலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவசாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 14
நன்று என்று, தீது என்று நவிலும் இவ் இரண்டனுள்,நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்,நானுமே அவ்விதம் நாடினேன்; நாடினாலும்இன்று என்று சொல்லாமல், நினது திரு உள்ளம் அது இரங்கி,அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்,மெய்யான மொழி இ•து;உன் இதயம் அறியாதது உண்டோ?குன்றம் எல்லாம் உறைந்து, என்றும் அன்பர்க்கு அருள்குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி!விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி!மன்றல் மிகு நந்தன வனங்கள், சிறை அளி முரல,வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 15
ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; நான் உலகத்துஉதித்த இந் நாள் வரைக்கும் ஒழியாத கவலையால்,தீராத இன்னல் கொண்டு, உள்ளம் தளர்ந்து, மிகவும்அரு நாண் அற்றிட்ட வில் போல் இருக்கும் இவ்அடிமைபால் கருணை கூர்ந்து, இங்கு அஞ்சேல் எனச் சொல்லி,ஆதரிப்பவர்கள் உனை அன்றி இலை உண்மையாக;இரு நாழிகைப் போதும் வேண்டாது, நிமிடத்தில் இவ் அகிலபுவனத்தையும் இயற்றி, அருளும் திறம் கொண்ட நீ,ஏழையேன் இன்னல் தீர்த்து, அருளல் அரிதோ?வரு நாவலூரர் முதலோர் பரவும், இனிய புகழ் வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 16
எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்ஏறிட்டு ஒறுக்க, அந்தோ! எவ்விதம் உளம் சகித்துஉய்குவேன்? இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்,நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான்அனுபவித்தது இல்லை; நாடு எலாம் அறியும், இது கேட்பது ஏன்?நின் உளமும் நன்றாய் அறிந்து இருக்கும்;புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன்ஆனாலும், நினது பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து,எனது புன்மையை அகற்றி அருள்வாய்;மண்ணவர்கள், விண்ணவர்கள் நித்தமும் பரவும்,இசை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 17
தெரிந்தோ, அலாது, தெரியாமலோ, இவ் அடிமைசெய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்கணக்காக வையாது, நின் திரு உளம் இரங்கி, மிகவும்பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து,இனல் படாது, நல் வரம்அளித்துப், பாதுகாத்து அருள் செய்யவேண்டும்; அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி!புரந்தரன், போதன், மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்பதாம்புய மலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி!புராணி! திரி புவனேசுவரி!மருந்தினும் நயந்த சொல் பைங் கிளி! வராகி! எழில்வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 18
வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினுக்காவேண்டினும், மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும்,தீமை ஆம் வழியினில் செல்லாமலும்,விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும், வீண்வம்பு புரியாமலும், மிக்க பெரியோர்கள் சொலும்வார்த்தை தள்ளாமலும், வெகுளி அவை கொள்ளாமலும்,தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத், தமியேனுக்குஅருள் புரிந்து, சர்வ காலமும் எனைக் காத்துஅருள வேண்டினேன்; சலக் கயல்கள் விழியை அனையவஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 19
எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்,அவர்கள் கேட்டு, இவ் இன்னல் தீர்த்து, உள்ளத்து இரங்கி,நன்மைகள் செயவும், எள் அளவும் முடியாது; நின்உனதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின், உதவாதநுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை ஆகும்;அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து,முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும்நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து, சடுதியில்காத்து, ரட்சித்தது ஓர்ந்து,வனசம் நிகர் நின் பாதம் நம்பினேன், வந்து அருள் செய்;வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 20
கரு நீல வடிவமார் மாடு ஏறி, உத்தண்ட கன தண்டவெம் பாசமும், கைக் கொண்டு, சண்ட மா காலன் முன் எதிர்க்க,மார்க்கண்டன் வெகுண்டு நோக்க,இரு நீல கண்டன் எனும் நின் பதியை உள்ளத்தில்இன்பு கொண்டு, அருச்சனை செய, ஈசன், அவ் இலிங்கம் பிளப்ப,நின்னொடு தோன்றி, யமனைச் சூலத்தில் ஊன்றிப்பெரு நீல மலை என, நிலத்தில் அன்னவன் விழப்,பிறங்கு தாளால் உதைத்துப், பேசு முனி மைந்தனுக்கு அருள்செய்தது, உனது அரிய பேர் அருளின் வண்ணம் அலவோ?வரு நீல மட மாதர் விழி என்ன, மலர் வாவி வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 21
சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி,துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சிதொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்தவாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி!திரி சூலி! மங்கள விசாலி!மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! 22